Header Ads



ஆசிரிய நியமனமும், பெண் ஆசிரியைகளின் நிலையும்...!!

கல்விக் கல்லூரிகளில் ஆசிரிய பயிற்சி டிப்ளோமா பாடநெறியினைப் பூர்த்தி செய்த டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கும் போது கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த டிப்ளோமாதாரிகளுக்கு வெளி மாகாணங்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் பலமாக பிரயோகிக்கப்படுகின்ற இந்தவேளையில்,

இவ்விடயம் தொடர்பாக பல்வேறு அரசியல் பிரமுகர்களும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்துள்ள நிலையில் சிலரினால் காத்திரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவே அறிய முடிகின்றது. உண்மையில் இந்த விடயத்தினை அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினையாக கையாள வேண்டியது அவர்கள் மீதுள்ள கட்டாயக் கடமையாகவே பார்க்க வேண்டியுள்ளது.

ஏனெனில் கடந்த கால நிலைமைகளை எடுத்துப்பார்க்கும் போது கல்விக் கல்லூரிகளில் ஆசிரிய பயிற்சி டிப்ளோமா பாடநெறியினை பூர்த்தி செய்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த டிப்ளோமாதாரிகள் வெளி மாகாணங்களுக்கு நியமனம் வழங்கப்படுவது இதுவொன்றும் புதிதல்ல. இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் இருப்பார்களெனில் அவர்கள் 2014 ஆம் ஆண்டில் ஆசிரிய நியமனம் பெற்றவர்களே என்றால் அது மிகையல்ல. அன்றைய ஆட்சியாளர்களினதும் அதிகாரத்தில் இருந்தவர்களினதும் மெத்தனப் போக்கினாலேயே இன்று கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த அந்த ஆசிரியர்கள் வெளி மாகாணங்களில் சொல்லொண்ணாத் துயரத்திற்கு மத்தியில் மிகவும் சிரமத்துடன் கடமையாற்றி வருகின்றனர்.

2014 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்தவர்களுக்கு வெளி மாகாணங்களுக்கு நியமனம் வழங்கப்படும் போது அதற்கான காரணமாக அப்போது எமக்கு கூறப்பட்டிருந்த விடயம் யாதெனில் கிழக்கு மாகாணத்தில் தங்களை நியமிப்பதற்கு போதிய ஆளணி வெற்றிடம் இல்லையென்பது. எனினும் 2015 ஆம் ஆண்டு நியமனம் வழங்கும் போது மாகாணத்திற்குள்ளேயே நியமனம் வழங்கப்பட்டது. அதற்குள் ஆளணி வெற்றிடத்தினை எங்கிருந்து ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பது பாதிக்கப்பட்ட எங்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது. 

இந்நிலையிலேயே மறுபடியும் தற்போது கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த டிப்ளோமாதாரிகள் வெளி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தனைக்கும் கிழக்கு மாகாணத்திற்குள் இன்னும் 5021 ஆசிரிய ஆளணி வெற்றிடம் காணப்படுவதாக கிழக்கு மாகாண முதல்வர் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறியக் கூடியதாயுள்ளது. அப்படியென்றால் 2014 ஆம் ஆண்டு நியமனம் வழங்கும் போது ஆளணி வெற்றிடம் இல்லையென கூறப்பட்டு இந்த ஆசிரியர்கள் வெளி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளனரா? அல்லது வேண்டுமென்றே பழிவாங்கப்பட்டுள்ளார்களா? இதற்கு அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் துணை போயுள்ளனரா? என்ற பலத்த சந்தேகம் எம் மத்தியில் ஏற்படுகின்றது. 

2014 ஆம் ஆண்டு நியமனம் பெற்றது முதல் 2 ½ வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்று அந்த ஆசிரியர்களின் நிலைமை மிகவும் கவலைக்குரியதே. அதிலும் அதிகமானவர்கள் பெண் ஆசிரியைகளே. வெளி மாகாணத்தில் கடமையாற்றும் இவர்களை மணமுடிக்க எவரும் தயாரில்லை. அப்படியே மணமுடித்தாலும் குடும்ப வாழ்வில் பல்வேறு பிரச்சினைகள் இயற்கை உபாதைகளுக்கு மத்தியில் நீண்ட தூரம் பஸ் பிரயாணம் மேற்கொண்டு  கடமைக்கு செல்கின்றனர். நானறிந்த வகையில் 7 மாத கர்ப்பிணி ஆசிரியை ஒருவருக்கு கர்ப்ப காலத்தின் போது  அவரது நிரந்தர வசிப்பிடத்திற்கு அண்மித்த பிரதேசத்திற்கு வழங்கப்படும் 3 மாத தற்காலிக இணைப்பு கூட கிடைக்காத நிலையில் பிள்ளைப் பேறு வரையிலும் தொடர்ந்தும் பஸ்ஸில் பிரயாணித்த ஆசிரியைகளும் இவர்களில் உள்ளனர். பிள்ளைப்பேறின் பின்னர் பிள்ளையினையும் கவனிக்க முடியாமல் கடமையிலும் கவனத்தினை செலுத்த முடியாமல் உடல், உள ரீதியாக அவர்கள் படுகின்ற துன்பங்களை வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை. 

இவர்களது நியமனக் கடிதங்களில் கூறப்பட்டுள்ளவாறு 5 வருடங்கள் வெளி மாகாணங்களில் கடமையாற்றிய பின்னர் தனது சொந்த மாகாணத்திற்குள் இவர்கள்  இணைத்துக் கொள்ளப்படுவார்களா என்றால் அதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஒரு தரப்பினர் தொடர்ந்தும் சொகுசான இடங்களில் கடமையாற்றிட மறு தரப்பினரோ தொடர்ந்தும் அதி கஷ்டப் பிரதேசங்களில் சிரமப்படுகின்றனர்.

எனவே, தற்போது வெளி மாகாணங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான நியமனம் மாகாணத்திற்குள்ளேயே வழங்கப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கின்ற இந்த வேளையில் 2014 ஆம் ஆண்டில் தென், மேல், ஊவா, சப்ரகமுவ போன்ற மாகாணங்களில் நியமனம் கிடைக்கப்பெற்று அநீதிக்குள்ளான கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகளை மீண்டும் கிழக்கு மாகாணத்திற்குள் உள்ளீர்ப்புச் செய்ய அரசியல் பேதங்களை மறந்து அரசியல் தலைவர்கள் உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கோரிக்கை விடுகின்றோம். 
எமது அரசியல் தலைமைகள் ஒருபோதும் எட்ட முடியாத கோரிக்கைகளை வைத்து அரசியல் செய்வதை விடுத்து எமது சமூக பெண்கள் நேரடியாகவே பாதிக்கப்பட்டுள்ள இது போன்ற அடிப்படையான பிரச்சினைகளை கையிலெடுத்து தீர்வினைப் பெற்றுக் கொடுத்தால் உண்மையாகவே ஒரு சமூகம் நன்மையடையும். அவர்களது பிரார்த்தனைகளிலும் உங்களை சேர்த்துக் கொள்வார்கள்.

குறிப்பு: இப்பிரச்சினையினால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரமின்றி சமூக அக்கறையுள்ள ஆர்வளர்கள் இதனை உரிய தரப்பினரிடம் எடுத்துச் செல்லவும், சமூக வலைத்தளங்களில் அதிகமதிகம் பகிர்ந்து அதிகாரத்திலுள்ளவர்களுக்கு அழுத்தத்தினை பிரயோகிக்குமாறும் தயவுடன் கோருகின்றோம். ' இது வெறுமனே படித்து விட்டு கடந்து செல்வதற்கல்ல'

'அநீதமிழைக்கப்பட்டவர்களைப் பயந்து கொள்ளுங்கள்'
ஏனெனில், நாங்கள், பாதிக்கப்பட்டவர்கள்.

2 comments:

  1. ஆசிரியைகள் சொந்த மாகாணத்தில் மாவட்டத்தில் கடமையாற்றுவதற்கு கட்டாயம் பாகுபாடற்ற முறையில் சகன இனத்தவர்களுக்கும் கட்டாயம் வசதி செய்து கொடுக்க வேண்டும் .இது சம்மந்தப்பட்டவர்களின் கட்டாய கடமை இது சம்மந்தமாக அல்லாஹ் விசாரித்தே ஆகுவான்,எல்லா ஆசிரியர்களும் சொந்த மாகாத்தில் கடாமையாற்றி வெற்றிடங்களை நிறப்பிவிட்டால் எதிர்காலத்தில் வரக்கூடி காலங்களில் சம்மந்தப்பட்ட மாகாணங்களில் கல்வியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறுபவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதில் இழுபறி ஏற்பட நிறைய வாய்ப்பு உள்ளதையும் இங்கு கவானத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

    ReplyDelete
  2. இந்த நாட்டின் அரசாங்க சேவையில் தான் இந்த முஸ்லி்ம் பெண்கள் ஆசிரியைகளின் நியமனங்களும் அடங்கும். அரச சேவையில் இணையும் யாரும் ஆணாகவோ பெண்ணாகவோ இருந்தபோதிலும் அவர்கள் நாட்டில் எந்த பகுதியில் நியமனம் வழங்கப்பட்டாலும் அங்கு சென்று பணியாற்ற வேண்டும் என்பது அரசவிதி அதில் யாருக்கும் வேறுபாடு இல்லை. அப்படியானால் ஏன் இந்த பாகுபாடு. தனிநபர்களின் நிலைமைகளைப் பொறுத்து அவர்களின் நிலைமைகளை அதிகாரிகள் கவனத்தில் எடுக்கக்கூடும். இருந்தபோதிலும் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்பதைக் கருத்தில் கொண்டு செயற்படவேண்டும் என பொதுமக்கள் சார்பாக வேண்டிக் கொள்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.