Header Ads



'இரட்டை பிரஜாவுரிமையை கைவிட்டால், தேர்தல்களின் போட்டியிட முடியும்'

இரட்டை பிரஜாவுரிமையை கைவிட்டால் உள்நாட்டுத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கன சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்ப தாக புலம்பெயர் சமூகத்திற்கு  உள்விவகார அமைச்சர் எஸ்.பி. நாவின்ன அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொண்ட போதிலும் தற்போது அந்தப் பிரச்சினைகளுக்கு புதிய அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையிலிருந்து புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று வாழ்ந்துவரும் இலங்கை நாட்டவர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமையை வழங்கும் வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றது.

கொழும்பிலுள்ள உள்விவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றதோடு இதில் 800 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.

“இலங்கையிலிருந்து வெளியேறி வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளவர்களுக்கு இந்நாட்டு பிரஜாவுரிமை அல்லது இரட்டைப் பிரஜாவுரிமையை வழங்கும் பணியை ஆரம்பித்துள்ளோம். விசேடமாக இந்த நாட்டில் பிறந்தவர்கள் பலர் வெளிநாட்டிற்குச் சென்று 30, 40 வருடங்களாக உள்ளனர். அவர்களுடைய பிள்ளைகளுக்கு இந்த நாட்டை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் வழங்க ப்பட்டிருக்கவில்லை. அதேபோல சில சந்தர்ப்பங்களில் இங்கு வந்து சில மாதங்களிற்கு தங்கியிருந்து மீண்டும் நாடு திரும்புவதே வழக்கமாக இருந்தது. இப்படிப்பட்ட பல பிரச்சினைகள் இருந்ததனால் பிறந்த நாட்டிலேயே உரிமைகளை வழங்கும் முக்கி யத்துவத்தை இந்த அரசாங்கம் நன்கு புரிந்துகொண்டுள்ளது.

அனைவருக்கும் அதிகளவிலான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னர் இங்கு வந்தால் மாதத்திற்குள் சென்றுவிட வேண்டும், சொந்தபந்தங்களைப் பார்க்க முடியாது, நண்பர்களை சந்திக்க முடியாது போன்ற பலவித பிரச்சினைகள் இருந்தன. இன்று அந்த அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்ட பின்னர் கால வரையறை இன்றி என்றும் இங்கு இருக்க முடியும். சொத்துக்களை வைத்துக்கொள்ளும் உரிமையும் உள்ளது. 19ஆவது திருத்தத்தினால் ஒரேயொரு பிரச்சினையை சந்திக்க நேரிடுகின்றது. இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர் இங்கு வந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது. எனினும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னர் இரட்டை பிரஜாவுரிமையை இரத்து செய்தால் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். எனவே தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் அந்தந்த நாடுகளிலுள்ள தமது பிரஜாவுரிமையை இரத்து செய்துவிட்டு வந்தால் அதற்கான சந்தர்ப்பமும் அளிக்கப்படும்” என்றார்.

No comments

Powered by Blogger.