Header Ads



ஜனாதிபதியின் குற்றச்சாட்டு தொடர்பில், பிரதமர் பதிலளிக்க வேண்டும் - விமல் சவால்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்ட கருத்து தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது நிலைப்பாட்டை நாட்டுக்கு கூறவேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச சவால் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி நேற்று வெளியிட்ட கருத்துக்கு அமைய தற்போது நாட்டை ஆட்சி செய்வது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி நேற்று வெளியிட்ட கருத்து தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணியின் கருத்து வெளியிட இன்று -13 நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் விமல் வீரவங்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பேச்சில் மட்டுமல்ல செயலில் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும்.

நாட்டின் முதல் குடிமகனான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, குற்றப் புலனாய்வு திணைக்களம், நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் இலஞ்ச ஆணைக்குழு என்பன அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுதாக முதல் முறையாக கூறியுள்ளார்.

அரச நிறுவனம் ஒன்றை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய பயன்படுத்துவது மிகப் பெரிய தவறாக பயன்படுத்திய குற்றம்.

அடிப்படை மனித உரிமை மற்றும் ஜனநாயகம் குறித்து உலகில் இல்லாதவற்றை கூறி ஆட்சியை கைப்பற்றியவர்களின் பிரதானியான ஜனாதிபதியே இந்த நிறுவனங்கள் அரசியல் நோக்கங்களாக பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளார்.

தமது எதிரானவர்கள் வெளியில் இருந்தாலும் அரசாங்கத்திற்குள் இருந்தாலும் அந்த நிறுவனங்களை தமது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி அடக்க முயற்சிக்கின்றனர்.

ஜனாதிபதி நேற்று வெளியிட்ட கருத்து மூலம் தற்போது யார் நாட்டை ஆட்சி செய்கின்றார்கள் என்றே கேள்வி எழுந்துள்ளது.

ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை குறிப்பிடாவிட்டாலும் பிரதமரை இலக்கு வைத்தே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதற்கு பதிலளிக்க வேண்டும் என தாம் சவால் விடுப்பதாகவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.