Header Ads



# எழுத்துக்கள்# *விமர்சனங்கள்* அமானிதங்களாகும்..!!

-Inamullah Masihudeen-

ஒரு மனிதர் அல்லது கூட்டத்தினர் மீதுள்ள அன்போ அல்லது வெறுப்போ அவர்களுக்கு நீதி வழங்குவதிலிருந்து ஒரு விசுவாசியை தடுக்க முடியாது, ஒரு சாராருக்கு ஆதரவாகவும், மற்றுமொரு சாராருக்கு எதிராகவும் எழுதுவதும், பேசுவதும் கூட அந்த ஆன்மீக அளவுகோள்களின் கணிப்பீடுகளை விஞ்சிவிடக் கூடாது.

அவ்வாறான விமர்சனங்களில் போட்டியும் பொறாமையும்,காழ்ப்புணர்வும், சில வேளைகளில் புகழ் தேடலும், தாழ்வு மனப்பான்மைகளும், மனநிலைக் கோளாறுகளும், கருத்தியல் வன்முறையும் குழுச் சண்டைகளும் மிகைத்து நிற்பதனை என்னால் உணர முடிகின்றது.

இஸ்லாமிய சகோதரத்துவ வாஞ்சை பரஸ்பர அன்பு இல்லாது ஒருவரை அடுத்தவர் வழிகேடாக அடையாளப்படுத்த மேற்கொள்ளப்படுகின்ற பிரயத்தனங்கள் அடிப்படை இஸ்லாமிய ஒழுக்கவியல் பண்பாட்டு விழுமியங்களை மீறுவதாக எனக்குத் தெரிகின்றது.

பரஸ்பரம் அன்பு பாராட்டாத ஒரு சமூகத்தில் வெறும் கொள்கைகளும், கோட்பாடுகளும், கருத்தாடல்களும் முரண்பாடுகளையே தோற்றுவிக்கின்றன, அங்கு மதத்திற்கு மதம் பிடிக்கின்றது, வெறிபிடிக்கின்றது, அங்கு புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, சமயோசிதம், உணர்வுகளை மதித்தல் மன்னித்தல், மறத்தல் போன்ற அடிப்படை ஒழுக்க விழுமியங்கள் உயிர்வாழ்வதில்லை.

சிலரது கருத்துப் பகிர்வுகள் மிகவும் சிறு பிள்ளைத் தனமாகவும், அதிகப் பிரசங்கித் தனமான பிரயோகங்களைக் கொண்டதாகவும் எனக்குத் தெரிகின்றது

குறிப்பாக, இலத்திரனியல் அச்சு மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாடு சத்தியம் அசத்தியம் என்ற வரை முறைகளை தாண்டும் பொழுது எமது பணியும் உழைப்பும், தொழிலும் ஹலால் ஹாராம் என்ற வரைமுறைகளுக்கு உற்பட்டவையா அவை எமது கொள்கை கோட்பாடுகளை ஆன்மீக பண்பாட்டு பக்குவங்களை பிரதிபலிக்கின்றனவா என்பதனை நாம் மீள் பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.

மிகைப்படுத்தல்,அளவுகடந்த வர்ணனைகள், அளவுகடந்த வஞ்சனைகள், கூட அநீதிகளாகும், கண்ணுக்குக் கண், காதுக்குக் காது, மூக்கிற்கு மூக்கு, உடலிற்கு உடல் என்ற ஒரு கோட்பாடு இஸ்லாத்தில் இருக்கின்றது, ஒரு சிறிய தவறை எல்லை மீறி பூதாகரமாக்குவது, ஒரு பெரிய தவறை அல்லது சமூகத் துரோகத்தை நியாயப் படுத்துவது அல்லது சிறிய விவகாரமாக பேசுவது எழுதுவது எல்லாம் ஆநீதிகளாகும்.

“நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், “குர்ஆனிலிருந்து நீங்கள் எதை ஓதினாலும், நீங்கள் எந்தக் காரியத்தை செய்தாலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனுக்குத் (தெரியாமல்) மறைத்து விடுவதில்லை. இதை விடச் சிறயதாயினும் அல்லது பெரிதாயினும் விளக்கமான அவன் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை.”

No comments

Powered by Blogger.