October 16, 2016

கிழக்கு மாகாணத்துக்கு தேசிய சூரா சபை விஜயம் - பேசப்பட்ட முக்கிய விடயங்கள்


தேசிய சூரா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்.

விஜயத்தின்போது கல்குடா மஜ்லிஸ் அஷ்ஷுரா, ஏறாவூர் பள்ளிவாசல்களது சம்மேளனம், காத்தான்குடி பள்ளிவாயில்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களது சம்மேளனம், அம்பாறை மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோருடனான சந்திப்புக்கள் இடம்பெற்றன. அங்கு கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

தேசிய சூரா சபையின் நோக்கங்கள், எதிர்கால திட்டங்கள் என்பன பற்றி கிழக்கு மாகாண சிவில் அமைப்புகளுக்கு விளக்கமளிப்பது, பிராந்திய ரீதியாக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரதானமான சவால்களை அந்த மக்களிடமிருந்தே கேட்டறிந்து கொள்வது, அதற்கான தீர்வுகளை காணும் மூலோபாயத் திட்டங்களைப் பற்றி ஆராய்வது, முஸ்லிம்கள் எப்பிரதேசத்தில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரே உடலின் உறுப்புக்களைப் போன்றவர்கள் என்ற இஸ்லாமியக் கருத்தைப் பலப்படுத்துவது என்பன  இந்த விஜயத்துக்கான பிரதான நோக்கங்களாக அமைந்திருந்தன.நான்கு இடங்களில் இடம்பெற்ற கூட்டங்களுக்கு சமூகத்தின் முக்கியமான பொறுப்புக்களை வகிக்கும் பல தரப்பட்டவர்களும் வருகை தந்திருந்ததுடன் அவ்வப்பிரதேசங்களில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பான பலரும் கருத்துக்களை முன்வைப்பதற்காக சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்டன. கோரிக்கைகள் முன்மொழிவுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுவரும் பிராந்திய முயற்சிகள் என்பனவற்றை உள்ளடக்கிய ஆவணங்களும்  தேசிய சூரா சபைக்கு வழங்கப்பட்டன. வருகை தந்திருந்தவர்கள் மிகவும் உற்சாகவும் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமையை அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படலாகாது என்ற கருத்தை பலரும் வலியுறுத்தினர். முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் இழக்கப்பட்டிருப்பது பிரதான பிரச்சினைகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான உறவு மீளவும் கட்டியெழுப்பப்படுவதன் அவசியம் உள்ளது என்றும் பரஸ்பர நம்பிக்கையும் புரிந்துணர்வும் வளர்க்கப்பட வேண்டும் என்றும் பேசப்பட்டது. நிருவாக சேவைக்கு முஸ்லிம்கள் உள்வாங்கப்படுவது குறைவாக இருப்பதால் அத்துறைக்கான முஸ்லிம் பிரதிநிதிகளது தொகையை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை சூரா சபை மேற்கொள்ள வேண்டும். இளைஞர்களது ஒழுக்க, கல்வி வாழ்வு மிகவும் அடிமட்டத்தில் இருப்பதால் அதனை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அர­சியல் தலை­மைகள் சமூக மட்டப் பிரச்­சி­னை­களை விளங்கிக் கொள்­வ­திலும் தீர்வு காண்­ப­திலும் விடும் தவ­றுகள் களை­யப்­பட்டு அவை மென்­மேலும் பலப்ப­டுத்­தப்பட வேண்டும். அர­சி­யல்­வா­தி­க­ளுக்­குள்ள பலத்­தை­விட சிவில் அமைப்­­புக்­க­­ளுக்­கான பலம் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். பாட­சா­லை­களில் உள்­ள ஆசி­ரியர் பற்­றாக்­கு­றைக்குத் தீர்­வுகள் காணப்­பட வேண்டும். மீடி­யாக்கள் சமூக மேம்­பாட்­டுக்கு ஆற்­ற­வேண்­டிய பணிகள் பல இருக்­கின்­றன. ஆனால், அவை எதிர்­பார்த்த பணி­களில் ஈடு­ப­டு­வது குறைவு போன்ற பல்துறை சார்ந்த கருத்துக்களும் ஆதங்கங்களும் அங்கு முன்வைக்கப்பட்டன. தேசிய சூரா சபை சமூகத்தில் ஒரு பலமான அமைப்பாக மாறவேண்டும் என்ற கருத்தும் அங்கு தெரிவிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் அமைப்புக்களது பிரதிநிதிகளுடனான சந்திப்பு மிகுந்த உற்சாகமூட்டுவதாகவும், கிழக்கு மாகாண முஸ்லிம்களது அபிலாஷைகளையும் தேவைகளையும், அபிப்பிராயங்களையும் நேரில் சென்று அறிந்துகொள்வதற்கான அருமையான சந்தர்ப்பமாக அது அமைந்ததாகவும் தேசிய சூரா சபை கருதுகிறது. முஸ்லிம் சமூகத்தின் மூன்றில் ஒரு பங்கினர் வாழும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமூகத்தின் கணிசமான அறிவுப் புலைமையாளர்களும், துறைசார் நிபுணர்களும் இருப்பது மகிழ்ச்சி தருகிறது என்றும் அந்த வளங்களை ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கும் முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கும் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான கூட்டிணைந்த திட்டங்கள் வகுக்கப்படுவதற்கான தேவை இருப்பதாகவும் தேசிய சூரா சபை கருதுகிறது.

இஸ்லாம் வலியுறுத்தும் 'ஷூரா' பொறிமுறையினூடாகவே இது சாத்தியப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில்தான் அல்லாஹ்வின் அருளும் நல்ல பல விளைவுகளும் கிடைக்கக் காரணமாக அமையும் என்றும் தேசிய சூரா சபை உறுதியாக நம்புகிறது. கிழக்கு மாகாண விஜயத்தின்போது அப்பிராந்திய மக்கள் சூராசபை உறுப்பினர்களை அன்பாக வரவேற்று உபசரித்தமைக்காகவும் நிகழ்ச்சிகளில் ஆர்வத்தோடு கலந்துகொண்டமைக்காகவும் உளமார்ந்த நன்றிகளை அது தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்தும் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ள அவர்களது ஒத்துழைப்பையும் நாடி நிற்கிறது.

தேசிய சூரா சபையின் ஊடகப் பிரிவு

0 கருத்துரைகள்:

Post a Comment