October 08, 2016

"இலங்கையில் புர்கா தடைக்கான, களச் சூழல் சிருஷ்டிக்கப்படலாம்"

-மொஹமட் பாதுஷா -

ஒருமுறை பிரித்தானிய ஆய்வாளர் ஒருவர், முஸ்லிம் முற்போக்குவாதி ஒருவரைப்  பார்த்துக் கேட்டார், “நீங்கள் ஏன், உங்களது பெண்களின் முகத்தையும் உடற்பகுதியையும், முற்றாக மறைக்கின்றீர்கள்? ஏன் அவர்களுடன் கைகுலுக்கிக் கொள்வதற்கோ கதைப்பதற்கோ ஏனைய ஆண்களுக்கு இடமளிப்பதில்லை?” என்று. அதற்கு பதிலளித்த அந்த முஸ்லிம் நபர், “நீங்கள் உங்களது பிரித்தானிய மகாராணியை நினைத்த மாத்திரத்தில் பார்க்க முடியுமா? முடிக்குரிய இளவரசியுடன் கைகுலுக்குவதற்கான அனுமதி உங்களுக்கு கிடைக்குமா?’ என்று கேட்டார். அதற்கு அந்த பிரித்தானியர், “இல்லை அதற்கான வாய்ப்பே இல்லை” என்றார். “ஏன் அதற்கென்ன காரணம்?” என்றார் முஸ்லிம் நபர். “அவர்கள் உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள். அவர்களைக் காண்பது  அரிதான வாய்ப்பாகும். அப்படிக் காணக்கிடைத்தாலும் அவர்கள், கையுறை போட்டுக் கொண்டே கைகுலுக்குவார்கள்” என்றார். அதற்குப் பதிலளித்த முஸ்லிம் நபர் சொன்னார், “நாங்களும் எங்களது வீட்டிலுள்ள பெண்களை, மகாராணியாகவும் இளவரசியாகவுமே பார்க்கின்றோம். அதனாலேயே, பிற ஆண்கள், அவர்களை முகத்துக்கு முகம் சந்திப்பதற்கான, கைகலுக்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை” என்றார்.

இலங்கையில் அபாயா அல்லது நிகாப் குறித்த கடுமையான விமர்சனங்கள், கடந்த நான்கு வருடங்களாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வகையான ஆடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொது பலசேனா போன்ற கடும்போக்கு இயக்கங்கள் கூறி வருகின்றன. அழகு  என்பது தங்களது உடம்பை மறைப்பதா?  வெளிக்காட்டுவதா? என்பதும், தாம் எவ்வாறு உடை அணிய வேண்டும் என்பதும் அவரவரது பிரச்சினை மட்டுமன்றி அடிப்படை உரிமையுமாகும். இதைப்பற்றி உணராமல் இனவாதிகள் காட்டுக் கூச்சல் போட்டு வருவதையும் காணமுடிகின்றது. இவ்விடத்தில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அபாயா, புர்கா, நிகாப் என்ற மூன்று விதமான ஆடைகள் தொடர்பில், தமிழ், சிங்கள மக்களிடையே மட்டுமன்றி, முஸ்லிம்கள் சிலரிடையேயும் அடிப்படை விளக்கம் குறைவாகவே உள்ளது. எனவே, அபாயா என்பது முகத்தை மூடாமல் உடம்பின் ஏனைய அங்கங்களை மூடுகின்ற ஆடையாகும். புர்கா என்பது, கண் பகுதியும் முற்றாக மூடப்பட்ட ஆடை என்பதுடன், நிகாப் என்பது கண்மட்டும் தெரிகின்ற விதத்திலமைந்த ஆடை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அபாயா தொடர்பில் பெரிய சர்ச்சைகள் எதுவுமில்லை. புர்கா, நிகாப் குறித்தே விமர்சனங்கள் எழுந்துள்ளன.

90களின் பிற்பகுதி வரை, இலங்கையில் முஸ்லிம்களிடையே இவ்வகை ஆடைகளின் பாவனை என்பது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. ஆனால், அதற்குப் பின்னர் அதிகரித்த மார்க்க போதனை அமைப்புக்களும் பிரசார வேலைத்திட்டங்களும், இவ்வகை ஆடைகளின் பாவனையை அதிகரிக்கச் செய்திருக்கின்றது எனலாம். முஸ்லிம் பெண்கள், தமது மார்க்கக் கட்டளையின் அடிப்படையிலேயே இவ்வகை ஆடைகளை அணிகின்றனர். அடிப்படைக் காரணம் மதம் சார்ந்தது என்றாலும், வாழ்வியல்சார் துணைக்காரணங்களும் சிலருக்கு இருக்கலாம். எது எவ்வாறாயினும், தம்முடைய ஆடைகளை தீர்மானிப்பது அவரவருடைய தனிப்பட்ட தீர்மானமாகும். அதனால், பிறரது சுதந்திரம் பாதிக்கப்பட்டாலொழிய அதனை தடைபோடுவதற்கு, தார்மீக உரிமை யாருக்கும் கிடையாது. நிலைமை இவ்வாறிருக்க, இலங்கையில் இவ்வகை ஆடைகளை தடைசெய்ய வேண்டுமென்று முன்னமே இனவாதிகள் மாத்திரமே கூச்சல்போட்டு வந்த நிலையில், இப்போது சட்ட ரீதியிலான முறையில் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதேவேளை, ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர், “நிகாப் அணிவது முஸ்லிம்களுக்கு கட்டாயமானது என்ற முன்னைய நிலைப்பாட்டிலேயே உலமா சபை இருக்கின்றது. நிகாபை தடை செய்ய முற்பட்டால், அதற்கெதிராக 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும் போராட வேண்டும்” என்று கூறியுள்ளமையும் அவதானிக்கத்தக்கது. பாதுகாப்பு தரப்பினர், மறைமுகமாக இதைத் தடைசெய்வதற்கு திட்டங்களை தீட்டுகின்றனர் என்பதை அறிந்தவராக உலமா சபை தலைவர் இக்கருத்தை முன்வைத்திருக்கின்றாரோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியாக நெருக்குவாரங்கள் ஏற்படுகின்ற போது, முஸ்லிம் தலைவர்கள் பிழை செய்கின்ற போது “இது நம்முடைய  வேலையல்ல” என்பது போல் உலமா சபை ஒதுங்கியிருந்தாலும், குறிப்பிட்ட விடயங்களுக்குள் மட்டும் தமது செயற்பாட்டை மட்டுப்படுத்தியுள்ளமைக்காக அவ்வப்போது விமர்சிக்கப்பட்டாலும், அந்தச் சபையின் தலைவரது நிகாப் பற்றிய கருத்தை ஒரு முன்னெச்சரிக்கையாக கொண்டு செயற்பட வேண்டுமென தோன்றுகின்றது. அதேநேரம் “மாற்றுக் கருத்துக்களையும் மதிக்க வேண்டும்” என்ற அவருடைய கருத்தையும் நினைவிற்கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் இது விடயத்தில் மிக அவதானமாக செயற்பட வேண்டியுள்ளது. இலங்கை என்பது ஒரு முஸ்லிம் நாடல்ல. பௌத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பல்லினப் பரம்பலுள்ள நாடாகும். இங்கு சில தடைகள், தடங்கல்கள் இருந்தாலும் கணிசமான மதச் சுதந்திரம், முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அபாயா அணிவதில் எப்பிரச்சினையும் இல்லை என்றே கடும்போக்காளர்களும் கூறி வருகின்றனர். முகத்தை முற்றாக மறைத்து (புர்கா, நிகாப்) அணிவதே சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. யார் சொல்கின்றார்கள் என்பதற்காகவும் விட்டுக் கொடுக்க முடியாத ஒரு விடயம்தான் மார்க்கமாகும். என்றாலும், அரசியல், சமூக சூழ்நிலைகளை விளங்கிக்கொண்டு, ஏனைய சமூகங்களுடனான இருப்பை கௌரவப்படுத்தும் விதத்தில், புர்கா, நிகாப் நடைமுறைகளை கடைப்பிடிப்பது நல்லதாகும். குறிப்பாக, ஒரு பொலிஸ் நிலையத்தில், பரீட்சையில் அல்லது வேறு ஏதேனும் ஆள்அடையாளத்தை நிரூபிக்க வேண்டிய ஒரு இடத்தில் முஸ்லிம் பெண்கள், ஒரு பெண் உத்தியோகத்தரிடம் தமது முகத்தை காண்பிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்க வேண்டும்.

அதாவது, இலங்கையில் முகத்தை மூடிய புர்கா அணிந்து கொண்டு, இலங்கையில் எவ்விதமான பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான காரியங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அபாயா, புர்கா, நிகாப் அணிந்த யாரொருவரும் வன்முறைகள், தாக்குதல்களில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்படவில்லை. இரண்டொரு வங்கிக் கொள்ளைகள் மட்டுமே இவ்வாறான ஆடை அணிந்த நபர்களால் மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்களும் முஸ்லிம்கள் அல்ல என்பது தெரியவந்துள்ளது. எனவே, சர்வதேச அச்சம் தொற்றியதன் காரணமாக, ஒரு சமூகத்தின் மத நடைமுறையை, அம்மக்களின் ஆடைத்தெரிவை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதில்லை. மறுபுறத்தில், உடனடியாக அரசாங்கம் அவ்வாறான ஒரு தடையை விதிக்கும் சாத்தியமும் இல்லை என்றாலும்... செயற்கையாக அவ்வாறான ஒரு சூழல் தோற்றுவிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்திருக்கின்றது. இனவாத சக்திகளும், கடும்போக்கு இயக்கங்களும் இதற்கான சதித்திட்டங்களை மேற்கொள்ளக் கூடும். யாராவது ஒருவரை புர்கா ஆடையுடன் சட்டவிரோத, பாதுகாப்புக்கு குந்தகமான செயற்பாடுகளில் ஈடுபடவைத்து, அப்பழியை முஸ்லிம்கள் மீது போட்டு, புர்கா தடைக்கான களச்சூழலை சிருஷ்டிக்கப்படலாம் என்பதை, அரசாங்கமும் முஸ்லிம்களும் நினைவிற் கொள்ள வேண்டும்.

2 கருத்துரைகள்:

புர்கா தடைக்கான களச்சூழலை சிருஷ்டிக்கப்படலாம்/// நயவஞ்சக அமைப்புகள் இருக்கும் வரையில் கூடிய சீக்கிரம் இது நடக்கும்...

I'm reporting a reply I posted on previous news item on the same subject.

I see it as a Hippocratic in calling the veil as wajib and then saying we respect the alternative stands also. If veil is wajib, those who doesn't do it are in Sin, and are in rejection of divine guidance - Isn't it hypocritical to calling others to join hand just to get their interests protected. would they join hands with others on a matter which they don't in agreement with.

Also, Muslim women are facing pathetic situations, just because our community as a whole failed miserably to develop our own core intellectuals and professionals. One good example was that a veiled Muslim pregnant women had to undergo physical abdominal examination by male gynecologist in front of a team of interns. this happened last week and does happen on a continuing basis. The women is not the one to blame, it's the Muslim society as a whole and sin is upon us.

My opinion is that the very 1st layer of veil should be on the hearts and minds of both men and women. without that no point of declaring any veil as Wajib. Our Ulema should focus more on developing that.

Also, having well qualified gynecologist is a fald kifaya on all of us, I wonder what ACJU has done to accomplish that. studying in a Sri Lankan university with a veil is almost the impossible thing to do and reaching upto a level of specializing in gynecology is not at all possible. Sri Lanka is a country where majority of the gynecologist are male and women (even non Muslim) are literally held out from qualifying as gynecologists at the final one to one evaluation stage, which is done by senior doctors/professors who are mostly male.

Also, having a veil also comes with another rule, which a women is not suppose to travel without a Mahram. How come a girl in veil suppose to accomplish this. I really wonder why our society is so forward to levy undue restrictions and shed crocodile tears when the real issues comes.

I think my comment is fully justifiable and does not violate any of the Jaffna Muslims rules to deny publishing.

Post a Comment