October 24, 2016

முஸ்லிம்களின் முகத்தில், கரியை பூசிய நல்லாட்சி - ஹரீஸ் கொதிப்பு

(அகமட் எஸ் முகைதீன், ஹாசிப் யாஸீன்)

பலஸ்தீனத்தில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து இஸ்ரேலை வெளியேற வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு நடுநிலை வகித்ததன் மூலம்  இந்த நாட்டில் நல்லாட்சி மலர்வதற்கு வழிவகுத்த முஸ்லிம் சமூகத்தின் முகத்தில் கரியை பூசியுள்ளது என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்ததுடன் இந்நாட்டின் முஸ்லிம் பிரதி அமைச்சர் என்ற வகையில் இந்த அரசு நடந்து கொண்ட விதம் குறித்து மிகுந்த மனவேதனையடைவதாகவும் தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (23) சனிக்கிழமை இடம்பெற்றது. வட மாகாண சபை உறுப்பினர் எச்.எம்.றயீஸின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,

நாட்டில் நல்லாட்சி நடக்கின்றது என்று நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. எமது சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பாக நாங்கள் என்றும் விழிப்பாக இருக்க வேண்டும்.

பலஸ்தீன் முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக நடத்தப்படும் இஸ்ரேலிய யூத நசாராக்களின் அக்கிரமங்களையும் அட்டூழியங்களையும் ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. சிறுவர்கள், பெண்கள் என்ற பாகுபாடு இன்றி அம்மக்கள் அநியாயமாக படுகொலை செய்யப்படுகின்றனர். அம்மக்களை பாதுகாக்கின்ற பொறுப்;பு அனைவருக்கும் இருக்கின்றது. இம்மக்களின் உண்மை நிலை அறிந்து இலங்கை அரசு செயற்பட்டிருக்க வேண்டும்.

நாட்டில் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்ற இத்தருவாயில் உன்னிப்பாக இருந்து இந்த சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுகின்ற, உரிமைகளை வென்றெடுக்கின்ற கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கின்றது. இதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் தேசிய இயக்கத்தை இன்னும் பலப்படுத்த வேண்டிய பொறுப்பு முஸ்லிம் சமூகத்துக்கு உள்ளது.

மர்ஹூம் நூர்த்தீன் மஸூரின் மரணத்தின் பின்னர் வன்னி மாவட்ட அரசியல் அதிகாரத்தை வைத்திருப்பவர்களினால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக எருக்கலம்பிட்டி காணப்படுகிறது.

மர்ஹூம் நூர்த்தீன் மஸூர் சுயநலமற்று சமூக நோக்குடன் செயற்பட்டதன் காரணமாக வன்னி மாவட்டத்தில்  இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் பெறக்கூடியதாக இருந்தது. இந்த கடந்த கால வரலாற்றை மறந்து தங்களது அரசியல் இருப்புக்களை தக்கவைத்து கொள்வதற்காக சமூக விரோத நடவடிக்கைகளை இன்று தங்களை தாங்களே தலைவர்களாக கூறுகின்றவர்கள் அரங்கேற்றி வருகின்றனர்.

மாகாண சபை உறுப்பினர் றயீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் ரவுப் ஹக்கீமிடம் வேண்டிக் கொண்டதற்கு அமைவாக நகர திட்டமிடல் அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் அங்குராப்பணம் செய்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் எதிர்வரும் ஆண்டு எருக்கலம்பிட்டி வரலாற்றில் முக்கிய ஆண்டாக மாறும் அளவிற்கு அபிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்படும்.

இந்நாட்டில் புதிய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட இருக்கின்றது. இதன் மூலம் பாராளுமன்ற தேர்தல் முறை மாற்றப்படவுள்ளது. அவ்வாறு மாற்றப்பட்டு தொகுதிவாரி தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படுகின்ற போது மன்னார் மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையேனும் தெரிவு செய்வதற்கான வாய்ப்பினை இல்லாமல் செய்வதற்கான சதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைச்சர் இது விடயத்தில் பார்வையாளராக இருக்கின்றார். இவர்கள் தங்களது பாராளுமன்ற இருப்பை தக்கவைப்பதற்காக மாற்று அரசியல் வியூகங்களை வகுத்து வேறு பிரதேசத்தின் பிரதிநிதியாக பாராளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்தும் அரசியல் நகர்வுகளை மேற்கொள்கின்றனரே தவிர வன்னி முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் பற்றி அக்கறையில்லாமல் இருக்கின்றார்கள்.

வன்னி மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் கருதி இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மாத்திரமே அரசியல் அமைப்புச் சபையில் போராடிக் கொண்டிருக்கின்றார். முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தும் செயற்பாட்டினையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்து வருகின்றது. ஆனால் இவற்றை மலினப்படுத்துகின்ற வகையில் சில சகோதரர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

இளைஞர்களின் விளையாட்டுத்துறையை ஊக்குவித்து அவர்களின் திறமையை வளர்ப்பதற்கு ஏதுவாக  எருக்கலம்பிடடியில் ஒரு மைதானம் இல்லாத குறை பல வருடங்களாக இருக்கின்றது. தற்போது இம்மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்காக நாம் நிதிகளை ஒதுக்கீடு செய்து நூர்தீன் மஸூரின் நாமம் தாங்கிய பார்வையாளர் அரங்கு உள்ளிட்ட சகல வசதிகளும் கொண்ட ஒரு மைதானமாக அமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை இன்று அங்குரார்ப்பணம் செய்து வைத்திருக்கின்றோம்.

இந்நிலையில் இத்தனை காலமும் மயக்கத்திலிருந்து தெளிந்தவர்கள் போல் சிலர் நாங்களும் இம்மைதானத்தை அபிவிருத்தி செய்வோம் என்று வெட்கமில்லாமல் பேசுகின்றனர் எனவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

4 கருத்துரைகள்:

I think iwarum arasaangathukku kariya poosuwaarnu

WEERA WASANAM PESUWATHIL SLMC MEMBERS HERO.ALL OF YOU CHEATING POLITICIANS.EASTETN PROVINCE PEOPLE PLS THINK ABOUT IT.THEY ARE ACTING LIKE MUSLIM???

Maithri arasangam nadanthathupola Therthal kaalaththil Muslimkalum nadanthukolvathe sariyana pathiladiyakum

Lets react at the time of election when they need our votes for victory.

Post a Comment