Header Ads



"ஒரு ஆலிம் தன் சமூகத்தில், தந்தையின் ஸ்தானத்திலிருந்து செயல்பட கடமைப்பட்டவர்" - எம்.ஐ. அமீர் நளிமி

- யூ. கே. காலித்தீன் -

நாம் ஒவ்வொருவோரும் எழுத்தரிவை வளர்க்க வேண்டும்  இஸ்லாத்தில் நடைபெற்ற முதல் போரான பத்ருப் போரில் எதிர் அணியிலிருந்து எழுபது வீரர்களை நபி (ஸல்) அவர்கள் கைது செய்தார்கள். அக்கைதிகளில்  வசதி படைத்தோருக்கு ரொக்கப்பிணை வழங்கியதோடு வசதியற்ற கைதிகளுக்கு கற்பித்தலை பிணையாக ஏற்படுத்திய புதுமை வரலாறு பதிந்து வைத்திருக்கின்றது என்று  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்ஷெய்க். எம்.ஐ. அமீர் நளிமி தெரிவித்தார்.

மக்காவில் வசித்தோர் எழுத்தறிவுடையோராகவும், மதினாவில் வசித்தோர் எழுத்துத் துறையில் பலவீனர்களாகவும் காணப்பட்டனர். அதனால் யுத்தக்கைதிகளில் ஒருவருக்கு பத்து சிறார்கள் விகிதம் ஒப்படைத்து அவர்களுக்கு எழுத கற்றுக்கொடுக்கும் படி பணித்தார்கள். அச்சிறார்கள் திறம்படக் கற்றுக் கொண்ட பின் அவர்களை விடுவித்தார்கள். இவ்வாறு பல வகையிலும் அறிவு, கல்வி, அறிஞர்கள், கல்விமான்களதும் சிறப்புக்களை எடுத்துரைத்த இஸ்லாம் அறிவின் முதன்மையான அடைவாக அழ்ழாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுக்கொள்வதாக அமைய வேண்டும் எனும் செய்தியை முதல் வஹியான ஸூரா அலக்கினூடாக தெளிவு படுத்திவிட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது நப்றாஸ் ஹனிபா மற்றும் கந்தளாயை சேர்ந்த தாஜ் ஹசன் ஹயாத்து முஹம்மது ஆகியோர் எழுதிய "நற்பணியில் நான்கு தசாப்தங்களைத்தாண்டிய அறபுக் கல்லூரிகள்" எனும் நூல் வெளியீட்டு விழா கல்முனை சாஹிரா கல்லூரியின் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது. மாவடிப்பள்ளி ஷஹ்து அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் யூ.எல். முபாரக் ஹாசிமி தலைமையில், அல்-மஜ்மஉல் இஸ்லாமி சமூக நலன்புரி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வெளியிடப்பட்ட நூல் வெளியீட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்,

 அறிவைச் சுமந்தோரின் பண்பாடுகள் எவ்வாறு காணப்படல் வேண்டும் என்பதையும் தெளிவாகவும் அழுத்தமாகவும் கூறியுள்ளது. அப்பண்பாடுகளில் முதன்மைப் படுத்தபட வேண்டியவையாக உலத்தூய்மை சமய மற்றும் சமூகப் பற்று, நம்பிக்கை, பொறுப்புணர்வு, பணிவு, சுய கௌரவம், மேலும் நாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதோடு மற்றவருகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்

அதுமாத்திரமல்லாது கல்வியின் பண்பாடுகளை அணிகலன்களாகக் கொண்டு அதன் இலக்கு  நோக்கி நேரான பாதையில் பயணிக்கும் அறிஞர்களின் பற்றாக்குறை தெளிவாகவே தென்படுகின்றது. இக்குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு சமூகத்தில் இருக்கும் அரபுக்கல்லூரிகள், பாடசாலைகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் முறையான திட்டமிடலோடு பணியாற்ற வேண்டியது காலத்தின் தேவையாகும்.

ஒரு ஆலிம் தன்னுடைய சமூகத்தில் தந்தையின் ஸ்தானத்திலிருந்து செயல்பட கடமைப்பட்டவர், ஒரு தந்தை தன்மக்களின் கடந்தகால, நிகழ்கால நடவடிக்கைகளை மையமாகவைத்து எதிர்கால வாழ்க்கையின் திட்டமிடலை வழிகாட்டுவார். அதேபோன்று எமது சமூகத்தின் கடந்தகால நிகழ்கால நடவடிக்கைகளை மையயமாக வைத்து அதற்காக மேற்கொள்ளப்படவேண்டிய ஆத்மிக, லௌஹீக முயற்சியின்பால் சமூகத்தை வழிநடத்துதல் போன்ற எதிர்கால சவால்களை முன்னோக்கக் கூடிய அறிவும், மனோபக்குவமும் மிக அத்தியாவசியமாகும்.

ஒரு மனிதன் கடும் போக்குவாதியாக மாறுவதும், மார்க்கத்தில் காணப்படும் சுலபமானபோக்கை கடைப்பிடிப்பதும் மிக இலேசான காரியம், ஆனால் நடுநிலைவாதியாக தன்னை மாற்றிக்கொள்வதென்பது கடினம்.  இஸ்லாம் எம்மிடம் நடுநிலையை எதிர்பார்க்கின்றது. நாம் ஒரு தனி இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் அல்ல நபிமார்களையும், ரஸுல்மார்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். சமூகத்தில் நடுநிலைப்போக்கு வரவேற்க்கத்தக்கதும் உறுவாக்கப்பட வேண்டியதாகும். என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.