Header Ads



"பாடசாலை ஆசிரியர் ஒரு பிள்ளையை தண்டித்தால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் நிலை"

மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், சுதந்திரம், ஜனநாயகம் என்பன சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டுமேயன்றி சமூகத்தை பிழையாக வழிநடத்தும் வகையில் அல்ல என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 

பாடசாலை ஆசிரியர் ஒரு பிள்ளையை தண்டித்தால் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரும் நிலைக்கு இன்று எமது சமூகம் மாறியுள்ளது. அது நியாயமானதா நியாயமற்றதா என்பது தொடர்பில் வாதங்கள் உள்ளபோதும், அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை அனுபவிக்கின்ற அதேநேரம் அவற்றை உண்மையாக விளங்கிக்கொள்வதும் அறிந்து கொள்வதும் பெற்றோர்களது பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.  

கொழும்பு தாமரைத்தடாகம் கலையரங்கில் நடைபெற்ற 'குரு பிரதிபா பிரபா பிரணாம' விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

இலங்கை பாடசாலைக் கல்வித்துறையில் முக்கிய இடம் வகிக்கும் ஆசிரியர்களும் அதிபர்களும் தமது தொழில் உயர்வானது என்பதை உலகிற்கு எடுத்துச்சொல்லி நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செய்யும் சேவைக்கு உரிய உபகாரம் செய்யும்வகையில் கல்வி அமைச்சு 'குருபிரதிபா பிரபா பிரணாம' விழாவை வருடாந்தம் ஏற்பாடு செய்துவருகிறது. 

ஒரு சமூகத்தையும் நாட்டையும் மாற்ற வேண்டியது அரசியல்வாதிகளின் பணியாகும் என்றபோதும், நாட்டையும் சமூகத்தையும் ஆன்மீக ரீதியாக குணப்படுத்துவதற்கு ஆசிரியர்களால்தான் முடியும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஆசிரியர் சேவையின் மேன்மைக்காக ஒரு அரசு என்றவகையில் பெற்றுக்கொடுக்கக்கூடிய அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுக்க தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார். 

250 அதிபர்கள் 459 ஆசிரியர்கள் 29 பிரிவெனாக்களின் தலைவர்கள் மற்றும் 56 பிரிவெனா ஆசிரியர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதோடு, ஜனாதிபதியினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன், பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா உள்ளிட்ட அமைச்சர்கள், மாகாண கல்வி அமைச்சர்கள், கல்வித்துறையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. ஆசிரியர்கள் கண்டிக்க வேண்டும் அதே வேலை கண் கால் கைகள் கெட்டுப்போகும் அளவுக்கு வீட்டில் உள்ள டென்சனில் பிள்ளைகளை அடித்து உரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது,

    ReplyDelete

Powered by Blogger.