Header Ads



உணவு சாப்பிடும் குடும்பம், பார்த்துக் கொண்டிருந்த வேலைக்காரச் சிறுமி


உங்களுக்காக உங்கள் வீட்டில் வேலை பார்க்கும் சிறுமிகளுக்கோக, சிறுவர்களுக்கோ, வேலைக்காரப் பெண்ணுக்கோ உணவு வாங்கிக் கொடுக்க விருப்பம் இல்லையெனில் அவர்களை உங்களுடன் ஹோட்டலுக்கு அழைத்து வராதீர்கள் என்ற வாசகத்தை அடிக்கடி  ஃ பேஸ்புக்கில் பார்க்கலாம். தற்போது அதைப் போன்றே உண்மைச் சம்பவம் ஒன்று இந்தோனேஷிய நாட்டில் நடந்துள்ளது.

இந்தோனேஷியாவில் ஜகர்த்தா நகரில் ஹோட்டல் ஒன்றுக்கு உணவருந்த ஒரு குடும்பத்தினர் வந்துள்ளனர். அவர்களுடன் வேலைக்காரச் சிறுமியும் வந்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள் ஒரு மேஜையில் இருந்து உணவருந்திய போது, அந்த வேலைக்காரச் சிறுமி அதனை பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். வேலைக்காரச் சிறுமிக்கு எந்த உணவையும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் வாங்கிக் கொடுக்கவில்லை. சாப்பிட்டு முடிந்து போகும் வரை ஒரு ஜுஸ் கூட ஆர்டர் செய்து கொடுக்கவில்லை. சிறுமியின் இந்த நிலையை அதே ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மைக்கேல் ஃபன்னி என்பவர் படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

அந்த புகைப்படத்தின் கீழே,'' உங்கள் வேலைக்காரர்கள் உங்கள் வாழ்க்கையுடன் இணைந்தவர்கள். உங்களுக்காக சேவை செய்பவர்கள். நீங்கள் அவர்களை நடத்துவதில் இருந்தே உங்கள் மனிதத்தன்மைத் தெரியும். இந்த நிலையில் நீங்கள் இருந்திருந்தார் என்னவாகும்? நம்மை சாப்பிட அழைக்கவில்லையே... நம்மை சாப்பிடச் சொல்லவில்லையே... என்ற வருத்தம் ஏற்பட்டிருக்கும்தானே. அந்த சிறுமியின் கண்கள் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தன. அந்த கண்களில் இருந்த வருத்தத்தையும் என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது'' என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ''நாம் நமது வேலைக்காரர்கள், டிரைவர்கள், தோட்ட பராமரிப்பாளர்கள் போன்றவர்களை அன்புடன் நடத்த வேண்டும். வாழ்க்கை என்பது லாபத்தையும் நஷ்டத்தை மட்டுமே சார்ந்தது இல்லை. நம்மிடம் என்னவிருக்கிறதோ அதனை அன்புடன் பகிர்ந்தளிக்க வேண்டும். அப்படி செய்வது, கடவுளுக்கு பகிர்ந்தப்பது போல் ஆகும்.'' என்றும் தனது பதிவில் மைக்கேல் கூறியிருந்தார்.

மைக்கேல் ஃபன்னியின் இந்த பதிவு உலகம் முழுக்க 60 ஆயிரம் முறை ஷேர் செய்ப்பட்டது. பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். பல சமயங்களில் ஜாதி, மதம், இனம் மொழி கடந்து மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வதையும் உணவை பகிர்ந்து கொள்வதையும் பார்க்கிறோம். இது போன்ற சில சம்பவங்கள் மனதை கனக்கச் செய்து விடுகின்றன.

1 comment:

Powered by Blogger.