Header Ads



அதென்ன ஹைப்பர் தைமீசியா..?

புதுமாதிரியான பிரச்னை ஹைப்பர்தைமீசியா! டிமென்ஷியா, அம்னீஷியா, செலக்டிவ் அம்னீஷியா எல்லாம்  கேள்விப்பட்டிருக்கோம். அதென்ன ஹைப்பர்தைமீசியா? 

ஒருவர் தன் வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நினைவில் வைத்திருக்கும் தனித்துவமான  நரம்பியல் அமைப்பை உடைய நிலையை Highly Superior Autobiographical Memory (HSAM)   என்கிறோம். அது சுருக்கமாக ஹைப்பர்தைமீசியா (Hyperthymesia) என்று சொல்லப்படுகிறது.  மூளையில் இத்தகைய நரம்பியல் அமைப்பை கொண்டிருப்பவர்களால் ஒவ்வொரு சம்பவத்தையுமே விரிவாக நினைவு  படுத்த முடியும். 

வேடிக்கை என்னவென்றால் சின்னச் சின்ன விஷயத்தையும் நினைவுகூறும் இவர்கள் நடப்பு நாளை, கடந்த காலத்தோடு  சம்பந்தப்படுத்தி அந்த நினைவுகளிலேயே வாழ்வார்கள். கடந்தவாரம் இதேநாளில் என்ன சாப்பிட்டோம்? என்ன கலர்  டிரஸ் போட்டிருந்தோம்? யாரையெல்லாம் சந்தித்தோம்? இதெல்லாம் நமக்கு நினைவிருக்குமா? கண்டிப்பாக இருக்காது.  ஏதோ இவர்கள் மூளையில் பதிவு செய்யும் கருவியை  பொருத்தியது போல, கடந்த வருடம் இதே நாளில்  என்னவெல்லாம் செய்தார்களோ சிறிதும் பிசகாமல், மூளையைக் கசக்காமல் அப்படியே நினைவுக்கு கொண்டுவந்து  சொல்ல முடியும். 

இவ்வளவு ஏன்? குறிப்பிட்ட அந்த நாளின் வானிலையைக்கூட துல்லியமாக சொல்லி விடுவார்கள்.  அட...  நினைவுத்திறன் அபாரமாக இருப்பதால் தேர்வுகள் இவர்களுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரியா என்றால், அதுதான்  இல்லை. தங்களைச் சார்ந்த விஷயங்களை மட்டுமே நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்பதால்தான், இதற்கு  Highly Superior Autobiographical Memory Syndrome என்று பெயர் வந்தது. 

இதைப் பற்றி மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் கீர்த்திபாய் விளக்குகிறார்..."இதுபோல கடந்த கால நிகழ்ச்சிகளை  நினைவுக்கு கொண்டு வருவதிலேயே பெரும்பாலான நேரத்தை கழிக்கும் இவர்களால் நிகழ்காலத்தில் வாழ முடியாது.  இன்றைய நாளின் சிந்தனையே இருக்காது. கட்டுப்படுத்த முடியாது தொடரும் நினைவுகளால், நிகழ்கால  வாழ்க்கையையும் வாழ முடியாமல் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல் திணறுவார்கள். எந்த  வேலையிலும் தொடர்ந்து ஈடுபடமுடியாமல் போய்விடும் அபாயமும் உண்டு.

நம்மைச் சுற்றியுள்ளவர்களில் சிலர், வீட்டில் உள்ளவர்களோ அல்லது அலுவலகத்தில் மேலதிகாரியோ கடிந்து  கொள்வதை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் அதைப் பற்றியே மீண்டும் மீண்டும் நினைத்து மனஅழுத்தம் அடைவதை  பார்த்திருப்போம். சின்னச்சின்ன விஷயங்களாலேயே மனித மனம் பாதிப்படையும்போது, மறக்க நினைக்கும் என்றோ  நடந்த கசப்பான நினைவுகள் நினைவிற்கு வந்தால், அவர்கள் வாழ்க்கை சோகம் நிறைந்ததாகிவிடும். 

நிகழ்கால சந்தோஷங்களை அனுபவிக்க முடியாது. பழைய நினைவுகளின் சுமையால் மனஅழுத்தம் ஏற்படும்  இவர்களுக்கு காக்னிடிவ் சிகிச்சை (Cognitive therapy) அளிக்கிறோம். அவர்களது சிந்தனை மற்றும்  நடத்தைகளில் ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு மாற்றங்களைச் செய்தால், நாளடைவில்  பழைய நினைவுகளிலிருந்து  மீண்டு அவர்களது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்” என்று நம்பிக்கையும் அளிக்கிறார் டாக்டர்  கீர்த்திபாய்.

No comments

Powered by Blogger.