Header Ads



இருபத்தாறாவது வருடமும், இன்னும் மாறாத துயரமும்


-யாழ் அஸீம்-

இந்த மண் எங்களின் சொந்த மண் - இதன் 
எல்லை யார் தாண்டெனச் சொன்னவன்
இந்த மண் எங்களை ஈன்ற மண் - எமக்கு 
இடமில்லை என்றெவன் சொன்னவன்

தந்தையர் தோளெமைச் சுமந்த மண்
தாயாரின் மடியிலே சாய்ந்த மண்
பந்தடித்தோடி ஓய்ந்த மண்
பாடியும் பேசியும் தோய்ந்த மண்

நாமெலாம் ஓரினம் என்றே சொல் - தனை
மாற்றினோர் எங்களைத் தூற்றினோர்
போமென எங்களை ஓட்டினோர் - செயல்
பார்த்ததால் நெஞ்சமே வெந்தமண்

வரலாற்றில் வடுவாகப் பதிந்து விட்ட வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் போது அதன் வலியுணர்ந்த தமிழ்க் கவிஞர் சி. சிவசேகரத்தின் உணர்ச்சிபூர்வமான உள்ளக் குமுறல்கள்களே மேலுள்ள கவி வரிகள்.

இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் வடமாகாண முஸ்லிம்கள் எந்தவொரு சமூகமும் சந்தித்திராத மிகக் கொடுமையான இனச் சுத்திகரிப்புக்குள்ளாக்கப்பட்டார்கள். பலநூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட வடமாகாண முஸ்லிம்களின் இருப்பும், பூர்வீகமும் துடைத்தெறியப்பட்டு கால் நூற்றாண்டை தாண்டிவிட்ட போதிலும் அவர்களது அவல வாழ்க்கையில் பாரியமாற்றமெதுவும் ஏற்பட்டு விடவில்லை. நீண்ட காலமாக அகதி முகாம்களில் அவல வாழ்க்கை வாழும் அவர்களது மீள்குடியேற்றம் இன்றுவரை சாத்தியமற்றதாகவே காணப்படுகிறது.

வடமாகாண முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டமையானது ஒரு பலவந்த வெளியேற்றமாக மட்டுமே பேசப்படுகின்றது. ஆனால் இவ்வெளியேற்றத்தின் போது வடமாகாண முஸ்லிம்களது சகல சொத்துக்களுமே பறிமுதல் செய்யப்பட்டு கொள்ளையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் கொள்ளைச் சம்பவமானது இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவமாகும். இவ்விடயமானது வரலாற்றில் போதியளவு உள்வாங்கப்பட்டு பதியப்படவில்லை. கால் நூற்றாண்டு கடந்தாலும் இவற்றை விரிவாக ஆராய வேண்டியதும், பதிய வேண்டியதும் சர்வதேசமயப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.

வடமாகாண முஸ்லிம்களுக்கு நடைபெற்ற இக்கொடுமையை, கொள்ளைச் சம்பவத்தை, இனச் சுத்திகரிப்பை கண்டித்து தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் குரல் கொடுத்தாலும், இனச் சுத்திகரிப்பு என்பதை ஏற்றுக் கொள்ளாததுடன் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு இடையூறாக குரல் கொடுக்கும் தமிழ் அரசியல் வாதிகளும் உள்ளனர் என்பது வேதனைக்குரியதாகும்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது நடைபெற்ற சம்பவத்தை இனப்படுகொலை எனத் தீர்மானம் நிறைவேற்றிய, விக்னேஸ்வரன் ஐயாவை முதலமைச்சராகக் கொண்ட வடமாகாண சபை வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றபட்டதை இனச்சுத்திகரிப்பு என ஏற்றுக் கொள்வதில் மௌனம் காத்தது வெளிப்படையாகும்.

இன அழிப்புக்கு எதிரான ஐ.நா. சாசனத்தின் படி சொந்த வாழ்விடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவதும் பண்பாட்டு வாழ்வியலின் தனித்துவ அடையாளங்களை அழித்தலும் இன அழிப்புக்குச் சமமான குற்றங்களாகும். இவை இரண்டுமே வடமாகாண முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டன என்பது உலகறிந்த உண்மையாகும்.

இவ்வாறாக வடமாகாண முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட பாரிய கொடுமையை சர்வதேசமும் அறிந்திருந்தும் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அவை கூடிய அக்கறை எடுக்கவில்லை. அரச சார்பற்ற நிறுவனங்களும், மனித உரிமை நிறுவனங்களும், ஐ.நா. அகதிகள் அமைப்பும் கூட இம்மக்களின் விடயத்தில் ஒரு தலைப்பட்சமாகவே நடந்து கொள்கின்றன. இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த தமிழ் அகதிகளை மீளக்குடியேற்ற அழுத்தம் கொடுக்கும் ஐ.நா அகதிகள் அமைப்பும் சர்வதேச நிறுவனங்களும் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமது தாயக மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, அகதி முகாம்களில் அவல வாழ்க்கை வாழும் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்காக எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

முதலமைச்சராக விக்னேஸ்வரன் அவர்கள் பதவியேற்ற பின் அவரது கன்னிப் பேச்சில் முஸ்லிம்களுடைய மீள்குடியேற்றம் சம்பந்தமாக துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வாக்களித்த போதிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் அண்மையில் வெளியேற்றப்பட்ட யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கான பதிவுகள் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெற்றபோது ஆயிரக்கணக்கான யாழ் முஸ்லிம்கள் பதிவுகளை மேற்கொண்டனர். இவை வெறும் புள்ளி விபரங்களுக்கான காகிதக் கட்டுக்களாக இருந்து விடுமா அல்லது காத்திரமான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments

Powered by Blogger.