October 04, 2016

52 வருட யுத்தத்தை, முடிவுக்கு கொண்டுவர விரும்பாத மக்கள்

கொலம்பியாவில் பார்க் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுக்கு இடையிலான வரலாற்று முக்கியம் வாய்ந்த அமைதி உடன்படிக்கையை மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் கொலம்பிய மக்கள் நிராகரித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

52 ஆண்டு சிவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் முக்கியம் வாய்ந்த சர்வஜன வாக்கெடுப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

13 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களித்த இந்த தேர்தலில் 63 ஆயிரத்திற்கு குறைவான வாக்குகள் வித்தியாசத்தில், அமைதி ஒப்பந்தத்தை நிராகரிக்கும் தரப்பு வென்றது.

கியூபாவில் சுமார் நான்கு ஆண்டு இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஜனாதிபதி ஜுவான் மானுவல் சான்டோஸ் மற்றும் பார்க் தலைவர் டிமோலியோன் ஜிமனெஸ் இருவரும் கடந்த வாரம் அமைதி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

எனினும் இந்த அமைதி உடன்படிக்கையை அமுலுக்கு கொண்டுவர மக்களின் அனுமதியை கோரியே சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெற்றது.

வாக்கு முடிவை ஏற்பதாக அறிவித்திருக்கும் ஜனாதிபதி சான்டோஸ், அமைதி இலக்கை எட்ட தொடர்ந்தும் பணியாற்றப்போவதாக உறுதி அளித்துள்ளார்.

எனினும் தற்போதைய யுத்த நிறுத்தம் தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கியூபாவில் பார்க் தலைவர்களுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

“நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்று கூறிய அவர், “எனது பதவிக்காலம் முடியும் வரை அமைதியை ஏற்படுத்துவதற்கான வழியை தொடர்ந்து தேடுவேன். அதுவே எமது சிறுவர்களுக்கு சிறந்த நாடொன்றை விட்டுச் செல்ல ஒரே வழியாகும்” என்றார்.

மறுபுறம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் இலக்கை அடைவதற்கு பார்க் குழு தொடர்ந்து செயற்படும் என்று பார்க் தலைவர் டிமொசென்கோ குறிப்பிட்டுள்ளார்.

இந்த அமைதி உடன்படிக்கைக்கு எதிராக பிரசாரம் செய்தவர்கள் மீது அவர் கடும் விமர்சனத்தை வெளியிட்டார். “கொலம்பிய மக்களின் கருத்தில் தாக்கத்தை செலுத்திய பழிவாங்குதல் மற்றும் வெறுப்புணர்வு கொண்ட சீர்குலைக்கும் சக்திகள் குறித்து பார்க் ஆழ்ந்த கவலை அடைகிறது” என்று டிமொசென்கோ செய்தியாளர்களிடம் கூறினார். அமைதி உடன்படிக்கையின் படி பார்க் கிளர்ச்சியாளர்கள் தமது 52 ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து ஆயுதத்தை கீழே வைத்து அரசியல் செயற்பாட்டில் இறங்க இணங்கினர்.

எனினும் அமெரிக்க தீவிரவாத பட்டியலில் தொடர்ந்து நீடிக்கும் பார்க் கிளர்ச்சியாளர்களை நடத்தும் முறை அதிக மிருதுவானது என்று விமர்சகர்கள் குற்றம் சுமத்தி இருந்தனர்.

பார்க் கிளர்ச்சி தலைவர்கள் தமது குற்றங்களை ஒப்புக் கொள்வதன் மூலம் அவர்கள் சிறை செல்வதை இந்த உடன்படிக்கை தவிர்க்கிறது. அடுத்த இரண்டு தேர்தல்களிலும் கிளர்ச்சியாளர்களுக்கு 10 ஆசனங்கள் வழங்கவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த அமைதி உடன்படிக்கையை 50.2 வீத வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர். 49.8 வீத வாக்குகள் ஆதரவாக பதிவாகியுள்ளன. இதில் 63,000க்கும் குறைவான வாக்கு வித்தியாசமே உள்ளது.

இந்த அதிர்ச்சிதரும் முடிவு கொலம்பிய அமைதி செயற்பாடுகளை சீர்குலைத்திருப்பதோடு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உடன்படிக்கைக்கு எதிராக பிரசாரம் செய்த முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ உரிபே, “கொலம்பிய மக்கள் அனைவரும் அமைதியை எதிர்பார்க்கின்றனர். எனினும் இந்த உடன்படிக்கையில் திருத்தங்கள் தேவை” என்றார்.

“நாம் தேசிய உடன்படிக்கை ஒன்றுக்காக பங்களிப்பு செய்வோம்” என்று உறுதி அளித்தார்.

எவ்வாறாயினும் இந்த உடன்படிக்கையை தவிர்த்து நாட்டில் அமைதியை ஏற்படுத்த மாற்றுத் திட்டம் இல்லை என்று ஜனாதிபதி சான்டோஸ் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். கொலம்பியாவின் அரை தசாப்த யுத்தத்தில் 260,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சர்வஜன வாக்கெடுப்பு முடிவு ஜனாதிபதி சான்டோஸுக்கும் பாரிய பின்னடைவாக உள்ளது. 2010 ஆம் ஆண்டு தேர்தலில் வென்றது தொடக்கம் சுமார் எட்டு மில்லியன் மக்களை இடம்பெயரச் செய்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

கடந்த ஒரு வாரத்திற்கு குறைவான காலத்திலேயே வரலாற்று நகரான கார்டகேனாவில் இடம்பெற்ற லத்தீன் அமெரிக்காவின் மிக நீண்டதும் கடைசியானதுமான ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வைபவம் ஒன்றில் உலகத் தலைவர்கள் மற்றும் பார்க் தளபதிகளுடன் சான்டோஸும் பங்கேற்றிருந்தார்.

கிளர்ச்சியாளர்கள் ஆயுதத்தை களைந்து ஆறு மாத காலத்தில் புதிய அரசியல் கட்சியாக மாற்றம் பெற திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் கொலம்பியாவின் அண்மைய வரலாற்றில் ஏற்பட்டிருக்கும் மிக சிக்கலான சூழலுக்கு ஜனாதிபதி தற்போது முகம்கொடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

297 பக்கங்கள் கொண்ட அமைதி உடன்படிக்கை ஆவணம் கொலம்பியாவில் பெரும் சமூக பிளவை ஏற்படுத்தும் விடயமாக இருந்தது. இது குறித்த சர்வஜன வாக்கெடுப்புக்கு தொலைக்காட்சி விளம்பரங்கள், பேரணிகள் மற்றும் அமைதி ஊர்வலங்கள் என்று தீவிர பிரசாரங்கள் இடம்பெற்றன. இந்நிலையில் வாக்கு முடிவுகள் அமைதி உடன்படிக்கைக்கு ஆதரவானவர்களிடம் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வீதிகளில் கூடியிருந்த சிலர் கண்ணீர்விட்டு அழுதனர். இந்த சர்வஜன வாக்கெடுப்பில் 40 சதவீதத்திற்கும் குறைவானோரே வாக்களித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துரைகள்:

Post a Comment