Header Ads



முஸ்லிம் பாடசாலைக்கு 3 மாடிக் கட்டிடத்தை வழங்கவுள்ள பௌத்த தேரர்

 – அஷ்கர் தஸ்லீம் –

பௌத்த தேரர் ஒருவர், திஹாரிய அல்அஸ்ஹர் மத்திய கல்லூரிக்கு மூன்று மாடிக் கட்டிடமொன்றை வழங்கியுள்ள சம்பவம், நாடெங்கும் தற்போது பேசப்பட்டு வருகின்றது. நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் குறித்து வெகுவாக பேசப்பட்டு வருகின்ற நிலையில், இந்த சுப செய்தி, நாட்டு மக்களின் மனங்களை குளிர வைத்துள்ளது.

திஹாரிக்கு அண்மையில் அமைந்துள்ள அத்தனகல்ல ரஜ மஹா விஹாரையின் பிரதம பிக்குவான கலாநிதி பன்னில ஆனந்த தேரரே, திஹாரிய அல்அஸ்ஹர் மத்திய கல்லூரிக்கு மூன்று மாடிக் கட்டிடமொன்றை கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளார். இந்த கட்டிடத்துக்கான மொத்த செலவு 2 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை தரப்பின் வேண்டுகோளுக்கிணங்க, கலாநிதி பன்னில ஆனந்த தேரர் இந்த நன்கொடையை வழங்க முன்வந்துள்ளார். இதற்கு முன்னரும் பல்வேறு பாடசாலைகளுக்கு கட்டிடங்களை வழங்கியுள்ளார் இவர். இந்த செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கு பாடசாலை அபிவிருத்தி சங்கம், உள்ளிட்டு ஊர் பிரமுகர்கள் பெருமளவு அர்ப்பணத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.

போருக்கு பிந்திய இலங்கையில், இனங்களுக்கு இடையிலான சகவாழ்வு, நல்லிணக்கம் குறித்து பெருமளவு பேசப்பட்டு வருகின்றபோதும், அரச தரப்பு அதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவ்வளவு போதாத நிலையில் உள்ளன. அதேநேரம், அரச தரப்புக்கு அப்பால், சகவாழ்வு, நல்லிணக்கம் குறித்து சிவில்சமூகம் அக்கறை கொண்டு செயற்பட வேண்டும் என்ற செய்தியையே கலாநிதி ஆனந்த தேரரின் நடவடிக்கை இந்த நாட்டுக்கு சொல்கின்றது.

போர் மற்றும் பேரினவாதம் காரணமாக இலங்கையில் வீழ்ச்சி கண்டுள்ள சகவாழ்வு சூழலை மீளவும் கட்டியெழுப்ப வேண்டுமாயின், அரச முன்னெடுப்புகளுக்கு அப்பால், இந்த நாட்டின் சிவில் சமூகம் அது குறித்த நடவடிக்கைகளில் இறங்குவது மிகவும் அவசரமான தேவையாக உள்ளது.

இலங்கையில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றபோது, இந்நாட்டு மக்கள் துரிதமாக செயற்பட்டு நிவாரண பணிகளில் ஈடுபடுவது பிரபலமான ஒரு தோற்றப்பாடாகும். அதேபோன்று, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளின்போதும், இந்நாட்டு மக்கள் தம்மை முழுமையாக அதில் ஈடுபடுத்திக் கொள்ளும் வழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.

இவை மாத்திரமன்றி, சகவாழ்வு, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு எவ்வாறான தளங்கள் உள்ளன என்பது குறித்து ஆராய்ந்து, அத்தளங்களில் மிக துரிதமாக செயற்பட வேண்டியது இந்நாட்டு மக்களின் பொறுப்பாகும். அந்த வகையில், அத்தனகல்லை ரஜ மஹா விஹாரையின் பிரதம பிக்கு கலாநிதி ஆனந்த தேரரின் செயற்பாடு, சகவாழ்வு, நல்லிணக்கம் குறித்த தூர நோக்கின் வெளிப்பாடாகும்.

திஹாரிய அல்அஸ்ஹர் மத்திய கல்லூரி சமூகத்தினதும், முழுநாட்டு முஸ்லிம் மக்களதும் மனங்களில் கலாநிதி ஆனந்த தேரர், பெரும் மதிப்பையும், கௌரவத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். அவ்வாறே, முஸ்லிம் சமூகமும், சிங்கள மக்களிடம் நல்லுறவை ஏற்படுத்துவற்கான தளங்களை கண்டறிந்து செயற்பட வேண்டும்.

எவ்வாறாயினும், சகவாழ்வு, நல்லிணக்கம் என்பன நல்லெண்ணமற்ற, செயற்கைத்தனமான செயற்பாடுகளால் உருவாகாது என்பதையும் நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எனவே, இந்நாட்டின் எதிர்காலத்தையும், இனங்களுக்கு இடையிலான சகவாழ்வு, நல்லிணக்கத்தையும் உருவாக்குவதற்கு இந்நாட்டின் அனைத்து சமூகங்களும் நல்லெண்ணத்துடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

1 comment:

  1. கண்ணியதிட்குறிய கலாநிதி ஆனந்த தேரர் அவர்களே மனிதன் இவ்வுலகில் வவாழும்போது யாருக்கும் அனியாயம் செய்யக்கூடாது யாருடைய உடைமைகளையும் எடுக்க கூடாது நாம் அனைவரும் ஆதாம் ஏவால் இருவரின் பிள்ளைகள் சகோதரர்கள் சிந்தனைகளால் வித்தியாசப் பட்டுள்ளோம் என்று இந்த ஞானசார தேரருக்கு உஉபதேசியுங்கள் இவ்வுலகில் வாழ்வது கொஞ்சகாலம் அல்லாஹுவின் உண்மையை கண்டறிந்து அனைவரும் அவனை வணங்கி வாழ முயற்சிப்போம்

    ReplyDelete

Powered by Blogger.