October 26, 2016

"கருப்பு ஒக்டோபர்" 26 சொல்லும் செய்தி

 -எஸ் .எம் .மஸாஹிம்-

''கருப்பு  ஒக்டோபர்- 26''  வட மாகாண முஸ்லிம்கள் புலிகளினால் இனசுத்திகரிப்பு செய்யப்பட்டு  26 ஆண்டுகள்   கடந்துள்ளது ,  இலங்கை வரலாற்றில் வட  மாகாணத்தின்  பூர்வீக சமூகமான ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கும்   எதிராக இடம்பெற்ற அந்த இனச்சுத்திகரிப்பு ஏற்படுத்திய காயமும்   அதன் வலியும்    இன்றும் ஆறிவிடவில்லை

ஆண்டுகள் கால்நூற்றாண்டைக்   கடந்து விட்டபோதிலும்  வடமாகாண முஸ்லிம்களின் அவலங்கள்  தொடர்கின்றது, வடக்கில் மன்னாரில் சில இடங்களில் குறிப்பிடத்தக்க மீள்குடியேற்றம் இடம்பெற்றமை  மகிழ்ச்சியான விடயம் ஆனால் வடக்கின் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரச்சினைக்கு   தீர்வோ அல்லது  இயல்பான வாழ்வோ   அவர்களுக்கு   மீண்டும் கிடைக்கவில்லை ,   இழந்தவைகளுக்கு எவரும் இழப்பீடுகளை  வழங்க முன்வரவில்லை, கால்நூற்றாண்டுகளாக  அரசியல் மற்றும் சிவில் சமூகங்கள் மட்டத்தில் முயற்சிகள்  இடம்பெற்றாலும் அவைகள் வடமாகாணத்தின்  ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுத்தரவில்லை .,குறிப்பாக யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி முல்லைத்தீவு முஸ்லிம்களின் பிரச்சினைக்கு  ,மீள்குடியேற அல்லது அவர்கள் விரும்பும் இடங்களில் வாழ்வதற்கான வசதிகள் ,இழப்பீடுகள் என்பன  அன்று போன்று இன்றும்  ஆவணங்களில் மட்டுமே இடம்பெற்று வருகின்றது  எம்மை சந்தித்துள்ள இந்த   கருப்பு ஒக்டோபரும்   பல்வேறு சவால்களை சந்தித்தவண்ணம் விடிவுகள் இன்றி கடந்து செல்கிறது .

வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினை வெறும் மீள்குடியேற்றப்பிரச்சினை மட்டுமல்ல என்பதையும்  ஆனால் அது எமது பிரச்சினைகளில்   பிரதான பிரச்சினை என்பதையும் நாம் சரிவர  கவனத்தில் கொள்ள வேண்டும் . 

 சவால்களில் ஒன்றாக நாட்டில்  இன,மதவாதம்  எமது வரலாற்றை போலியாக சித்தரிக்கின்றது  எமது  கடந்த காலத்தைப் பற்றிய பிழையான, போலியான ஒரு சித்திரத்தை முன்வைத்து  அதன் அடிப்படையில் தங்கள் அரசியல் நோக்கங்களை அவை  நிறைவேற்றிக்கொள்ள முயல்வதுடன் புதிய பிரச்சினைகளுக்கும் அஸ்திவாரமிடுகின்றன . தெற்கு பேரினவாதம் முஸ்லிம்கள் இந்த நாட்டின்  வீதிகள் அமைக்க ( ரோட்டுப் போட ) முன்னூறு வருடங்களுக்கு முன்னர்தான்   நாட்டுக்கு   கொண்டுவரப்பட்டனர் எனக் கூறுவதன் மூலமாக எமது பூர்வீக வரலாற்று  இருப்பை   மறுக்கிறது . வடக்கு ,கிழக்கு இனவாதம் முஸ்லிம்களின் பூர்வீகம் மற்றும் முஸ்லிம்களின் இனத்தனித்துவம் ஆகியவற்றை  மறுப்பதன் மூலம் எமது  தனித்துவ அரசியல் உரிமைகளை சேர்த்து எமது  இருப்பையும்   மறுக்கமுட்படுகின்றது. ஆக  இந்த இரு இனவாதங்களும் பொதுவாக முஸ்லிம்களின் இருப்புக்கும் குறிப்பாக  வடக்குமுஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கும் நேரடியாகவும் ,மறைமுகமாகவும் பெரும் தடையாக இருக்கிறது .

மேற்கண்ட சவால்கள் மத்தியில் அண்மைக்காலமாக  முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் சமூகத்திடம் இருந்து தீர்வுகளை நோக்கிய ஆர்வ பூர்வமான சில முன்னெடுப்புக்களை அவதானிக்க முடிகின்றது , முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் தரப்பிடம் இருந்து முன்னெடுக்கப்படும் முயற்சிகள் மேலும்  திறம்பட ஒருங்கிணைக்கபட்ட முறையில் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அவை  ஆக்கபூர்வமான அடைவை நோக்கி வழிகாட்டும் என்பதில் (இன் ஷா அல்லாஹ்) சந்தேகமில்லை .

அதேவேளை வட மாகாண மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக எந்த தரப்பில் இருந்து முன்னெடுக்கப்படும்  முயற்சியாக இருந்தாலும் அவற்றின் வெற்றிக்கு   சமூகத்தின் ஒத்துழைப்பு அடைப்படை காரணியாக உள்ளதை எவரும் மறுக்க முடியாது , சமூகத்தின் பொது விருப்பை பல காரணிகள் தீர்மானிக்கின்றன இன்று வடக்கின் பெரும்பாலான மக்கள் புத்தளத்தில் வாழ்வதுடன்  அதன் இளம் தலைமுறை புத்தளத்துடன் சங்கமாகியுள்ள நிலையில் அரசியலுக்கு அப்பால் அவர்களின் சமூக ,அரசியல், பொருளாதார,  பண்பாட்டு,  கல்வி போன்றவற்றில் மீதும்  விசேட கவனம் செலுத்துவதும்  அரசினது மட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் சமூகத்தின் மீதும் தார்மீகக் கடமையாகும் அதை நோக்கிய எல்லா முயற்சிகளும் வரவேற்கப்படவேண்டியவை என்பதில் எவரும் மாற்றுக்கருத்து கொள்ளமுடியாது 

கடந்தபல ஆண்டுகளாக Sri lanka Muslim youth forum  ”கருப்பு ஒக்டோபர் ”  நிகழ்வுகளை    கீழ்காணும் அம்சங்களை    கருப்பொருளாக கொண்டு அனுஷ்டித்து வந்துள்ளது.

1. வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைக்காக முன்வைக்கப்படும்  தீர்வுயோசனைகள்  வெற்றிபெற வேண்டுமானால்   அரசு விசேட சட்ட மூலம் ஒன்றில் ஊடாக  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும்  ,
2. தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களின் மீள்குடியேற்றதுக்கு ஒத்துழைப்புகளை வழங்காவிட்டாலும் தடைகளை ஏற்படுத்தாது இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியும்.
3. வடமாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் போது மிகப்பெரிய கொள்ளை சம்பவமொன்றும் இடம் பெற்றுள்ளது. அது வரலாற்றில் சரிவர பதிவு செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும்.
4. இழப்புகளுக்கான நஷ்டஈடும் , வடமாகாண முஸ்லிம்கள் வாழவிரும்பும் இடங்களில் அவர்கள் சுதந்திரமான கவுரவமான மனிதர்களாக வாழ அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தியும்

5. தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் மீண்டும் புரிந்துணர்வையும்,சகவாழ்வையும் ஊக்குவித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தியும்
5. நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுபவர்களை புறக்கணிப்போம் என்பதை வலியுறுத்தியும் அனுஷ்டித்து வந்துள்ளது .

கடந்த ஆண்டுகளைப் போன்று இம்முறையும் ”கருப்பு ஒக்டோபர் ” போஸ்டர்கள் ஒட்டியும்  நிகழ்வுகளை ஏற்பாடு செய்தும்,  வடக்கு முஸ்லிம் இனச் சுத்திகரிப்பை    நிகழ்வுபூர்வமாக அனுஷ்டித்துவருகிறது

பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளால்  மேற்கொள்ளப்பட்ட வடமாகாண முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பு என்றும்  மறக்கப்படமுடியாதவையாகவே வடக்கு முஸ்லிம்களின் உள்ளங்களில் நிலைத்து நிற்கின்றது . புதிய புரிதலையும் அணுகுமுறைகளையும் கொண்டு தமிழ் , முஸ்லிம், சிங்கள  மக்கள் சகவாழ்வை எதிர்கொள்ளவது காலத்தின் தேவையாகும்.  ஒக்டோபர்கள் மறக்கப்படமுடியாதவை. கருப்பு  ஒக்டோபர் 2016  கடும்போக்கு,தீவிரவாத மனநிலையில் மாற்றங்களை வேண்டிநிற்கிறது. – இந்த கருப்பு ஒக்டோபரும் நாட்டில் இனவாதத்தையும் , மதவாதத்தையும் தூண்டும் அனைவரையும் புறக்கணிக்குமாறு  அழைக்கின்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment