Header Ads



"இலங்கையில் 2 இலட்சம் கஞ்சா பாவனையாளர்களும், 50,000 போதைப்பொருள் பாவனையாளர்களும்"

இலங்கையில் இரண்டு இலட்சம் கஞ்சா பாவனையாளர்களும், 50,000 ஹெரோயின் போதைப்பொருள் பாவனையாளர்களும் உள்ளதாக தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் பேராசிரியர் ரவீந்திர பெர்ணாண்டோ தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்காக புலனாய்வுப் பிரிவு ஒன்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அது வெற்றிகரமாக செயற்பட்டுவருகிறது. இந் நிலையில் சர்வதேச புலனாய்வுப் பிரிவு ஒன்றை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர்தெரிவித்தார்.

ஆசியா மற்றும் பசுபிக் வலய நாடுகளின் போதைப் பொருள் தொடர்பிலான சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் 40ஆவது மாநாடு “HONLEA” நடைபெறுகின்றபோது சர்வதேச புலனாய்வுப் பிரிவு ஒன்றினை ஆரம்பிப்பது தொடர்பில் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது என தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் பேராசிரியர் ரவீந்திர பெர்ணாண்டோ கூறினார்.

ஆசியா மற்றும் பசுபிக் வலய நாடுகளின் போதைப் பொருள் தொடர்பிலான சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களின் 40ஆவது மாநாடு “HONLEA” தொடர்பில் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். ஆசியா மற்றும் பசுபிக் வலய நாடுகளின் போதைப் பொருள் தொடர்பிலான சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களின் 40ஆவது மாநாடு “HONLEA” எதிர்வரும் 24ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கமைய 100க்கும் அதிகமான ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் கொழும்பில் சந்தித்து ஆசிய பசுபிக் நாடுகளுக்கிடையில் அதிகரித்து வருகின்ற போதைப்பொருள் பிரச்சினை மற்றும் மருந்துவகைகளின் தீய பயன்பாடு தொடர்பில் தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர். ஆசியா மற்றும் பசுபிக் வலய நாடுகளின் போதைப் பொருள் தொடர்பிலான சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களின் மாநாட்டின் முடிவில் ஒக்டோபர் 28, 29 ஆகிய திகதிகளில் இந்து சமுத்திர நாடுகளுக்கு இடையிலான போதைப்பொருள் தொடர்பிலான சட்டத்தை அமுல்படுத்துகின்ற நிறுவனங்களின் பிரதானிகள் உள்ளடங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பிலான பிரிவினால் மேற்பார்வை செய்யப்படுகின்ற உலக கடல் வழி குற்றங்கள் தொடர்பில் ஆய்வு செய்கின்ற ஒரு சந்திப்பும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிராந்தியத்திலுள்ள 22 நாடுகளின் உயர் மட்ட நிபுணர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன் கடல் வழியாக நடைபெறுகின்ற போதைப் பொருள் கடத்தல் தொடர்பிலும் விரிவாக ஆராயவுள்ளனர்.

நாங்கள் 65 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம், 100க்கும் அதிகமான அந்நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

29ஆம் திகதி விஷேட கூட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளது. ஆசிய நாடுகளில் உள்ள இது தொடர்பிலான அமைச்சர்கள் மடகாஸ்கர் பிரதமரும் கலந்து கொள்ளவுள்ளார். எமது எதிர்கால போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு இது பேருதவியாக இருக்கும் என சட்டம் ஒழுங்கமைப்பு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஜகத் பி. விஜேவீர கூறினார்.

2020ஆம் ஆண்டாகும்போது போதைப்பொருள் அற்ற நாடு ஒன்றை உருவாக்குவதே இதன் இலக்காகும் என அவர் மேலும் கூறினார். இது ஒரு கடினமான இலக்காகும். ஆனாலும் போதைப்பொருள் பாவனையினை குறைத்தல் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வளித்தல் போன்ற இன்னோரன்ன விடயங்கள் ஆற்றப்படும். இவர்களை கைது செய்கின்ற பொலிசாரின் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என அவர் மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.