Header Ads



16 மாவட்டங்கள், வரட்சியால் பாதிப்பு

வரட்சியால் பாதிக்கப்பட்ட 16 மாவட்டங்களுக்காக 181 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா பாராளுமன்றத்தில் அறிவித்தார். பொலன்நறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, கிளிநொச்சி, குருநாகல், இரத்தினபுரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் வரட்சி நிலவு இம்மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக 46,624 குடும்பங்களைச் சேர்ந்த 187,536 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக 1000 மற்றும் 500 லீட்டர் நீர் தாங்கிகளை கொள்வனவு செய்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

23/2 நிலையியற் கட்டளையின் கீழ் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கம்பஹா மாவட்டத்தில் நீர் தாங்கிகள் கொள்வனவு செய்வதற்காக 5 இலட்சத்து 75 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள் ஊடாக பௌசர்கள் மூலம் நீரை வழங்குமாறு பணித்துள்ளோம். பௌசர்களுக்கான எரிபொருளை வழங்குவதற்கு மேலதிக ஒதுக்கீடுகளை வழங்குவதாகவும், பௌசர் சாரதிகளுடன் மேலதிக சாரதிகள் தேவைப்பட்டால் அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நீருக்கு பணம் அறவிடப்படுவதில்லை. இதனை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

வரட்சி நிலைமைகளுக்கு முகங்கொடுக்கக் கூடிய நீண்டகாலத் தீர்வுகளுக்குச் செல்வது பற்றியும் கவனம் செலுத்தவேண்டியுள்ளது. குறிப்பாக குடிநீரை வழங்கும் நீர் நிலைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. மேலதிக நீர்நிலைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக கேள்வியை முன்வைத்து உரையாற்றிய தினேஷ் குணவர்தன எம்பி கூறுகையில், பல்வேறு மாவட்டங்களில் மக்கள் குடிநீர் மற்றும் நீர் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்துள்ளனர். உலக உணவு ஸ்தாபனம் கூட நீர் தட்டுப்பாடு குறித்து எச்சரித்துள்ளது. இதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை விளக்குமாறு கேட்டிருந்தார். 

No comments

Powered by Blogger.