Header Ads



இனவாதிகளுக்கு எமது முன்னணியில் இடமில்லை - UPFA அறிவிப்பு

தேசிய அரசாங்கம் தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் 2020 ஆம் ஆண்டிலேயே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் அதுவரையில் இன்றைய அரசு தொடரும் என்று  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர  தெரிவித்தார்.  

இனவாத  கட்சிகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இடமில்லையென்றும் தெரிவித்தார். இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சியுடனான இணக்கப்பாட்டு தேசிய அரசாங்கம் 2020 ஆம் ஆண்டுவரை தொடரும். நாடு கடன் சுமையில் தள்ளப்பட்டுள்ளது. அதேவேளை பொருளாதார நெருக்கடியிலும் வீழ்ந்துள்ளது. இதிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஐ.தே.கட்சியுடன் இணைந்து இணக்கப்பாட்டு தேசிய அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

எனவே இந்த ஆட்சி தொடரும். 2020 ஆம் ஆண்டில் மீண்டும் தேசிய அரசை ஏற்படுத்துவதா இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும். 

அப்போது இடம்பெறும் தேர்தலில் ஐ.தே.கட்சி தனித்து போட்டியிடும். அதே போன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் தனித்தே போட்டியிடும்.

அதன் பின்னர் தனித்து ஆட்சியமைப்பதே சுதந்திரக் கட்சியின் இலக்காகும்” 2020 வரை இணைக்கப்பாட்டு அரசு தொடரும். எனவே புதிய கட்சி ஆரம்பிக்க நினைப்போரும் சுதந்திரக் கட்சியை  பிளவுப்படுத்த முயற்சிப்போரும் கட்சியில் இணையலாம். அதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைச் சின்னத்தில் போட்டியிடும். 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் மேலும் பல கட்சிகள் இணையவுள்ளன. அதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

ஆனால் இனவாதக் கட்சிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைத்துக் கொள்ளப்படமாட்டாது. 

இனவாதிகளுக்கு எமது முன்னணியில் இடமில்லை என்றார். 

No comments

Powered by Blogger.