Header Ads



அரசாங்கத்தினால் பழிவாங்கப்படுகிறோம் - நசீர் அஹமட்

(எம்.ஏ.றமீஸ்)

மாகாணங்களுக்கான ஒட்டுமொத்த அதிகாரப் பரவலாக்கங்களை வழங்கியதாகச் சொல்லும் மத்திய அரசாங்கம் பல்வேறான விடயங்களில் வேண்டுமென்றே மாகாண அரசாங்கங்களை கொச்சைப்படுத்தும் விதமாகச் செயற்பட்டு வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் இஸட்.ஏ.ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பாயிஸா மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்றைய தினம்(29) கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதிபர் எம்.ஏ.ஏ.செய்னுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், 

எமது கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில் மத்திய அரசாங்கத்தினால் வேண்டுமென்றே எமது மாகாணம் பாரபட்சமான முறையில் பழிவாங்கப்படுவதை கண்ணூடாகக் காணக் கிடைக்கின்றது. குறிப்பாக ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நாம் முற்படுகின்றபோது மத்திய அரசின் தலையீட்டினால் பல்வேறான அசௌகரியங்களை நாம் எதிர்நோக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரயர் வெற்றிடங்களை நிரப்ப முற்படும் மத்திய அரசாங்கத்தில் உள்ள கல்வி அமைச்சு மற்றும் அதனோடிணைந்த அதிகாரிகள் வடமாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை எந்தவித போட்டிப் பரீட்சையும் இன்றி நிரப்பியுள்ளமை எமது மாகாணத்தினை வேண்டுமென்றே பழிவாங்கி எம்மவர்களை கொச்சைப்படுத்தும் செயலாகப் பார்க்க வேண்டியுள்ளது.

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆங்கிலம், கணிதம் மற்றும் விஞ்ஞானத்துறை ஆசிரியர்களுக்காக சுமார் 1134 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவ் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் பட்டதாரிகள் மத்தியில் நடாத்திய பரீட்சையில் இருந்து வெறும் 390 பேர் மாத்திரமே சித்தி பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கணிதப்பாடத்திற்காக எமது மாகாணத்தில் 434 ஆசிரியர் வெற்றிடம் காணப்படுகின்றன. ஆனால் அதற்காக பரீட்சையில் தோற்றி சித்தி பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 66 மட்டுமே உள்ளது. இவ்வாறான நிலை தொடர்ந்து கொண்டு சென்றால் எமது மாகாணத்தின் ஆசிரியர் வெற்றிடங்களை எவ்வாறு நாம் நிவர்த்தி செய்வது? எப்படித்தான் எமது மாகாணத்தின் கல்வி நிலையினை உயர்த்துவது?

மிக விரைவில் கல்விக்கல்லூரிகளில் இருந்து டிப்ளோமாதாரிகளாக வெளியாகியுள்ள ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளன. அதனடிப்படையில் எமது மாகாணத்தில் விஞ்ஞானத்துறைக்கு 332 ஆசிரியர்களும், கணிதத்துறைக்கு 604 ஆசிரியர்களும், ஆங்கிலப்பாடத்திற்கு 652 ஆசிரியர்களும் வெற்றிடமாக உள்ளன. இந்நிலைமை இவ்வாறிருக்க எமது மாகாணத்தினைச் சேர்ந்த ஆசிரிய டிப்ளோமா தாரிகளை வேறு மாகாணங்களுக்கு நியமிக்க மத்தி அரசாங்கம் முனைந்து கொண்டிருப்பதை நாம் எவ்வாறு கண்டிக்காமல் விடுவது?

இவ்வாறாக தொடர்தேர்ச்சியாக மத்திய அரசாங்கம் கல்வி விடயத்தில் நடந்து கொண்டு வேண்டுமென்றே எம்மைக் கொச்சைப்படுத்தும் செயற்பாட்டினை நாம் கண்மூடிகளாக இருந்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இவ்வாறான விடயங்களைக் கண்டித்து எமக்கான அனைத்து விடயங்களும் உரிய முறையில் பாரபட்சமின்றி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் குறியாக நின்று நாம் செயற்பட்டு வருகின்றோம்.

எமது கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தின் ஆட்சியினைக் கையில் எடுத்து சுமார் ஒன்றரை வருடங்கள் கடந்து விட்ட நிலையில் பல்வேறான சவால்களை நாம் எதிர்நோக்கியுள்ளோம். குறிப்பாக நாம் ஆட்சியினை பாரமெடுக்கின்றபோது எமது மாகாணத்தில் எவ்வித ஆசிரியர் பற்றாக்குறையுமற்ற குறிப்பாக ஆசிரியர்கள் அதிகமுள்ள மாகாணமாக சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் நான் முதலமைச்சர் என்ற வகையில் கிழக்கில் உள்ள அதிகமான பாடசாலைகளுக்குச் செல்கின்றபோது ஆசிரியர் பற்றாக்குறை பற்றி என்னிடம் பாடசாலை அதிபர்கள் முறையிட்டு வந்நனர்.

இந்நிலைமையினைக் கருத்திற்கொண்டு முன்னாள் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட மாகாணக் கல்விப்பணிப்பாளர் போன்றோரிடம் வலய ரீதியாக ஆசிரியர்களின் விபரங்களை வலயக் கல்விப்பணிப்பாளர் மாகாணக் கல்விப்பணிப்பாளர் போன்றோரின் கையொப்பத்துடன் வழங்குமாறு பணிப்புரையொன்றை விடுத்திருந்தேன். அதற்கமைவாக கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அவர்கள் செயற்பட்டதற்கமைவாக எமது மாகாணத்தில் சுமார் 2568 ஆசிரியர்கள் வெற்றிடமாக உள்ளதாக தகவல்களை வழங்கினார்கள்.

அதுமட்டுமல்லாமல் தொடர்சியாக 2016ஆம் ஆண்டுக்காக தேவைப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை தற்போதைய நிலவரத்தின்படி கணக்கிட்டபோது தற்போது எமது கிழக்கு மாகாணத்தில் 5021 ஆசிரியர்கள் வெற்றிடமாகவுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்விக் கல்லூரிகள் போன்றவற்றில் இருந்து கல்வி நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்து வெளியாகுபவர்களுக்கு மத்திய அரசாங்கத்தினால் பரீட்சைகள் நடாத்தி சான்றுப்பத்திரங்களும் வழங்கப்படுகின்றன. இவ்வாறானவர்கள் மத்தியில் போட்டிப் பரீட்சையொன்றை நடாத்தி மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்களைக் மத்திய அரசாங்கமே கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளை நாம் பார்க்கின்றோம். குறிப்பாக ஆங்கிலப் பாடத்திற்கு ஆசிரியர்கள் தேவையென்றால் ஆங்கிலத்துறை சம்மந்மாக அவர்கள் பரீட்சிக்கப்பட்டு அவர்களைத் தெரிவு செய்யலாம். ஆனால் ஆங்கலப்பாடத்திற்காக ஆசிரியர்கள் தேவைப்படுகின்றபோது அவர்கள் மத்தியில் நுண்ணறிவு போன்ற பரீட்சைகளை நடாத்தி அவர்களை வேண்டுமென்றே தோற்கடிக்க முனையும் மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகளை நாம் கண்டிக்கின்றோம். எதிர்காலத்தில் கல்வி அமைச்சு உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் எமக்கான விடங்களில் பாகுபாடு காட்டாமல் செயற்படுமாறு வேண்டுகின்றோம் என்றார்.

2 comments:

  1. If the provincial council is not get the power and rights of the community why do you waste your time?
    Better get out from the council

    ReplyDelete
  2. BOTH CHIEFMINISTERS ARE GREEDY.MAHINDA RULING TIME NO POWER FOR THEM.BOTH ARE UNHAPPY PEOPLE

    ReplyDelete

Powered by Blogger.