September 09, 2016

தலையை கவிழ்த்தவாறு, நாங்கள் நிரபராதிகள் என்ற துமிந்த சில்வா..!

பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை  வழக்கின் தீர்ப்பு நேற்று வியாழக்கிழமை வழங்கப்படவிருந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு, பன்மடங்காக அதிகரிக்கப்பட்டிருந்தது. 10 அடிக்கு ஒரு பொலிஸார் என்ற வீதத்தில் பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.  அவர்களுக்கு மேலதிகமாக, விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்றையதினம், விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளுக்கு சமுகமளித்தவர்களைத் தவிர வேறு எவரும், நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே அனுமதிக்கப்படவில்லை. பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவிருந்த அறைக்குச் சென்றவர்கள் அனைவரும், கடும் உடற்சோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். வழக்கில் சுமத்தப்பட்டுள்ள சகல குற்றச்சாட்டுகளிலும், குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் இனங்காணப்பட்ட ஏழுபேரையும் முற்றுமுழுதாக விடுவிப்பதாக  அறிவித்த நீதிபதியான சிரான் குணதிலக்க (தலைவர்), சகல குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளிகளாக ஐவரும் இனங்காணப்பட்டுள்ளனர்  என்று அறிவித்தார். இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக பெயர் குறிப்பிடப்பட்ட ஏழுபேரும், பிரதிவாதிகள் கூண்டிலிருந்து இறங்கிவிட்டனர். துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவர் மட்டுமே பிரதிவாதிகள் கூண்டில் இருந்தனர். அவர்களைப் பார்த்து, தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னர் ஏதாவது கூற விரும்புகின்றீர்களா எனக்கேட்டார். பிரதிவாதியின் கூண்டுக்குள் தலைகளை கவிழ்த்தவாறு நின்றிருந்தவர்கள், தாங்கள் நிரபராதிகள் என்றனர். 

இந்நிலையில், முறைப்பாட்டாளர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்து சிரேஷ்ட பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் இந்தச் சம்பவம், முழு நாட்டையும் உலுக்கியது. அதிகாரத்தில் இருந்தபோதே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றது. இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கவேண்டுமாயின், இவ்வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டோருக்கு  அதியுச்சபட்ச தண்டனைகளை வழங்கவேண்டும் எனக் கோரிநின்றார். நீதிபதியின் கட்டளைக்கு இணங்க, நீதிமன்றத்தின் சகல கதவுகளும் இறுக்கி மூடப்பட்டன. மின்விசிறிகள், மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. சகலரும் எழுந்துநிற்க, மூன்றிலிரண்டு பெரும்பான்மை அனுமதியுடன் தீர்ப்பை நீதிபதி வாசித்தார். 'இந்த வழக்கின் பிரதிவாதிகளில் ஐவரை, இந்த நீதிமன்றம் சில குற்றச்சாட்டுகளுக்காகக் குற்றவாளிகளாக இனங்கண்டுள்ளது. ஆகையால், மரணங்களை ஏற்படுத்திய குற்றத்துக்காக ,அவர்களுக்கு இந்த நீதிமன்றம் மரணத்தண்டனை விதிக்கின்றது. ஜனாதிபதி நியமிக்கின்ற நாளன்று, நேரத்தில் மற்றும் இடத்தில் குற்றவாளியின் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டி அவரது உயிர், அவரது உடலிலிருந்து பிரியும் வரையிலும் தூக்கிலிடப்படவேண்டும்' என்று தீர்ப்பளித்து, தீர்ப்பில் ஒப்பமிட்டார். ஒப்பமிட்ட அந்தப் பேனையை உடைத்து வீசிவிட்டு நீதிபதி, மன்றிலிருந்து நண்பகல் 12 மணியளவில் வெளியேற சக நீதிபதிகளும் வெளியேறிவிட்டனர். அதனையடுத்தே மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டன. மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மேன்முறையீடு செய்வோம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தனது தரப்பைச்சேர்ந்த துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார். 

2 கருத்துரைகள்:

ஐந்து வருடங்கள் விசாரணை செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை நிறைவேற்ற வேண்டியதுதானே . பின்பு இன்னுமொரு நபர் எதற்கு தண்டனையை நிறைவேற்றுவதா இல்லையா என்று தீர்மானிப்பதற்கு . ஆட்சி மாறினால் மீண்டும் வெளியே வந்து இன்னுமொரு கொலையை செய்வார்கள் நல்ல சட்டம்பபா !!!

நம்பிட்ட்டோடோம்ம், பார்டா பச்சைப் புள்ள மகிந்தா கூட்டணிக்கு,பால் வார்த்தும்,ஆப்பு,வைத்து விட்டார் களோ

Post a Comment