September 08, 2016

ஆபத்து நெருக்கடிக்குள், இராஜதந்திர சேவை

கடந்த ஞாயிற்றுக்கிழமை மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து வெளிநாடுகளிலுள்ள இலங்கை இராஜதந்திரிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. நடந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பது மாத்திரமல்ல எமது பிரஜைகளைப் பாதுகாப்பதில் இலங்கையுடன் இராஜதந்திர தொடர்புகளைக் கொண்டுள்ள நாடுகளின் பொறுப்பு குறித்தும் அது கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த வாரம் மலேஷியாவுக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகைக்கு உயர்ஸ்தானிகரை சந்தித்து தமது எதிர்ப்பைத் தெரிவிக்க முயன்ற ஒரு குழுவினர், முயற்சி கைகூடாததால் தான் அவர்கள் உயர்ஸ்தானிகரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

ராஜபக்ஷ எங்கே இருக்கிறார் எனக் கேட்டதற்கு பதில் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த காடையர் குழு அந்த ஆத்திரத்தை உயர்ஸ்தானிகர் அன்சார் மீது கொட்டித் தீர்த்தது.

ஆசிய பசுபிக் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ள ராஜபக்ஷ மலேஷியாவுக்குச் சென்றிருந்தார். மஹிந்தவுடன் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை வழியனுப்ப அன்சார் விமான நிலையத்துக்குச் சென்றதாக சில அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால், இதை மறுத்த வெளிநாட்டு அமைச்சு அங்கிருந்த அமைச்சர் தயா கமகேயை வழியனுப்பவே அன்சார் சென்றதாகக் கூறியது. எனவே, அமைச்சர் மிக இலகுவாக குறிவைக்கப்பட்டார்.

சம்பவம் பற்றி வெளிநாட்டு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹேஷினி கொலோன் எமது பத்திரிகைக்கு கருத்துக்கூறுகையில் இராஜதந்திரிகளின் பாதுகாப்புக்கு அவர்களின் சேவையைப் பெறும் நாடுகளே பொறுப்பு எனக்கூறுகின்றனர். முதலில் மலேஷியாவிலுள்ள எமது உயர்ஸ்தானிகருக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா? எனக் கேட்டதற்கு பதிலளிக்க மறுத்த வெளிநாட்டமைச்சின் ஊடகப் பேச்சாளர், இவ்வாறான சம்பவங்கள் குறித்து கருத்துக்கூற முடியாது. ஏனென்றால், இச்சம்பவம் மிகக் கவனமாக கையாளப்படவேண்டிய ஒன்று.

இராஜதந்திர வழிகளிலேயே இந்த விவகாரத்துக்கு தீர்வு காணப்படவேண்டும் என்றார். சம்பவம் நடந்த இடத்துக்கு பொலிஸார் விரைய முன்னே தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டதால் உயர்ஸ்தானிகருக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதுவும் இந்தத் தாக்குதல் விமான நிலையத்தின் உயிர் பாதுகாப்பு பகுதியில் நடத்திருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

இலங்கையும், மலேஷியாவும் நட்பு நாடுகளாக இருப்பதால் அன்சாருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படக்கூடிய சாத்தியம் இல்லாத நிலையில் அவருக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்கிறார் வெளிநாட்டு அமைச்சின் நிரந்தர செயலாளர் எசல வீரக்கோன். மலேஷியாவில் முன்பு உயர்ஸ்தானிகராக விருந்த கே. கொடகே தான் பதவியிலிருந்த காலத்தின்போதும் பாதுகாப்பு இருக்கவில்லை என வருத்தம் தெரிவித்தார்.

2011 முதல் 2012 வரை பதவியிலிருந்த இவர் மலேஷியா இலங்கைக்கு எதிரான ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதிலிருந்து விலகியிருக்க அந்நாட்டை வலியுறுத்துவதில் வெற்றிகண்டவர். தான் கடமையாற்றும் நாடுகளுக்கு வருகை தரும் தூதுக்குழுவினை விமான நிலையத்துக்கு சென்று வரவேற்பது உயர்தானிகரின் கடமை இல்லாவிட்டாலும் அது ஓர் சாதாரண நடைமுறையே என்றும் அவர் கூறுகின்றார். சம்பவத்தை அடுத்து உயர்ஸ்தானிகர், ஊழியர்கள், உயர்ஸ்தானிகராலயம் என அனைத்துக்கும் தேவையான பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் மலேஷியாவுக்கு கோரிக்கை விழுந்துள்ளது.

தூதுவர்கள் சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு உரியவர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடாது, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டுமென இலங்கையும், மலேஷியாவும் கைச்சாத்திட்டுள்ள 1961ம் ஆண்டின் இராஜதந்திர உறவுகள் தொடர்பிலான வியன்னா ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இராஜதந்திர குழுவினர் பணியாற்றும் ஒரு நாட்டின் வற்புறுத்தலுக்கோ, தொந்தரவுக்கோ உள்ளாகாமல் பணியாற்ற வழிவகை செய்யும் சிறப்புரிமைகளை அந்த ஒப்பந்தம விளக்குகிறது.

இராஜதந்திரிகளின் பாதுகாப்புக்கான அடிப்படை அது. இந்த ஒப்பந்தத்தின் உறுப்பு 29ன் பிரகாரம் இராஜதந்திரி ஒருவரை கைது செய்யவோ தடுப்புக்காவலில் வைக்கவோ முடியாது. அவரை வரவேற்கும் நாடு உரிய மரியாதையுடன் நடத்தி அவர் மீதும் அவருடைய சுதந்திரம், கௌரவம் என்பவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறுகிறது. மேலும், 1973ம் ஆண்டின் பயங்கரவாதத்துக்கு எதிரான ஒப்பந்தமும் இராஜதந்திரிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இதற்கு முன்பும் இடம்பெற்றிருந்தன. 2012ம் ஆண்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதால் மலேஷியாவுக்கான விஜயத்தை அவர் ரத்து செய்தார். அந்த ஆண்டு மலேஷியாவில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இந்திய குழுக்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. எமது துதுக்குழுவினர் அங்கு செல்லும்போதெல்லாம் பாதுகாப்பு வழங்கும்படி நாம் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு ஞாபகப்படுத்த முடியாது. அவர்கள் (மலேஷிய அதிகாரிகள்) உணர்ந்து செயல்பட வேண்டும். ஆனால் நடந்த சம்பவம் தொடர்பில் நாம் கண்டனம் தெரிவித்துள்ளோம்.

எனக்குத் தெரிந்த வகையில் இலங்கை இராஜதந்திரி ஒருவர் தாக்கப்பட்டது இதுவே முதல் சம்பவம், இதை அனுமதிக்க முடியாது. மலேஷிய அரசாங்கமும் தனது அனுதாபத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றும் வீரக்கோன் மேலும் கூறினார். முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் ரோஹித போகொல்லாகவும் இந்த சம்பவம் தொடர்பில் தனது விசனத்தை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் இன்னமும் செயல்படுகின்றார்கள் என்பதைத் தான் காட்டுகிறது. இது வெளிநாடுகளுக்கு செல்லும் சிங்களவர்களுக்கும் அச்சுறுத்தலான ஒரு சம்பவம் தான். மலேஷியாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாளர்கள் இருப்பதால் அங்குள்ள அதிகாரிகள் இது குறித்து கவனத்திலெடுத்து செயல்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

-சாரா இம்தியாஸ்-

0 கருத்துரைகள்:

Post a Comment