Header Ads



தம்புள்ள பள்ளிக்கு தீர்வு பெற்றுத்தராத, முஸ்லிம் தலைவர்கள் - போராட தயாராகும் முஸ்லிம்கள்

-ARA.Fareel-

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தாம் உறுதியளித்த படி தம்புள்ள ஹைரியா பள்ளிவாசலுக்கு இன்றுவரை தீர்வு பெற்றுத்தராமையினால் தீர்வு கோரி தம்புள்ள முஸ்லிம்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை நடாத்துவதற்குத் தீர்மானித்திருப்பதாக ஹைரியா பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் எஸ்.வை.எம்.சலீம்தீன் தெரிவித்தார். 

தம்புள்ள புனித பூமியில் பள்ளிவாசல் இருக்கக்கூடாது அது அகற்றப்பட வேண்டும் என்று பெரும்பான்மை இனத்தினரால் 2012 ஆம் ஆண்டு முதல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.

2012 ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி இப்பள்ளிவாசல் அப்பகுதி ரங்கிரி ரஜமகாவிகாரை அதிபதி இனாமலுவே தேரரின் தலைமையிலான குழுவினரால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 

பள்ளிவாசல் நிர்வாகம் பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அகற்றிக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்ததையடுத்து தற்போது பள்ளிவாசலுக்கு மாற்றுக்காணி நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இனம் காணப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காணி தம்புள்ளயில் மதுபானசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் பள்ளிவாசல் நிர்வாகம் அக்காணியை ஏற்க மறுத்துள்ளது. 

அத்தோடு தம்புள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபை பள்ளிவாசலுக்கு 10 பேர்ச் காணியே ஒதுக்கியுள்ளது. தற்போது பள்ளிவாசல் 41.7 பேர்ச் காணியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

இது தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் எஸ்.வை.எம்.சலீம்தீன் ‘விடிவெள்ளி’க்கு கருத்து தெரிவிக்கையில் ‘கடந்த பொதுத்தேர்தலின் போதும் அதற்கு முன்பும் முஸ்லிம் அரசியல் தலைவர்களான அமைச்சர்கள் கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீம், எம்.எச்.ஏ.ஹலீம், ரிசாத் பதீயுதீன், பைசர் முஸ்தபா மற்றும் அசாத்சாலி போன்றோர் தம்புள்ள ஹைரியா பள்ளிவாசலுக்கு உடனடியாக தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்கள். ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

அரசியல்வாதிகள் பள்ளிவாசல் பிரச்சினைகளைத் தமது அரசியல் இலாபத்துக்கு மாத்திரமே பயன்படுத்தி பதவிக்கு வருகிறார்கள். பின்பு அனைத்தையும் மறந்து விடுகிறார்கள். அதனால் தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்துக்காக கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடாத்தப்படவுள்ளது. 

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமைத் தொடர்பு கொண்டு ‘விடிவெள்ளி’ வினவிய போது அவர் பின்வருமாறு பதிலளித்தார். 

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

பள்ளிவாசலுக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள காணி மதுபானசாலைக்கு அருகில் அமைந்துள்ளது எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நான் தற்போது ஹஜ் கடமையை மேற்கொள்ளவுள்ளேன். கடமையை முடித்து நாடு திரும்பியதும் ஏனைய முஸ்லிம் அரசியல் தலைவர்களுடனும் கலந்துரையாடி தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றார். 

1 comment:

  1. பாராளுமன்றம் போக முன்பு எங்கட முஸ்லீம் மந்திரிகள் என்ன என்ன கூத்துக்கள் போடுறார்கள் ஆனால் போன பிறகு அவங்கட வாயிலே புட்டு அடஞ்சி போல ஒன்றுமே நடக்குது இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.