Header Ads



"எமது ஆழமான அரசியல் நோக்கங்களை புரிந்துகொண்டு, அதில் பங்காளிகளாகுமாறு அழைக்கிறோம்"


'அரசியலுடைய ஆழமான நோக்கங்களை புரியாததன் காரணமாகவே பிழையான அரசியல் தீர்மானங்களையும், தெரிவுகளையும் மக்கள் மேற் கொள்கின்றனர்' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

காங்கேயனோடை நியூ ஸ்டார் விழையாட்டுக் கழகத்திற்கான உதவிகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வழங்கும் நிகழ்வு காங்கேயனோடையில் நடை பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அப்துர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார். தனதுரையில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது:

'அரசியல் என்பது ஆழமான, விரிவான சமூக நோக்கங்களைக் கொண்டதாகும். மக்களின் ஒட்டு மொத்த நலன்களே அரசியலின் அடிப்படை இலக்காகும். ஆனால் இது பிழையாகவே மகள்களால் புரியப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே பிழையான அரசியல் தீர்மானங்களையும், தெரிவுகளையும் மக்கள் மேற் கொள்கின்றனர்.

அரசாங்க நிதிகளைக் கொண்டு வந்து வீதிகளை அமைத்தல், கட்டடங்களைக் கட்டுதல், அதற்காக பொது மக்களின் நிதியிலிருந்து விழாக்களை நடாத்துதல், அவ்வப்போது தமக்கு சௌகரியமான விடயங்களிலும் நேரங்களிலும் ஏதாவது பேசுதல், அது போலவே தேர்தல் காலங்களில் வந்து பல வகையான இலவசங்களை மக்களுக்கு பங்கு வைத்தல் போன்றவையே அரசியலின் நோக்கங்களாக மக்களல் புரிந்து வைக்கப்பட்டுள்ளன. இதனை அரசியல் வாதிகளும் கட்சிகளும் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால் இது போன்ற காரியங்களை அவ்வப்போது செய்வதோடு மாத்திரம் தமது கடமைகளை அவர்கள் முடித்துக் கொள்கின்றார்கள். பல சந்தர்ப்பங்களில் மக்களும்  கூட இதனைக் கண்டு திருப்திப் பட்டுக் கொள்கின்றார்கள்.

பௌதீக அபிவிருத்திகள் என்பது அவசியமானவை. ஆனால் அரசியலின் ஒட்டுமொத்த நோக்கமாகவே அது இருக்க முடியாது. அரசியலின் பல்வகை நோக்கங்களில் பௌதீக அபிவிருத்தியும் ஒன்றே என்று சொல்லலாம். எம்மைப் பொறுத்த வரை அரசியல் என்பது ஆழமான விரிந்த சமூக நோக்கங்களைக் கொண்டது. அங்கு மக்களின் நலன்களே முதன்மையானதும் மிக அடிப்படையானதுமாகும் . இதனடிப்படையிலேயே நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அரசியல் நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன.

மக்களின் வாழ்வுரிமை, பாதுகாப்பு, வாழ்வாதார மேம்பாடு, கலாசார ஒழுக்க அபிவிருத்தி, தரமான சூழல், நாகரீக மற்றும் கல்வி மேம்பாடு என பல்வேறு விரிந்த சமூக நோக்கங்களை கொண்டதாக எமது வேலைத்திட்டம் அமைந்துள்ளது

எனவேதான், கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளில் நாம் அதிகம் கவனம் செலுத்துகிறோம் மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்கு முயற்சிக்கிறோம். மாத்திரமின்றி சமூக ஒழுக்க கட்டுக் கோப்புகள் பற்றியும் கவனம் செலுத்துகின்றோம். அத்தோடு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகளையும் நாம் மேற்கொள்கின்றோம். மக்களுக்காகப் பேசவேண்டிய உரிமைசார் விடயங்களில் பேச வேண்டிய நேரங்களில் துணிச்சலுடன்  பேசுகின்றோம். 

இன்றும் கூட நாம் இந்த விழையாட்டுக் கழகத்திற்கு வழங்கும் உதவி அடுத்த தேர்தலில் எமக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனைகளோடும் வழங்கப்படவில்லை. சமூக அபிவிருத்தியில் விளையாட்டுத் துறை அபிவிருத்தியும் ஒரு முக்கிய பங்கு என்ற ஒரு விரிந்த நோக்கின் அடிப்படையிலேயே இன்றைய உதவிகளும் வழங்கப்படுகின்றன. இப்படியான எமது விரிந்த சமூக நோக்கங்களும் அதனடிப்படையிலான வேலைத்திட்டங்களும்தான் எம்மை ஏனைய அரசியல் கட்சியிலிருந்தும் வேறுபடுத்தி தனித்துவமாக்கின்ற அம்சங்களாகும்.

எனவே, நாம் வழங்குகின்ற உதவிகளுக்காக எமக்கு ஆதரவளிக்குமாறு எவரையும் நாம் எப்போதும் கோருவதில்லை. மாறாக எமது ஆழமான அரசியல் நோக்கங்களை புரிந்து கொண்டு அதில் பங்காளிகளாக இணையுமாறு எப்போதும் அழைக்கின்றோம்."

No comments

Powered by Blogger.