Header Ads



"மனைவி தாம்பத்யத்துக்கு மறுத்தால், விவாகரத்து செய்யலாம்" நீதிமன்றம் தீர்ப்பு

கணவன் - மனைவி இருவரில் யார் தாம்பத்யத்துக்கு சம்மதிக்கா விட்டாலும் இதில் விவாகரத்து அளிப்பதில் தவறு இல்லை என டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

டெல்லியை சேர்ந்த ஒருவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் 2007-ம் ஆண்டு நடந்தது. அவருக்கு இப்போது 46 வயது ஆகிறது. அவருடைய மனைவி அவருடன் தாம்பத்யத்தில் ஈடுபட மறுத்து வந்தார்.

எனவே, அவர் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்பல நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு அவருக்கு விவாகரத்து வழங்கியது.

இதை எதிர்த்து அவருடைய மனைவி டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பிரதீப், பிரதீபாராணி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

கணவர் தரப்பில் வாதாடியபோது, திருமணம் ஆனதில் இருந்தே மனைவி தாம்பத்யத்துக்கு மறுத்து வருகிறார். திருமணம் முடிந்து சிம்லாவுக்கு தேனிலவு சென்றோம். அப்போது தன்னை தொட்டால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்வேன் என்று மிரட்டினார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பினோம். அதன் பிறகும் அவர் தாம்பத்யத்துக்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்பட்டது.

மனைவி தரப்பில் வாதாடும் போது, கணவருக்கு மது பழக்கம், மற்றும் போதை மருந்து பழக்கம் உள்ளது. எனவேதான் அவருடன் தாம்பத்யத்தில் ஈடுபட மறுத்தேன் என்று கூறப்பட்டது.

இதையடுத்து தீர்ப்பு கூறிய நீதிபதிகள் கீழ் கோர்ட்டு உத்தரவை ஏற்று கொள்வதாகவும், கணவருக்கு விவாகரத்து அளிப்பதாகவும் கூறினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

திருமணம் என்றாலே அதில் செக்ஸ் வாழ்க்கை நிச்சயமாக இருக்க வேண்டும். செக்ஸ் வாழ்க்கை இல்லாத திருமணம் என்று ஒன்று இல்லை. இந்த வழக்கில் மனைவி தாம்பத்யத்துக்கு சம்மதிக்காமல் இருந்துள்ளார். இது ஒரு வகையில் கணவரை கொடுமைப்படுத்துவதாகும்.

எனவே, அவருக்கு பெண்ணிடம் இருந்து விவாகரத்து அளிக்கிறோம். கணவன் - மனைவி இருவரில் யார் தாம்பத்யத்துக்கு சம்மதிக்கா விட்டாலும் இதில் விவாகரத்து அளிப்பதில் தவறு இல்லை. மருத்துவ ரீதியாக பிரச்சினை இருந்தால் மட்டுமே அது வேறு மாதிரியாக அணுகப்படும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறினார்கள்.

No comments

Powered by Blogger.