Header Ads



சிரியா போரை முடிவுக்கு கொண்டு வர, உலக தலைவர்கள் வழியை கண்டுபிடிக்க வேண்டும் - ஹாலிவுட் நடிகை


சிரியாவில் நீடிக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஐ.நா. பொதுசபை விவாதத்தில் உலக தலைவர்கள் வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஏஞ்சலினா ஜோலி அழைப்பு விடுத்துள்ளார்.

சிரியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரினால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு கோடிக்கும் அதிகமானோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறிவிட்டனர். பலர் வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்னர். 

இவ்வாறு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக அமைதி பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது. தற்பேது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்ய அனுமதிக்கும் வகையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 

இதற்காக நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி, ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் ஆகியோர் ஜெனீவாவில் பேச்சுவார்த்தையை தொடங்கினர். 

இந்நிலையில், அகதிகளுக்கான ஐ.நா. சிறப்பு தூதரான ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, ஜோர்டானில் உள்ள அகதிகள் முகாமை பார்வையிட்டு அங்குள்ளவர்களின் நிலைமைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்தார். 

பின்னர் அவர் கூறுகையில், ‘நியூயார்க்கில் இந்த மாதம் ஐ.நா. பொதுசபை கூட்டம் நடைபெறுகிறது. அப்போது, நடைபெறும் விவாதத்தின்போது, சிரியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிமுறைகளை உலக தலைவர்கள் கண்டறியவேண்டும். போருக்கான மூல காரணங்கள் மற்றும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் கேட்க வேண்டும்’ என்றார்.

மேலும் சிரியாவில் தினம் தினம் உயிருக்குப் பயந்து செத்துப்பிழைக்கும் மக்களின் நிலை குறித்தும் அவர் விளக்கினார்.

No comments

Powered by Blogger.