Header Ads



"இரண்டு பேரினவாதங்களுமே முஸ்லிம்களை தனிமைப்படுத்தின"

-ஷெய்க்  மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-

இரண்டு பேரினவாதங்களுமே முஸ்லிம்களை தனிமைப் படுத்தின, சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் முஸ்லிம்களை தனியொரு சமூகமாகவே கையாண்டு வந்துள்ளனர்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுகள் அதிகாரப் பரவலாக்கங்கள் என்று வரும்பொழுது அது இந்த நாட்டில் வாழுகின்ற மூன்று சமூகங்களினதும் அபிலாஷைகளை பிரதிபலிப்பதாகவே இருக்கவேண்டும்.
இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் அரபிகளின் வருகையுடனோ இஸ்லாத்தின் வருகையுடனோ ஆரம்பமாவதில்லை.

தமிழும் சிங்களமும் தெரியாத அரபிகளுக்கும், அரபும் தமிழும் தெரியாத சிங்களத் தாய்மார்களுக்கும் பிறந்த முஸ்லிம்கள் தமிழை எவ்வாறு தாய்மொழியாக கொள்ள முடியும்.

தென்னிந்திய கரையோரப் பிரதேசங்களிலும் இலங்கையிலும் சுவனர்கள் என்ற பூர்வீகக் குடிகள் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் இனம், மொழி, நிறம், குலம், கோத்திரம் என்பவற்றால் அடையாளப் படுத்தப் படுவதில்லை, எங்களுக்கென தனித்துவமான சுதேச மற்றும் சர்வதேச அடையாளம் ஒன்று இருக்கின்றது.

சிங்களத் தாய்மார்களைக் கொண்ட அரபிகள் நாம் என எம்மை அந்நியப் படுத்திக் கொள்ளவேண்டிய அவசியமோ அல்லது தமிழைப் பேசும் தமிழர்கள் நாம் என அடையாளப் படுத்திக் கொள்ளவோ வேண்டிய அவசியமோ எமக்கு இல்லை.

முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் இலங்கையராக தேசப்பற்றுள்ள சுதேசிகளாக இருந்திருக்கின்றார்கள் அவர்களோடு அரபு, இந்திய, மலாய வம்சாவளியினரும் இருக்கின்றார்கள் என்பதற்காக முஸ்லிம்களது அடிப்படை பூர்வீகம் கேள்விகுற்படுத்தப் படலாகாது.

இலங்கை முஸ்லிம்களை தனி ஒரு இனமாக அல்லது குழுவாக அரசியலில் ஆணித்தரமாக அறிமுகம் செய்தது இரண்டு பேரின வாதங்களுமாகும், இனவாத, தனித்துவ அடையாள அரசியல் எமது விருப்பத்தெரிவு என்பதனை விட எம்மீது திணிக்கப்பட்ட ஒன்றாகும்.

இனப் பிரச்சினைகளிற்கான அரசியல் தீர்வுகள் எனும் பொழுது மாத்திரம் தேசிய அரங்கிலும் சர்வதேச அரங்கிலும் முஸ்லிம்களை தம்மவர் என அடையாளப் படுத்தும் இரண்டு பேரினங்களினதும் மேலாதிக்க பாகுபாடுகள், இனச் சுத்திகரிப்புக்கள் முஸ்லிம்களை இருதலைக் கொல்லி எறும்பின் நிலைக்கு தனிமைப் படுத்தியதால் நாம் இங்கு தனித்துவ அடையாளம் குறித்து பேசுவதற்கு நிர்பந்திக்கப் பட்டுள்ளோம்.

முஸ்லிம்கள் என்றகாரணத்தினாலேயே நாம் சொந்தமண்ணிலேயே அகதிகளாக்கப் பட்டோம், வடக்கில் இருந்து முழுமையாக இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட்டோம்,எமது கிராமங்களில் அழிக்கப்பட்டோம், பள்ளிவாயல்களில் சுட்டுக்கொல்லப் பட்டோம், இன்றுவரை அகதி முகாம்களில் இருக்கின்றோம், எமது நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, எமது உரிமைகள் சலுகைகளை கேட்டு போராண்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தீர்க்கமான இந்தக் காலகட்டத்தில் முஸ்லிம்களது உணர்வுகளை மென்மேலும் காயப்படுத்தும் கருத்து வெளியீடுகளை வடக்கு முதலவர் விக்னேஷ்வரன் மேற்கொள்ளது சாணக்கியமான ஆரோக்கியமான அரசியலாக இருக்க மாட்டது.

1 comment:

Powered by Blogger.