Header Ads



ஈரானிய படகு நெருங்கி வந்ததால், விலகிச் சென்ற அமெரிக்க கப்பல்


மத்திய வளைகுடாவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்றை ஈரானிய தாக்குதல் படகொன்று 91 மீற்றர்கள் வரை நெருங்கி வந்ததால் அந்த கப்பலின் பயணப்பாதை மாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்குள் இவ்வாறான சம்பவம் நிகழ்வது இது நான்காவது முறையாகும். ஈரானின் இந்த நடவடிக்கைகள் தவறுகளுக்கு இட்டுச் செல்லும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

கடந்த ஞாயிறன்று ஈரானிய படகு அமெரிக்க கப்பலுக்கு நேராக செலுத்தப்பட்டு நெருங்கி வந்ததால் அமெரிக்க கப்பல் தனது பயணப்பாதையை மாற்ற வேண்டி ஏற்பட்டது என்று பென்டகன் பேச்சாளர் கெப்டன் ஜெப் டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஈரானிய படகுடன் தொடர்புகொள்ள அமெரிக்க கப்பல் மூன்று முறை முயன்றபோதும் அதற்கு பதில் கிடைக்கவில்லை. ஈரானிய படகுகள் இந்த ஆண்டில் இவ்வாறு தொந்தரவு கொடுக்கும் வகையில் 31 தடவைகள் செயற்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“இவ்வாறான பாதுகாப்பற்ற மற்றும் ஒழுங்கு முறையற்ற செயற்பாட்டை நாம் வேறு எந்த நாட்டிடமும் காணவில்லை” என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

கடந்த ஓகஸ்டில் ஈரானின் இரு தாக்குதல் படகுகள் இரு அமெரிப்ப கப்பல்களை நோக்கி வந்ததை அடுத்து அமெரிக்க ரோந்து படகு எச்சரிக்கை வேட்டுகளை செலுத்தி இருந்தது. எனினும் ஈரானிய படகுகள் தனது பணியையே செய்ததாக அப்போது ஈரான் பாதுகாப்பு அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார். ஈரானின் அணு விவகாரம் தொடர்பில் உடன்பாடொன்று எட்டப்பட்டதை அடுத்து அமெரிக்கா கடந்த ஜனவரியில் ஈரான் மீதான தடைகளை தளர்த்தி இருந்தது. எனினும் ஈரான் தனது ஏவுகணை திட்டத்தை பலப்படுத்துவது மற்றும் சிரியா, ஈராக் யுத்தம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து முறுகல் உள்ளது. 

No comments

Powered by Blogger.