Header Ads



இனவாதமற்ற இலங்கையை உருவாக்க வேண்டும் - யாழ்ப்பாணத்தில் பிரதமர்


இனவாதம் இல்லாத இலங்கையினை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும். அதற்கான முயற்சிகளைத் தான் நாம் எடுத்து வருகின்றோம். எனவே, எதிர்காலத்தில் இனவாத தன்மையினை மாற்றிக்கொண்டு நாங்கள் பொருளாதார ரீதியான தன்மைக்கு மாறவேண்டும் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின் பேரில் உள்நாட்டலுவல்கள் பொதுநிர்வாக அமைச்சின் நிதிப் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட யாழ். மாவட்டச் செயலகத்திற்கான புதிய நிர்வாக அலகுகளை உள்ளடக்கிய மூன்று மாடிக் கட்டடத் தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிர்வாக அலகுத் தொகுதிகளை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

தமிழ் மக்களின் மனங்களைப் பழிவாங்கும் எண்ணம் எமக்கு இல்லை. அவர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் அபிலாசைகளை இனங்கண்டு அவர்களுக்கான உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே தற்போதைய எமது எண்ணமாக இருக்கிறது.

இந்த நாட்டில் உண்மையினை கண்டறியும் நல்லிணக்க ஆணைகக் குழுவினையும் உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஊடாக சிறந்த பலாபலன்களை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும். எனவே தான் ஐனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டில் வாழும் மூவின மக்களின் பிரச்சினைக்குமான தீர்வினைப் பெறுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.

முன்னாள் ஐனாதிபதி மஹிந்த ராஐபக்சவும் எமது பரம்பரையினைச் சேர்ந்தவர். ஆகையினால், அவரும் எங்களுடன் சேர்ந்து கைகோர்க்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 432 கிராம சேவையாளர்கள் பிரிவிலுள்ள மக்களின் தேவைகளுக்காக இந்த மூன்று மாடிக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன், கட்டுமானப் பணிகள் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கடந்த மாதம் நிறைவடைந்து. இன்று மக்களின் தேவைகளுக்காக திறந்து வைக்கப்படுகின்றது. 78 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன .

இங்கு நவீன மயமாக்கப்பட்ட உள்நாட்டு அலுவல்களின் இணைப்பு அலுவலங்கள் மற்றும் ஏனைய துறைசார்ந்த அமைச்சுக்களின் கிளைகள் போன்றன அமைந்துள்ளன எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.