Header Ads



பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் மேஜர்ஜெனரல், கமால் குணரத்னவின் 'நந்திக்கடலுக்கான பாதை'


சிறிலங்கா இராணுவத்தில் இருந்து நாளையுடன் -5- ஓய்வுபெறவுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதியுள்ள ‘நந்திக்கடலுக்கான பாதை’ (‘Road to Nandikadal’)  நூல் நாளை மறுநாள் -06- வெளியிடப்படவுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் சர்ச்சைக்குரிய தளபதிகளில் ஒருவராக விளங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, இறுதிக்கட்டப் போரின் போது, 53 ஆவது டிவிசனுக்குத் தலைமை தாங்கியிருந்தார்.

இவரது தலைமையிலான படைப்பிரிவுடனான இறுதிச் சண்டையிலேயே, புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்,கொல்லப்பட்டார் என்று நம்பப்படுகிறது.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை உள்ளிட்ட போர்க்குற்ற மீறல்களில், தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, நாளை செப்ரெம்பர் 5ஆம் நாளுடன் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.

இவர் ஓய்வுபெற்ற மறுநாள், செப்ரெம்பர் 6ஆம் நாள், இவரால் எழுதப்பட்டுள்ள, நந்திக்கடலுக்கான பாதை ( ‘Road to Nandikadal’) நூல் ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.

இந்த நூலில் இறுதிக்கட்டப் போர் தொடர்பான பல தகவல்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு தரப்பினர் மத்தியில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

2 comments:

  1. இந்தப் புத்தகம் குறித்த பெரிய எதிர்பார்ப்பு தேவையற்றது. இலங்கை போன்ற ஒரு நாட்டில், போர் வெற்றி பெளத்த சிங்கள ஆதிக்க சக்திகளின் வெற்றியாக பார்க்கப்படும் ஒரு நாட்டில், யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய ஒருவர் எழுதும் நூல், இதுவரை வெளிவராத எந்த ஒரு தகவலையும் கொண்டு இருக்கப் போவதில்லை, மாறாக விபரமாக சில விடயங்களை எழுதி இருக்கலாம், ஆனால் சர்ச்சைக்குரிய எந்த விடயமும் இடம்பெறாது.

    இதுவரை வெளிவராத ஏதாவது உண்மைகளை எழுதினால் "தேசத் துரோகி" பட்டம் கிடைக்கும் என்பதை இவர் நன்றாக உணர்ந்தே இருப்பர்.

    ReplyDelete
  2. புத்தகமே வெளிவரவில்லை, நீங்கள் பத்வா கொடுத்து விட்ட.

    ReplyDelete

Powered by Blogger.