September 20, 2016

திரும்பத்திரும்ப கொல்லப்படும் அஷ்ரப்

-ஏ.எல்.நிப்றாஸ்-

இதேபோன்றதொரு செப்டெம்பரில் நமது விடிவெள்ளியை நாம் ஒரு மலைத்தொடரில் காவு கொடுத்தோம். விதியாலோ யாரோ செய்த சதியாலோ, அஷ்ரஃபின் உயிர் பிரிய - முஸ்லிம்கள் எல்லோரும் செத்துக் கிடந்தார்கள். ஒவ்வொரு முஸ்லிம் வீடுகளும் மரண வீடுகளாயின. அன்றும், அதைத் தொடர்ந்து வந்த நாட்களிலும் முஸ்லிம் ஊர்களிலான வாழ்க்கை என்பது ஒரு மயானத்தில் தனிமையில் இருப்பது போன்றிருந்தது. மரணச் செய்தியறிந்து மக்களின் கண்களில் வழிந்தோடிய கண்ணீரையும், பல நாட்களாக கவிந்திருந்த சோகம் கலந்த அமைதியையும் மறந்து போக இன்னும் எத்தனை யுகங்கள் எடுக்குமோ தெரியாது. 

அப்பேர்ப்பட்ட ஆளுமையாக அஷ்ரஃப் மிளிர்ந்தார். மறைந்த பின்பும் இன்னும் சாதாரண, அப்பாவி மக்கள் மற்றும் போராளிகளின் மனங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அவரை மக்கள் நினைந்தழுகின்றனர், அவர் இல்லாத இடைவெளியை உணர்கின்றனர், அவருடைய சிஷ்யர்களின் வெட்கக்கேடான அரசியலை எண்ணி வெஞ்சம் கொள்கின்றனர், அவருடைய கட்சியின் போக்கைப் பார்த்து கவலையடைகின்றனர். அஷ்ரஃபின் வெற்றிடத்தை 3 தேசிய தலைமைகளாலும் 20 பாராளுமன்ற உறுப்பினர்களாலும் கொஞ்சமாவது நிரப்ப முடியவில்லையே என்ற மனத்தாங்கல் எல்லா முஸ்லிம்களுக்கும் இருக்கின்றது. இந்த அடிப்படையில் அஷ்ரஃப் உயிர்ப்புடன்தான் இருக்கின்றார். ஆனால் முஸ்லிம் அரசியல் களத்தில் பல அவர் திரும்பத்திரும்ப கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றார். 

விதியா சதியா? 

அஷ்ரஃபின்; மரணம் விபத்தினால் ஏற்பட்டது என்று மேலோட்டமாக அறிவிக்கப்பட்டாலும் அரசியல்வாதிகளிடையே மட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களிடையேயும் அது விடயத்தில் பாரிய சந்தேகம் உள்ளது. இது ஒரு கொலையாக அல்லது சதி முயற்சியாக இருக்க வேண்டுமென்றே இன்றுவரை முஸ்லிம்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு சில காரணங்களும் இருந்தன. 

விடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் அஷ்ரஃபின் பெயரும் இருந்ததாக சொல்லப்பட்டது. இப் பின்னணியில் அவருடன் ஹெலியில் பயணித்த கதிர்காமத்தம்பி மீது ஒரு சந்தேகப்பார்வை ஏற்பட்டது. இது புலிகளின் வேலையாக இருக்குமென்று முஸ்லிம்கள் வெளிப்படையாகவே பேசினர். வடக்கு, கிழக்கில் இருந்து ஒரு முஸ்லிம் தலைமை உருவாகி அவர் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறுவது சிங்கள கடும்போக்கு சக்திகளுக்கு மட்டுமன்றி பெரும்பான்மை கட்சிகளுடன் ஒட்டிக் கொண்டிருந்த தெற்கின் சிறுபான்மை தலைவர்களுக்கே பெரும் தலையிடியாகவே இருந்தது. எனவே இப்பின்னணியில் ஏதாவது சதித் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்ற ஒரு சந்தேகம் ஏற்பட்டது. இதனைவிட முக்கியமாக, சந்திரிகாவின் வலது கையாக இருந்தாலும் மரணிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக அஷ்ரஃப் சில காட்டமான அறிக்கைகளை வெளியிட்டிருந்தார். சிறுபான்மை மக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருந்த அவர், சிங்கள ஆட்சிச் சூழலையும் நியாயபூர்வமாக விமர்சித்திருந்தார். அந்தவகையில் அஷ்;ரஃப் ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்து விடுவார் என்று எண்ணி ஆட்சியாளர்களே ஒரு விபத்தை திட்டமிட்டிருக்கலாலோ என்ற சந்தேகங்களும் அப்போது வெளியாகி இருந்தன. 

எனவே இதிலுள்ள மர்மங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கடுமையாக பாடுபடும் என்று மக்கள் கருதினர். தமது தலைவனின் உயிரை விதி பறித்ததா? சதி எடுத்ததா? என்பதை அறிந்தால் ஒரு ஆறுதல் கிடைக்குமென போராளிகள் நினைத்தனர். இறைவனின் நாட்டத்தினாலேயே மரணம் நிகழ்கின்றது. ஆனாலும், எல்லோரும் பகிரங்கமாக பார்த்திருக்க விபத்துக்குள்ளாகி இறந்த ஒருவனுக்கே பிரேத பரிசோதனை மேற்கொண்டு சந்தேகத்தை தீர்த்து வைக்கும் நடைமுறை இருக்கும் போது, பெருந்தலைவர் ஒருவர் விமான விபத்துக்குள்ளாகி இறந்தாரா, அல்லது விபத்தொன்று திட்டமிடப்பட்டதா என்று அறிந்து கொள்வதில் என்ன தவறுள்ளது? ஆனால் அது நடக்கவில்லை. அந்த பொறுப்பைக் கூட மு.கா.வும் அஷ்ரஃபின் அரசியல் வாரிசுகளும் நிறைவேற்றவில்லை. 

குறிப்பாக, அப்போது சோமதேரருடனான தொலைக்காட்சி விவாதத்தில் அஷ்ரஃப் அளித்த பதில்களால் பௌத்த சக்திகள் அப்படியே அதிர்ந்து போயிருந்தன. இதைப் பயன்படுத்தி பேரினவாதிகள் விமானத்தில் ஏதாவது தொழில்நுட்ப குளறுபடிகளை செய்திருப்பார்களோ என்ற சந்தேமும் தலைவர் பற்றி ஆழமாக சிந்திக்கின்றவர்களிடையே உள்ளது. இது இவ்வாறிருக்க, அஷ்ரஃபின் மிக நெருக்கமானவரும் அவருடைய 'நான் எனும் நீ' நூலின் பதிப்பாசிரியரும் (முன்னர் வெளிவந்த) முஸ்லிம் குரல் பத்திரிகை, மூன்றாவது மனிதன் சஞ்சிகையின் ஆசிரியரும் தற்போது புலம்பெயர்ந்து எதுவரை சஞ்சிகையை வெளியிட்டுக் கொண்டிருப்பவருமான எம்.பௌஸர், வெளியிட்டுள்ள கருத்துக்களும் (அதுபற்றி தனியொரு கட்டுரையில் குறிப்பிடுகின்றேன்) நம்முடைய மேற்சொன்ன எல்லாச் சந்தேகங்களையும், உண்மை எனும் புள்ளியை நோக்கி நகர்த்துகின்றன. இதன் பின்னால் ஒரு சர்வதேச நிகழ்ச்சி நிரல் இருந்தது என்று அவர் தைரியமாக சொல்லியிருக்கின்றார். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் இது விடயத்தில் எதையாவது செய்த மாதிரி தெரியவில்லை. 

மிக முக்கியமாக, எல்லா முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அஷ்ரஃப் மு.கா. என்ற பேரியக்கத்தை ஆரம்பித்தார். ஆனால், இன்று அக்கட்சியில் இருந்தவர்கள் வெளியேறி புதுக் கட்சிகளை தொடங்கியுள்ளனர். கட்சிக்குள்ளேயே ஏகப்பட்ட முரண்பாடுகளும் பிளவுகளும் ஏற்படத் தொடங்கியுள்ளன. தற்போதைய தலைவரின் தலைமையிலான மு.கா., அக்கட்சி எந்த மக்களுக்காக உருவாக்கப்பட்டதோ அந்த மக்களது பிரச்சினைகளை இரண்டாந்தர பிரச்சினைகளாக கருதிச் செயற்படுவதாக தெரிகின்றது. மற்றைய காங்கிரஸ்களும் அவ்வெற்றிடத்தை நிரப்பவில்லை. மக்கள் சேவைக்காக உருவாக்கப்பட்ட அஷ்ரஃபின் ச்pஷ்யர்களது அரசியல் என்பது சிலருக்கு சொத்து சேர்ப்பதற்கான, வங்கிக் கணக்குகளை நிரப்புவதற்கான கருவியாக மாறியிருக்கின்றது. சவப்பெட்டி கடைக்காரன் போல, யார் வீட்டில் இழவு விழுந்தாலும், நமது கல்லாப்பெட்டி நிரம்ப வேண்டும் என்று நினைப்பவர்களால் அஷ்ரஃப் தினமும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார். 

குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படாத வரை – கொலைகள் தொடரலாம்.

8 கருத்துரைகள்:

அஷ்ரப்பை உருவாக்கியவர்களெ அவர்களின்தேவைமுடிந்ததும் தீர்துகட்டினர்.வட கிழக்கு தமிழர்களை அழிக்க வடகிழக்கு எனும்மரத்தில் இருந்தே பெறப்பட்ட கொடலீபிடியே அஷ்ரப் .தேவைமுடிந்ததும் தூக்கி எறியப்பட்டது கோடாலீபிடி.

So Mr kumar, according to you SLMC Leader Ashraff was brought by somebody to destroy North & East Tamil, do you know that Mr Ashraff was taken may steps to bring peace in this country not only behalf of muslim community for Tamil even, my question is where wear you at that time. Whilst Mrsambanthan was deprivating the Muslim community.

So Mr kumar, according to you SLMC Leader Ashraff was brought by somebody to destroy North & East Tamil, do you know that Mr Ashraff was taken may steps to bring peace in this country not only behalf of muslim community for Tamil even, my question is where wear you at that time. Whilst Mrsambanthan was deprivating the Muslim community.

Yes.we know he put heavy effort to put an rubbish paper on our head as political solution.

"அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்."
(அல்குர்ஆன் : 3:169)

"எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக; யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றியடைந்தாலும் சரி, அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்."
(அல்குர்ஆன் : 4:74)

இறைவனின் மகத்தான நற்கூலியைப் பெற்ற ஒருவருக்காக இனிமேலும் நாம் கவலைப்பட வேண்டாம்

KUMAR KUMARAN
Go to Mental hospital and Check ........... that's why Your Comments Always Coming Against Muslim. But You Can't Remove One Hair From us

மாற்றம் தேவை; புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும், இளைஞர்களும் சிந்திப்பார்களா?? சமூகத்தை வழிநடத்துவார்களா??

உண்மை கசக்குது பாவம்.

Post a Comment