Header Ads



'ஹெலிகாப்டர்' பெற்றோர் என்றால் யார்..?


 உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளின் மீது அதிக அக்கறை காட்டுவதாக நினைத்து தொடர்ந்து அவர்களது தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்கும் பெற்றோரா நீங்கள்? அதன் மூலம் அவர்களுக்கு மறைமுக அழுத்தத்தை கொடுக்கிறீர்கள். ‘அங்க போகாதே... அவனோட ஃப்ரெண்ட்ஷிப்பை கட் பண்ணு’ என்றெல்லாம் எல்லைமீறும் பெற்றோரால், பிள்ளைகள் மனஅழுத்தம் மற்றும் பதற்றத்துக்கு ஆளாகிறார்கள் என்கிறது சமீபத்திய ஆய்வு! ஃப்ளோரிடா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான காய்லாரீட், அளவுக்கு அதிகமான அக்கறை காட்டும் பெற்றோர்களை ‘ஹெலிகாப்டர் பேரன்ட்ஸ்’என்று அழைக்கிறார். 


“பெற்றோரின் செயலில் நல்ல நோக்கம் இருந்தாலும், அக்கறையைத் தாண்டி பல நேரங்களில் தங்களின் முடிவுகளுக்கு இடையூறாக இருப்பதாக கருதுகிறார்கள் இன்றைய வளர் இளம் பருவத்தினர்” என்கிறார் காய்லாரீட். 18 முதல் 25 வயதுள்ள 460 கல்லூரி மாணவர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். பெற்றோரின் தலையீடு எந்த அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கை முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியது என்ற கோணத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன.  சுயமாக செயல்பட அனுமதித்த பெற்றோரைக் கொண்ட மாணவர்கள் வாழ்க்கையில் அதிக திருப்தி அடைந்தவர்களாகவும், ஆரோக்கியம் மற்றும் சுயதிறன் மிக்கவர்களாகவும் இருந்தார்கள். 

பிள்ளைகளை சுயமாக சிந்திக்க விடாத பெற்றோரின் பிள்ளைகள் திறமைஅற்றவர்களாகவும், சிக்கலான சூழ்நிலையை சந்திக்கவோ, சரியான முடிவெடுக்கவோ  முடியாதவர்களாக இருந்தார்கள். அதோடு, மன அழுத்தம், பதற்றம் உடையவர்களாகவும், வாழ்வில் திருப்தி இல்லாதவர்களாகவும், ஆரோக்கியமற்றவர்களாகவும் இருந்தார்கள். ஃப்ளோரிடா பல்கலைக்கழக துணைப்பேராசிரியர் மல்லாரி லூசியர் க்ரீர், ‘உங்கள் பெற்றோர் உங்களிடம் நடந்து கொள்ளும் விதமே, உங்களின் மீதான பார்வையை தீர்மானிக்கிறது’ என்கிறார். ‘‘பெற்றோர் தங்கள் குழந்தைகளிடத்தில், ‘உன்னால் உன் பிரச்னைகளை சமாளிக்க முடியும்... 

வகுப்பில் நீ முதல் மாணவனாக முடியும்’என்பது போன்ற நேர்மறை வார்த்தைகளை கூறினால், உண்மையிலேயே அந்த மாணவன் தன்னம்பிக்கை உடையவனாக இருப்பான். மாறாக ‘ஹெலிகாப்டர் பெற்றோர்’களின் நோக்கம் நல்லதாக இருந்தாலும், குழந்தைகளின் முன்னேற்றத்தைத் தடுப்பவர்களாகவே இருக்கிறார்கள்’’ என்கிறார் லூசியர் க்ரீர். அது சரி... அதென்ன ஹெலிகாப்டர் பேரன்ட்ஸ்? வானத்தில் அங்குமிங்கும் மிதந்து வட்டமிடுகிற ஹெலிகாப்டரை போல இவர்களும் சதா சர்வ காலமும் பிள்ளைகளைச் சுற்றியே வட்டமிடுவதால் அப்படியொரு பெயராம்!

No comments

Powered by Blogger.