September 29, 2016

"பெற்றோரின் அலட்சிய மனோபாவமே, சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு காரணம்"

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. சிறுவர்களுக்கிடையே, புரிந்துணர்வை ஏற்படுத்தி அனைத்து சிறுவர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகளை நினைவு கூருவதற்காக ஐ.நா. சபையினால் 1954 ஆம் ஆண்டு இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

1989ஆம் ஆண்டு ஐ.நா. சபையின் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிறுவர் உரிமைகள் சமவாயத்தின்படி 18 வயதிற்குக் குறைந்த சகலரும் சிறுவர்களாகக் கருதப்படுகின்றனர். அந்த வகையில் சிறுவர்கள் என்பவர்கள் எதிர்கால உலகின் அத்திவாரமாகவுள்ளார்கள். மனதளவிலும், உடலளவிலும் சமூக ரீதியிலும் பெரியவர்களின் பாதுகாப்பு அவர்களுக்குத் தேவைப்படுகின்றது.

ஆனால் ஆண்டுதோறும் இத்தினத்தில் சிறுவர் உரிமைகள், அவர்களது பாதுகாப்பு, நலன்கள் பற்றிய பேருரைகள், நடைபவனிகள், விளம்பரங்கள் என்பன நாடளாவிய ரீதியில் நடைபெற்றாலும், சிறுவர்களுக்கு எதிரான பல்வேறு துஷ்பிரயோக சம்பவங்கள் அரங்கேறிய வண்ணமேயுள்ளன. அதுவும் சிறுவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்களே பணம், உடல் இச்சை, தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக வேலியே பயிரை மேய்வது போல் சிறுவர்களுடைய அழகிய உலகத்தை சிதைக்க முற்படுகின்றார்கள்.

சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை உடல்ரீதியான துஷ்பிரயோகம், உளவியல் ரீதியான துஷ்பிரயோகம், சத்துணவு சார் அசட்டை, கட்டாய போதைப் பொருள் உட்செலுத்துகை, பால்நிலை வேறுபாடு, வேலைக்கமர்த்துதல், இராணுவ நடவடிக்கைகளில் கட்டாயமாக ஈடுபடுத்துதல் போன்றவையாக பல வகையாகப் பிரிக்கலாம். அண்மைக் கால ஆய்வுகள் இவற்றுள் ஏதாவதொரு துஷ்பிரயோகத்திற்கு சிறுவர்கள் முகம் கொடுப்பதாகச் சுட்டிக்காட்டுகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரை உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியை விட மிக மோசமான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தற்போது இடம்பெறுகின்றன. இன்றைய சிறார்களே நாளை தலைவர்கள் என வார்த்கைகளில் மட்டும் கூறிக் கொண்டு அவர்கள் மலரும் முன்னமே மொட்டுகளிலேயே கிள்ளி எறிகின்றார்கள்.

தனிமை, அலட்சியம் என்பன சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களுக்கு வழியமைத்துக் கொடுத்திருக்கின்றன.

கொட்டதெனியாவ சேயா செதவ்மியின் பாலியல் துஷ்பிரயோக சம்பவத்திற்கு பெற்றோரின் அலட்சியமும் ஒரு விதத்தில் காரணமாக அமைந்திருந்தது.

அதேபோல் தாய் தொழிலுக்காக பாடசாலைக்கு சென்றிருக்க வீட்டில் தனிமையிலிருந்த கங்காதரன் ஷரிஸ்ணவி என்ற சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இவ்வாறு சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது.

அதுமட்டுமன்றி இலங்கையில் மலையகப் பகுதிகளில் அதிகளவில் தாய்மார்கள், வெளிநாடுகளுக்கு செல்வதால் பாதிக்கப்படுவது சிறுவர்களாகவே இருக்கின்றார்கள். தாய் இல்லாத பிள்ளைகள் தனிமையில் உளரீதியாக பாதிக்கப்படுவதும், உடல் ரீதியான சித்திரவதைகளுக்குள்ளாகுவதும் அதிகமாக இடம்பெறுகின்றன.

மேலும் கொழும்பு போன்ற நகர்ப்புறப் பகுதிகளில் பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டு இயங்கும் ஒருசில தனியார் பாடசாலைகள் சிறுவர்களின் வாழ்க்கையைத் திசை திருப்பும் விதத்தில் செயற்பட்டு வருகின்றன.

தாய், தந்தை ஆகிய இருவருக்கிடையிலும் காணப்படும் புரிந்துணர்வின்மை, சண்டை சச்சரவுகளும் சிறுவர்களை உளரீதியான பாதிப்புகளுக்குட்படுத்துகின்றன. மேலும் 13-16 வயது கட்டிளமைப்பருவ பெண் பிள்ளைகள் அந்த வயதில் ஏற்படும் எதிர்ப்பாலின கவர்ச்சியை உண்மைக் காதல் என நினைத்து அற்ப உணர்வுகளுக்கு அடிபணிந்து பாதிக்கப்படுகின்றனர்.

இதைதவிர பலசிறுவர்கள் விளம்பரப் பொருளாகவும், பிச்சையெடுத்தல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றார்கள். ஆகவே சிறுவர் தினத்தை நாடளாவிய ரீதியில் நாளை மறுதினம் கொண்டாடும் அதேவேளை, சிறுவர்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து செயற்பட அனைவரும் முன்வரவேண்டும் குறிப்பாக அரசாங்கம் இவ்விடயங்களில் அசமந்தப் போக்கினைக் கடைபிடிக்கக் கூடாது.

சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்த எத்தனையோ சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போதும் அச்சட்டங்கள் கால தாமதமின்றி கடுமையாக நடைமுறைப்படுத்தப்படாமையினால் சிறுவர்களுக்கு எதிராக துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு ஒவ்வொருவர் மனதிலும் உணர்வுரீதியாக கட்டியெழுப்பப்படவேண்டும்.

வசந்தா அருள்ரட்ணம்

0 கருத்துரைகள்:

Post a Comment