Header Ads



அரசியலுக்கு வரும் எவரும், சுகம் அனுபவிப்பதற்கு எதிர்பார்க்க கூடாது - ஜனாதிபதி

எதிர்காலத்தில்இடம்பெறவுள்ள தேர்தல்களின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் புதிய தலைமுறையினருக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

அவ்வாறே மக்களுக்கு விசுவாசமானதும் பொதுமக்களின் இதயத் துடிப்பினைப் புரிந்துகொள்ளக்கூடியதுமான மக்கள்நேயக் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்பி இனிமேல் நடைபெறவுள்ள தேர்தல்களில் வெற்றிபெறச் செய்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தை  திறந்துவைத்த போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடமத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் தேர்தல்கள் எதிர்வரும் ஆண்டு நடுப்பகுதியில் இடம்பெறவுள்ளதுடன் இத்தேர்தல்களைப் போன்றே நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளக் கூடியவாறு கட்சியைப் பலப்படுத்துவதாகவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

கடந்த ஒருசில தசாப்த காலங்களுக்குள் அரசியல்வாதி தானாகவே தன்னுடைய பிரதிவிம்பத்தை சீர்குழைத்ததன் விளைவாகவே இன்று புதியதோர் அரசியல் கலாசாரத்தின் தேவை எழுந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, ஒருசில அரசியல்வாதிகள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாரதூரமான குற்றச்செயல்களைப் புரிந்து அவை மறைமுகமாக மேற்கொள்ளப்பட்டவைகளென நினைத்த போதும் மக்கள் அவற்றை அறிந்து வைத்திருந்தார்களெனக் குறிப்பிட்டார்.

அரசியலுக்கு வரும் எந்தவொரு நபரும் சுகம் அனுபவிப்பதற்கு எதிர்பார்க்க கூடாதெனவும் அவ்வாறு செய்யும் போது அவர்களை மக்கள் நிராகரிப்பார்களெனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியல்வாதி ஒருபோதும் தனது இஷ்டத்திற்கு பணியாற்றக் கூடாதெனத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக பாடுபட்ட கோட்டே தொகுதியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இதன் போது ஜனாதிபதி, நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தார்.

மேல்மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, கோட்டே தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாட்டாளர் ஜனக ரணவக்க உள்ளிட்ட நகரசபை உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. முதலில் கட்சியில் இருக்கும் திருடர்கள் கோலைகாராகள் கட்சியை விட்டு தூக்கினால் நாடு உருப்படும் அத விட்டுட்டு வெறும் வாயால் வடை சுடாதிங்க

    ReplyDelete

Powered by Blogger.