September 03, 2016

வர்த்தகர் ஷகீப் படுகொலை - குற்றவாளிகள் பிடிபட்ட விதம்..!!

பம்பலப்பிட்டி கொத்தலாவல அவனியூ பகுதியில் கடத்தப்பட்டகோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் மொஹமட் சகீப் சுலைமான் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஏழு பேரும் நேற்று ஒருவருமாக 8 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 8 சந்தேக நபர்களுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும்கடத்தலின் போதுவர்த்தகரின் தலைப்பகுதியைத் தாக்கியதாக கூறப்படும் கத்தி ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து விசாரணைகள் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பலித்த பணாமல்தெனிய ஆகியோரின் மேற்பார்வையில் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழான குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி வர்த்தகரின் கைக்கடிகாரம் கடத்தல் இடம்பெற்ற இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் அவ்விடத்தில் போராடும் போது வர்த்தகருக்கு ஏற்பட்ட காயத்திலிருந்து சிந்தியிருக்கலாம் என சந்தேகிக்கத்தக்க இரத்தக் கறைகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த இரத்தக் கறை தொடர்பில் உறுதியான முடிவுக்கு வர கொலை செய்யப்பட்டுள்ள வர்த்தகர் சகீபின் தந்தையான மொஹம்மட் ஹபீப் ஈஸாவின் இரத்த மாதிரியும் தாயான சப்ரீனாவின் இரத்த மாதிரியும் பெறப்பட்டு ஆய்வுக்காக ஜீன் டெக் நிறுவனத்துக்கு அனுப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொலிஸாரின் விசாரணைகளில் தனக்கு 4 மற்றும் 3 கோடி ரூபா மோசடி செய்த இருவர் குறித்து வர்த்தகர் சகீப் குற்றப் புலனாய்வு பிரிவிலும் 45 மற்றும் 35 லட்சம் ரூபா மோசடி செய்தவர்கள் குறித்து மோசடி தடுப்புப் பிரிவிலும் அவர் முறைப்பாடு செய்துள்ளமை தெரியவந்தது.

இந்நிலையில் வர்த்தகருக்கு மோசடி செய்தோர் அதிலிருந்து தப்பிக்கொள்ள இந்த கடத்தலை முன்னெடுத்தனரா என்ற கோணத்திலும் விசாரணைகள் ஆரம்பமாகின.வர்த்தகருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டவர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் பம்பலப்பிட்டி பகுதியின் பல சீ.சி.ரி.வி. கமராக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் வர்த்தகர் சகீபின் உறவினர்கள் நண்பர்கள் என பலரிடமும் கூட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந் நிலையிலேயே சகீப்பை விடுவிக்க மர்ம நபர் ஒருவர் 2 கோடி ரூபா கப்பம் கோரியமையும் அந்த கோரிக்கை கேகாலை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றிலிருந்து விடுக்கப்பட்டமையும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றை மையப்படுத்தி விசாரணைகள் தொடர்ந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி சகீபின் சடலம் மாவனெல்லை - ஹெம்மாத்தகம பிரதான வீதியின் உக்குலேகம பள்ளத்தாக்கில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இந் நிலையில் கொழும்பில் இடம்பெற்ற உயர் பொலிஸ் அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின்னர் படுகொலை தொடர்பில் விசாரணைகளுக்கு என 20 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந் நிலையில் கேகாலையில் இருந்து கப்பம் கோரி தொலைபேசி அழைப்பெடுத்த 0354928201 என்ற தொலைபேசி இலக்கத்தை மையப்படுத்தி விசாரணைகள் ஆரம்பமாகின.

இலக்கம் 24, களு அக்கல வீதி கேகாலை எனும் முகவரியில் அமைந்துள்ள சஞ்ஜீவ தொடர்பாடல் நிலையத்துக்கு அருகில் இருந்த சீ.சீ.ரி.வி. கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகள் பொலிஸாரின் அவதானத்துக்கு உட்பட்டுள்ளன.

இதனை மையப்படுத்திய விசாரணைகளிலேயே கிராண்ட்பாஸ் மற்றும் சேதவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் இருவர் தொடர்பிலான தகவல்களை பொலிசார் வெளிப்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் தொடர்ந்துள்ளனர்.

குறித்த விசாரணையில் ஆட்டுப்பட்டித் தெருவை சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை அடையாளம் கண்ட பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.

குறித்த சந்தேக நபரே கேகாலை தொலைத்தொடர்பு நிலையத்தில் இருந்து கப்பம் கோரியவர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பொலிஸார் அவருடன் அந்த தொலைத் தொடர்பு நிலையத்துக்கு சென்ற சேதவத்தை, வெல்லம்பிட்டியவை சேர்ந்த மற்றொருவரை புதிய களனி பாலம் அருகே வைத்து நேற்று முந்தினம் கைது செய்தனர்.

இதன்போது முன்னைய சந்தேக நபர் பயன்படுத்திய சிம் அட்டைகளுடன் கூடிய இந்த கடத்தல் மற்றும் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இரு சம்சுங் ரக தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றினர்.

இதனையடுத்து தொலைபேசி வலையமைப்பு மற்றும் ஜீ.பி.எஸ். தொழில் நுட்பம் உள்ளிட்ட அறிவியல் ரீதியிலான தடயங்களை வைத்து பொலிசார் சந்தேக நபர்களிடம் விசாரணை செய்தனர்.இதன் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாக வெள்ளவத்தையைச் சேர்ந்த ஒருவரும் பிரதான சந்தேக நபரான மற்றொருவரும் ஏனைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் அவர்களிடம் செய்யப்பட்ட மேலதிக விசாரணைகளுக்கு அமைவாக மற்ரொரு சந்தேக நபர் நேற்று நண்பகல் கைது செய்யப்பட்ட நிலையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சாம்பல் நிற சிறிய ரக கார், கத்தி என்பவற்றையும் மீட்டனர்.

கடத்தும் போது குறித்த வர்த்தகரை தற்போது மீட்கப்பட்டுள்ள கத்தியின் பிடியினாலேயே தாக்கியுள்ளமையும் அதனாலேயே அவர் உயிரிழந்துள்ளமையும் இதுவரையிலான விசாரணையில் உறுதியாகியுள்ளது.

இது தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தகவல் தருகையில்,தனது எஜமானிடம் பெரும் தொகை பணம் இருப்பதை அறிந்த பின்னரேயே இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலைமையின் போது கொலை செய்யப்ப்ட்ட வர்த்தகர் சகீபின் நம்பிக்கைக்குரிய சேவகரின் வீடும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவருக்கு 5 லட்சம் ரூபா உதவியாக எஜமானான சகீப் கொடுத்துள்ளார். இதனைவிட மேலும் 50 ஆயிரம் ரூபா பணத்தை அவரது மனைவியும் கொடுத்துள்ளார்.

வர்த்தகர் சகீபை கடத்தும் திட்டம் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னரேயே தீட்டப்பட்டுள்ளது. அதற்காக கடத்தலுக்கு இரு தினங்களுக்கு முன்னர் 43 ஆயிரம் ரூபா செலவில் காரானது வாடகைக்கு பெறப்பட்டுள்ளது.இந்த பணமானது சந்தேக நபர்களில் ஒருவரின் மனைவியின் தங்க நகையினை அடகு வைத்தே பெறப்பட்டுள்ளது.

வாகனத்தினுள் வர்த்தகரின் தலையில் கத்தியின் பிடியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடத்தியவர்களின் நோக்கம் 2 கோடி ரூபாவை பெற்றுக்கொள்வதேயாகும். அவர்கள் வர்த்தகர் உயிர் இழப்பார் என நினைத்திருக்கவில்லை.

அத்துடன் பிரதான சந்தேக நபர் வர்த்தகர் சகீபின் தந்தை வெளி நாட்டிலிருந்து நாடு திரும்பியதும் கப்பம் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் கடத்தலுக்கு மறு நாளே பிரதான சந்தேக நபர் வர்த்தக நிலையத்துக்கும் சென்றுள்ளார்.' என்றார்.

இதனிடையே கடத்தி கொலை செய்யப்பட்ட வர்த்தகர் சகீபின் நான்கு கடனட்டைகள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் பயணிக்க வழங்கப்பட்டிருந்த விஷேட சலுகை அட்டை ஆகியன காணாமல் போயிருந்தன.

எனினும் சடலத்தை மாவனல்லை பகுதியில் வீசிய பின்னர் அவரது பணப்பையையும் சந்தேக நபர்கள் தாம் அணிந்திருந்த ஆடைகளையும் மானவல்லையில் எரித்துள்ளனர். அந்த இடத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதனைவிட கைதான சந்தேக நபர்கள் மாவனல்லை பகுதியில் நடமாடியதை நேரில் கண்ட பல சாட்சிகளையும் பொலிசார் கண்டறிந்துள்ளனர்.

இந் நிலையிலேயே கைதானோர் அடையாள அணிவகுப்பு ஒன்றுக்கு உட்படுத்தப்படும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.

குற்றவியல் தண்டனை சட்டக் கோவையின் 32 வது அத்தியாயத்துடன் இணைத்து பேசப்படும் 113,117,140,146,355 மற்றும் 296வது அத்தியாயங்களின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு விசாரணைகள் தொடர்கின்றன.

6 கருத்துரைகள்:

Executing death penalty in the light of Islamic law is the one and only tangible solution to curb all iniquituous murders. All criminals and accomplice must be executed once they're confirmed.

I wonder when these rulers of this country going to learn a lesson.how many murders and other serious crimes taking place this country...do we want to protect these murderers or punish them? Why not execute the death sentence?
High time the rulers of this country shed some light on this matter...

Dear Government officials, please initiate death penalty in order to protect people and stop criminal murders.

the one of the symptoms of day of judgment...!! Ya allah grant jannah to shakib

nn need to say anything any goverment rule this country .. cannot save life . becauase racist . i mean no real educaion .

Post a Comment