September 29, 2016

சட்டவிரோத இஸ்ரேலின், போர்க்குற்றவாளி ஷிமோன் பெரஸ்

இரு முறை இஸ்ரேலிய பிரதமராகவும் ஒரு முறை ஜனாதிபதியாகவும் இருந்த ஷிமோன் பெரஸ் தனது 93ஆவது வயதில் மரணமடைந்தார்.

மூளையில் இரத்தக் குழாய் வெடிப்பால் இரு வாரங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரஸின் உடல் நலம் தேறிவந்தபோதும் கடந்த செவ்வாயன்று அவரது உடல்நிலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.

டெல் அவிவ் நகருக்கு அருகாமையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் வைத்து அவர் நேற்று புதன்கிழமை மரணித்தார்.

1948இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது இருந்த கடைசி தலைமுறை அரசியல்வாதிகளில் ஒருவராக பெரஸ் இருந்தார். அவரது ஆரம்ப கால அரசியல் வாழ்க்கையில் அவர் கடும்போக்காளராகக் கருதப்பட்டார். ஆனால் 1990களில் பாலஸ்தீனர்களுடன் அரசியல் ஒப்பந்தம் ஒன்று எட்டப்படுவதற்கு அவர் முக்கிய பங்காற்றி, அதற்காக யாஸிர் அரபாத் மற்றும் யிஷ்தாக் ரபீனுடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.

இஸ்ரேலிய ஜனாதிபதியாக ஏழாண்டு காலம் பணியாற்றிய பின்னர், இரண்டாண்டுகளுக்கு முன்னர் அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். இஸ்ரேலின் உயர் பதவிகள் அனைத்தையும் வகித்தவராக அவர் இருந்துள்ளார்.

இஸ்ரேலின் அணுசக்தித் திட்டத்தின் தந்தை என்றறியப்படும் பெரஸ், பிரான்ஸுடன் ரகசியமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, அணுசக்தித் தொழில்நுட்பத்தைப் பெற்று, டிமோனாவில் அணு உலை கட்ட வழிவகுத்தார்.

போலந்தில் பிறந்த ஷிமோன் பெரஸ், அப்போது பிரிட்டிஷ் ஆளுகைக்குட்பட்ட பாலஸ்தீனத்துக்கு 1934இல் தனது 11 வயதில் குடியேறினார். பின்னர் சியோனிஸ அமைப்பில் இணைந்த அவர் இஸ்ரேலின் நிறுவனரான முதல் பிரதமர் டேவிட் பென்கூரியனை தனது வழிகாட்டியாக கொண்டவராவார்.

இஸ்ரேலின் தற்போதைய தலைவரான பெஞ்சமின் நெதன்யாகு, பெரஸின் மறைவு குறித்து தனது ஆழ்ந்த தனிப்பட்ட இரங்கலைத் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய அமைச்சரவை பின்னர் தனது அஞ்சலியை வெளிப்படுத்த சிறப்புக் கூட்டம் ஒன்றில் கூடவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விடுத்த இரங்கற் குறிப்பில், ஷிமோன் பெரஸ் வரலாற்றின் போக்கை மாற்றியவர் என்றும், இஸ்ரேலின் சாரமாக விளங்கியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்கிரமிப்பு பலஸ்தீன பகுதிகளில் யூதக் குடியேற்றங்களுக்கு அங்கீகாரம் அளித்த அரசில் பெரஸும் இருந்துள்ளார். எனினும் பலஸ்தீனம் கோரும் நில உரிமை குறித்து விட்டுக்கொடுப்புடன் செயற்பட வலியுறுத்தியிருந்தார்.

எனினும் பலஸ்தீனர்கள் அவரை ஒரு யுத்த குற்றவாளியாகவே ஞாபகம் வைத்திருப்பதாக பலஸ்தீன தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக பெரஸ் பிரதமராக இருந்தபோது 1996 ஆம் ஆண்டு இஸ்ரேல் இராணுவம் தெற்கு லெபனானிய கிராமமான க்வானாவில் நடத்திய தாக்குதலில் குறைந்தது 106 பேர் கொல்லப்பட்டனர்.

பெரஸ் பற்றி குறிப்பிட்ட பலஸ்தீன முன்னாள் அமைதி பேச்சுவார்த்தையாளர் டியானா புட்டு, “இந்த நபர் மிக ஆரம்பத்திலேயே ஒரு யுத்த குற்றவாளியாக இருந்தவர்” என்றார்.

இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் இன்று மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் அவரது உடல் நாளை வெள்ளிக்கிழமை ஜெரூசலத்தில் இருக்கும் தேசிய கல்லறையில் அடக்கம் செய்யப்படவுள்ளது. அவரது விருப்பத்திற்கு அமையவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக பெரஸின் முன்னாள் பிரத்தியேக உதவியாளர் யோனா பார்டல் குறிப்பிட்டுள்ளார். 

2 கருத்துரைகள்:

என்னதான் நடக்குது உலகத்திலே... இந்த கேடு கெட்ட தீவிரவாதியை பற்றி இவ்வாலு சிலாகித்து கூறி இருக்கே நம்ம முஸ்லீம் மீடியா , அப்போ மற்ற மீடியாக்கள் எல்லாம் செயறத பற்றி நமக்கு கமெண்ட்ஸே வராது , ஏன்டா நம்மாலே இப்படி நாக்குறப்போ.....
பலமுஜாஹிதுகளை இவன் அவன் என்று கூறும் நம்ம மீடியா இந்த படு பாதாள கொலையாளிக்கு மரியாதையா இவர் அவர் அன்று கூறி இருக்கு , இப்படியே போன இவங்க வாயாலேயே பலஸ்தீனிஸ் தான் தீவிரவாதிகள் என்று சொன்னாலும் வியப்பில்லை .

Now he beck to where he came, now he will be treated the way he treated innocent people.

Post a Comment