Header Ads



புதிய அரசியல் பயணம், புறப்பட இருக்கின்றது -YLS ஹமீட்

(எஸ்.அஷ்ரப்கான்)

தேசியஅரசியல்முஸ்லிம்களின் உணர் வுகளையும் வேணவாக்களையும் பிரதிபலிக்கத்தவறியதன் பின்னணியில்தான் இந்த நாட்டில் தனித்துவ முஸ்லிம் அரசியல் உருவானது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.

கல்முனையில் நேற்று (17) இடம்பெற்ற புத்திஜீவிகளுடனான புதிய அரசியல் பயணம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

முஸ்லிம் அரசியலில் எதுவித சுயநலமும் இல்லாமல் சமூகத்துக்காக தங்களை தியாகம் செய்தவர்கள் பலர். இந்நாட்டு அரசியலில் தங்களது சொந்தப் பணத்தில் கட்சிக்காக மக்கள் அரசியல் செய்தது இந்த தனித்துவ முஸ்லிம் அரசியல் பாதையில்  மட்டும்தான். அவ்வாறு தன்னலனுக்கப்பால் புறப்பட்ட அந்த அரசியல் நாட்டின் தேசிய அரசியலிலும் பாரிய தாக்கத்தை செலுத்தியது.

அத்தனித்துவஅரசியலின் கதாநாயகன்  பெருந்தலைவர் மறைந்த போதும் தனித்துவ அரசியல், அப்பெருந்தலைவர் அடைய விழைந்த இலக்கை அடையும் என்று மக்கள் நம்பினார்கள். அதனால்  தனிநபர் எதிர்பார்ப்பு இல்லாத மக்களின் தியாக சிந்தனை அந்த அரசியலுக்கு தொடர்ந்தும் உரமூட்டி வந்தது. ஆனால் இம்மக்களின் தியாகம் சிலருக்கு தன்னல அரசியலைப்  பேண சாதகமாக அமைந்து விட்டது.

நாட்களின் நகர்வு மக்களுக்கு மத்தியில் கணிசமான அளவு யதார்த்த நிலையை புரியவைத்ததன் வெளிப்பாடுதான் முஸ்லிம் அரசியல் கிளை விட்டதற்கான காரணம்.

மக்கள் இந்தக் கிளைகளில் ஏதாவதொன்று தாய் மரத்தின் பணியை தவறாமல் செய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் கிளைகளை சுக்கான் பிடிக்க வந்தவர்கள் தாய் மரத்தின் சுக்கான் பிடித்தவர்கள் "உடும்பு" என்றால் நாங்கள் "முதலைகள்" என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறார் கள். அதே நேரம் தங்களின் சுயரூபத்தை மறைத்து தங்களின் கோர முகத்தை சமூக வலைத்தளங்கள் எனும் மேக்கப்பை பாவித்து அழகிய முகங்களாக காட்டுவதற்கு பகீரதப் பிரயத்தனங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் செயற்கைத் தோற்றம் நீண்ட காலம் நின்றுபிடிக்காது , என்ற யதார்த்தம் இன்று மக்களின் உணர்வுகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்களுக்கு மத்தியில் குறிப்பாக இளைஞர்களுக்கு மத்தியில் பாரிய விரக்தி நிலை தோன்றியிருக்கின்றது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு, வட கிழக்கின் எதிர்காலம், அரசியல் அமைப்பு மாற்றம், தேர்தல் சீர்திருத்தம் போன்ற விடயங்களில் இந்த கட்சிகள் நடந்துகொள்ளுகின்ற விதம் சமூகத்துக்கு மத்தியில் தமது எதிர்காலம் குறித்து பாரிய கேள்வியை தோற்றுவித்திருக்கின்றது. ஆகக் குறைந்தது இவ்வாறான சமூகத்தின் எதிர் காலத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தக் கூடிய விடயங்களிலாவது தன்னலனைப் புறந்தள்ளி சமூக நலனைமுன்னெடுக்கத் தயங்குகின்ற இவர்களது நிலைப்பாடு இன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் வேதனையான, தமது எதிர் காலம் தொடர்பாக நம்பிக்கையற்ற நிலைமையைத் தோற்றுவித்திருக்கின்றது.இந்நி லையில் முஸ்லிம் சமூகத்தின் நலனை தன்னலனை விட முற்படுத்தக் கூடிய, மறைந்த தலைவரின் இலக்கைத் தொடரக் கூடிய ஒரு புதிய அரசியல் பயணம் தொடர்பாக மக்களுக்கு மத்தியில் பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த உணர்வு இன்று பல வடிவங்களில் சமூக வலைத்தளங்களில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மறுபுறத்தில் இந்த உணர்வுகளை மழுங்கடித்து தங்களின் சுயநல பயணத்தை தொடர பெரும் செலவில் அதே சமூக வலைத்தளங்களில் எதிர் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது. இந்தப் பிரச்சரத்தில் உண்மைக்காகப் போராட முனைபவர்களுக்கு எதிராக மாசு கற்பிப்பதன் மூலம் உண்மைகளை உறங்கவைத்து தமது பொய்களை உண்மைகளாக சித்தரித்து தங்களது தன்னல அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கின்றார்கள். சுருக்கக் கூறின் இன்று சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான,உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான, யதார்த்தத்திற்கும் மாயைக்கும் இடையிலான, பொதுநலத்திற்கும் தன்னலத்துக்கும் இடையிலான ஒரு பாரிய போராட்டம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இப்போராட்டத்தில் சத்தியம் பலியாகிவிடக் கூடாது, உண்மை தோற்றுவிடக் கூடாது, பொதுநலன்  ஆழியில் மூழ்கடிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் படித்த மற்றும் பாமர மக்களுக்கு மத்தியில் ஒரு பாரிய அக்கறை ஏற்பட்டிருக்கின்றது.

இந்தப் பின்னணியில் பல படித்தவர்கள் சமூகத்தில் அக்கறை கொண்டவர்கள் போன்ற பலதரப்பினருக்கும் மத்தியில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக அகில இலங்கை மக்கள் கா ங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களது தலைமையில் பல ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன , தொடர்ந்தும் இந்தக் கலந்துரையாடல்கள் இடம் பெற இருக்கின்றன. வெகு விரைவில் இன்ஷா அல்லாஹ் சமூகத்தின் விரக்திகளுக்கு விடிவு தேடிய இனப்பிரச்சினைத் தீர்விலிருந்து முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பாரிய பிரச்சினைகள் அனைத்தும் சமூகத்தின் எதிர்காலத்தை மாத்திரம் மையமாக வைத்து தீர்வு தேடப்படுகின்ற ,டாக்டர்கள்,பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், மற்றும் சமூக  அக்கறை கொண்ட வர்த்தகப் பிரமுகர்கள், உலமாக்க ள் போன்ற பல தரப்பினரையும் அரவணைத்த புதிய அரசியல் பயணம் புறப்பட இருக்கின்றது.

எனவே எத்தடை வரினும் அத்தடை முறியடித்து முஸ்லிம் சமூகம் தலைவரின் மறைவுக்குப் பின் மீண்டும் அநாதைகள் அல்ல என்ற இலக்கில் சமூகத்தின் விடிவை நோக்கிப் புதிய பயணம் புறப்பட இருக்கின்றது இன்ஸா அல்லாஹ், என்றும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.