Header Ads



மஹிந்தவின் குடியுரிமைக்கு ஆப்புவைக்க UNP அமைச்சர்கள் தீவிரம் - மைத்திரியை சந்திக்கிறார்கள்

ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மல்வத்தை பீடத்தில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக, விசாரணை செய்ய ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு, சிறிலங்கா அதிபரைச் சந்தித்துக் கோருவதற்கு ஐதேக அமைச்சர்களின் கூட்டம் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மல்வத்தை பீடத்தில் பிளவை ஏற்படுத்துவதில் தொடர்புடைய அனைவரையும் விசாரணை செய்யும் அதிகாரம் இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும். இந்த ஆணைக்குழு தனது பரிந்துரைகளை சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கும். இந்த விசாரணையில் குற்றவாளியாக காணப்படுவோரின் குடியுரிமை பறிக்கப்படும் என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று நடந்த அமைச்சர்களின் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மல்வத்தை பீடத்தில் பிளவுகளை ஏற்படுத்த மகிந்த ராஜபக்ச முயற்சித்தார் என்ற தகவல் தனக்கு கிடைத்ததாகவும், அதுகுறித்த சாட்சியத்தை தனிப்பட்ட முறையில் சிறப்பு அதிபர் ஆணைக்குழு முன்பாக அளிப்பேன் என்றும் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ரம்பக்கணவில் கடந்த மாதம் 31ஆம் நாள் உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மல்வத்தை பீடத்தை பிளவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுபற்றி அதிபர் ஆணைக்குழு விசாரணை நடத்தும் என்று கூறியிருந்தார்.

மகாசங்கத்தைப் பிளவுபடுத்தும் முயற்சிகளைத் தடுப்பது தமது அரசாங்கத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், மல்வத்தை பீடத்தைப் பிளவுபடுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் மகிந்த ராஜபக்சவின் குடியுரிமையைப் பறிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும குற்றம்சாட்டியுள்ளார்.

“மகிந்த ராஜபக்சவின் குடியுரிமையைப் பறிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சில மட்டங்களில் உலாவும் செய்திகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது ஒரு ஒத்திகை மட்டும் தான்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஒரு உண்மையான பௌத்தர் என்றும், மகாசங்கத்துக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை.

அரசியல் காரணங்களுக்காக உலகின் முதல் பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை பறித்த ஐதேக இப்போது மகிந்த ராஜபக்சவின் குடியுரிமையைப் பறிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.