Header Ads



அவசரம், அவசரம்..!!

-அப்துல் காதிர் பாகவீ -

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே.
அது உன்னை கொன்றுவிடும் .
கண்ணை திறந்து பார் அதை வென்று விடலாம்..

அல்லாஹ் கூறுகிறான்..

''மனிதன் அவசரக் குணத்துடன் படைக்கப்பட்டுள்ளான். (அல்குர்ஆன் 21:37)

இன்றைய நவயுகத்தில் எங்கும், எதிலும் அவசரக்கோலம் காணப்படுகிறது. அதனால் விளையும் பாதிப்புகளுக்கும் குறைவில்லை.

வீதியில் செல்லும் பாதசாரிகளும், வாகனங்களும் குறிப்பிட்ட இலக்கை வேகமாக சென்றடைந்து விட வேண்டுமெனும் நோக்கில் அதிவேகமாகச் செல்ல முற்படும்போது ஆபத்துக்கள் சம்பவிக்கின்றன. இதை உணர்த்துவதற்காக சில ஊர்திகளின் பின் பகுதியில் ''பதறினாள் சிதறிவிடுவாய்'' என்று எழுதப்படுகிறது.

ஒரு காரியத்தை நிர்வகிக்கும் ஒருவர், அக்காரியம் பற்றி அவசரமாக முடிவெடுத்தால் அவர் சந்திக்கும் திறமையற்று விடுகிறார். அதனால் பல தவறுகள் நிகழுகின்றன. பலர் பாதிப்புக்குல்லாக்கப்படுகிறார்கள். இதனால்தான் ''ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு'' என்ற பழமொழி தோன்றியது.

வாழ்க்கைப் பிரச்சனையில் அவசர முடிவெடுக்கும் சிலர் தங்களையே மாய்த்துக் கொள்வதைக் காணுகிறோம். தேர்வில் தோல்வியைத் தழுவிய மாணவன், காதலில் தோல்வியுற்றதாக எண்ணும் காளையர், வறுமை சூழ்ந்ததால் வாழ்வில் தொளியுற்றதாக கருதுவோர் போன்று அப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது நண்பரொருவர் நோயுற்றிருப்பதாக செய்தி அறிந்து, அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். அவர் நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்ணுற்ற அவர்கள், ''நண்பரே! நீங்கள் ஏதும் பிரார்த்தனை புரிந்தீர்களா? யென அவரிடம் கேட்டார்கள். ''யா அல்லாஹ்! மறுமையில் நீ எனக்கு வேதனை தரவிருந்தால் அவற்றை இவ்வுலகத்திலேயே எனக்கு சேர்த்துத் தந்திடுவாயாக!'' என்று பிரார்த்தனை புரிந்ததாக அவர் பதிலளித்தார். அதைச் செவியுற்ற பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''நீங்கள் அவசரப்பட்டு விட்டீர்கள. அதனால்தான் இவ்வாறு கடும் பாதிப்புக்குல்லாகியிருக்கிறீர்கள். நீங்கள், இரட்சகா! எனக்கு இம்மையிலும், மறுமையிலும் நல்லதைத் தந்தருள்வாயாக! என துஆச் செய்திருக்க வேண்டாமா?'' என கூறினார்கள்.

அவசரப் போராட்டம்

அழிவைத் தேடித்தரும் அவசரம் என்பது மனிதனின் எதிரியாகும். அந்த எதிரியை அழிக்க அவன் கடுமையாகப் போராட வேண்டுமென்பதை பெருமானார் [ஸல்] அவர்கள் பின்வருமாறு சுட்டிக் காட்டினார்கள்.

''நிதானம் -இறைவனின்பால் பட்டது. அவசரம் ஷைத்தானின் பால் பட்டது.'' (மிஷ்காத் பக்கம் 429)

அவசரக் குணத்தை மாற்றுதல் என்பது எளிதான காரியம் அல்ல. அது மனிதனின் இயற்கையில் ஊறிப்போன குணம் என்பதை மேற்காணும் திருவசனம் கோடிட்டுக் காட்டுகிறது.

ஆதி மனிதர், ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவன் படைத்தபோது அவர்களின் தலைப் பாகத்திலிருந்து உயிர் கொடுத்தான். அந்த உயிர் இடுப்புப் பகுதியை அடைந்ததும் அவர்கள் எழ முயன்றார்கள். முடியாமல் கீழே விழுந்தார்கள். அதை கண்ணுற்ற இறைவன், ''ஆதம் அவசரப் படுகிறார். அவரின் சந்ததிகளும் அவசரப்படுவர்'' என்று கூறியதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்ற அத்திருவசனத்துக்கு விளக்கம் தந்தார்கள்.

அவசரம் அவசரத்தை போக்கும்

ஒரு காரியத்தை கடைசி நேரத்தில் செய்யத் துவங்குவதாலேயே பெரும்பாலும் அவசரக் கோலம் நிகழ்வுருகிறது. தபால் கட்டு எடுக்கும் நேரத்தில் தபால் எழுதுவது, ரயில், பேருந்துகள் புறப்பட ஓரிரு நிமிடங்களே இருக்கும்போது பிரயாணத்துக்கு ஆயத்தமாவது, வங்கிகள் மூடப்போகும் நேரத்தில் பணம் எடுக்க- போடச் செல்வது, இவை போன்று எத்தனையோ அன்றாடக் காட்சிகளை உதாரணமாகக் கொள்ளலாம்.

அவ்வாறு அவசரநிலை ஏற்படாமலிருக்க போதிய அவகாசம் இருக்கும்போதே காரியங்களைச் செய்யத் துவங்கிடல் வேண்டும். அதற்கு வாய்ப்பாக இஸ்லாம் அதிகாலை சுப்ஹூத் தொழுகையை கடமையாக்கியுள்ளது.

சுப்ஹூ தொழுகையை ஒருவன் நிறைவேற்றி இறை உதவியை வேண்டிப் பெற்றுவிட்டு அன்றாட அலுவல்களை முறையாகச் செய்யத் துவங்குவானேயானால், அவனுக்கு போதிய அவகாசம் கிடைக்கிறது. அதனால் அவன் பகற் பொழுதில் அவசரப்படாமல் நிதானமாகச் செயலாற்றிட முடியும். இதனால்தான் முஹம்மதின் சமுதாயத்தவர்களுக்கு காலைப் பொழுதில் பரக்கத்துள்ளது என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.

காலையில் தொழாமல் எட்டு மணி வரை படுத்துறங்குபவர் அவசர அவசரமாக காரியங்களைச் செய்யத் துவங்குவதால் பல பின்விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படுகிறது. ''சுப்ஹூ தொழுகாத வருக்கு எழுமுறை கேடு விளைகிறது'' என்ற நபிமொழியும், ''சுப்ஹூக்கு பிறகும் தூங்குபவர் வறுமையைச் சந்திப்பார்'' என்ற நாயக வாக்கும் அத்தகைய பின்விளைவுகளை சுட்டுவதாக அமைகின்றன.

அவசரத்தை வெறுத்தொதுக்கும் இஸ்லாம் நன்மையான காரியங்களில் விரைவாகச் செயல்படுவதை வரவேற்கிறது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''மறு உலக காரியங்கள் தவிர மற்ற அனைத்திலும் நிதானம் சிறப்பளிக்கும்'' என்று கூறினார்கள். (மிஷ்காத்- பககம் 430)

''விருந்தினர் வருகை தந்தவுடன் உணவளிப்பது, மரணமடைந்தவரை உடன் அடக்குவது, பருவமடைந்த பெண்ணை உடன் மணம் முடித்துக் கொடுப்பது, கடனை உரிய தவணையில் செலுத்துவது, பாவத்திலிருந்து உடன் மன்னிப்புத் தேடுவது ஆகிய ஐந்து காரியங்களைத் தவிர மற்றவைகளில் அவசரப்படுவது ஷைத்தானின் பால் பட்டது .

இன்று நம் சமுதாயம் ஐந்து காரியங்களை ஒன்றை தவிர (விருந்தாளி) மற்ற நான்கு விஷயங்களிலும் ரொம்ப தமாதமாக தான் செய்கிறார்கள் என்பது எதார்த்த உண்மை! யாரவது இறந்துவிட்டால். உடனே அடக்கம் செய்வது இல்லை, அதில் தாமதம். அவர் வருவார்... இவர் வருவார் என்று தாமதப்படுத்துவது இன்று பழகிவிட்டது . ஒரு பெண் பருவமடைந்து 20 வயது க்கு மேல் ஆகியும் திருமணம் செய்யாமல் காலத்தை கடத்துவது இன்று நூதன வழிமுரையாகிவிட்டது. கடன் கொடுத்தவர் வெயில் நிற்கிறார். கடன் வாங்கியவர் நிழலில் அமர்ந்து ஹாயா இருக்கிறார். இன்னைக்கு வா, நாளைக்கு வா, இப்போ தரேன் அப்போ தரேன் என்று இழுத்தடிப்பது வாடிக்கையாகிவிட்டது. பாவமன்னிப்பு. இப்போ என்ன அதுக்கு அவசரம் எனக்கு என்ன வயது ஆகிவிட்டது! 60 வயது மேல் ஹஜ் செய்து விட்டு அங்கே எல்லா பாவத்துக்கும் மன்னிப்பு கோர வேண்டியதுதான்!

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

source: சத்திய பாதை இஸ்லாம்

No comments

Powered by Blogger.