Header Ads



சாப்பிடும் போது, சாப்பிட மட்டுமே செய்யணும்..!


"மனிதன் உட்பட உலகில் உள்ள அனைத்து உயிர்களும் தங்களுடைய உணவு தேவைக்குத்தான் சிரமம் பார்க்காமல் உழைக்கின்றன. மனிதனை தவிர்த்து, ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள அனைத்து உயிரினங்களும் தத்தம் உணவு நேரங்களில், மற்ற வேலைகளில் ஈடுபடுவது இல்லை. ஆறறிவு உடைய மனிதன்தான் உணவுவேளையின்போது, அதிக சிரத்தையுடன் சாப்பிட்டுக்கொண்டே வேலை செய்கிறான். இதனால், குறைவாக அல்லது அதிகமாக உண்கிறான். விளைவு பருமன், விரைவில் களைப்படைதல் ஏற்படுகின்றன’’என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

"நம்முடைய மூதாதையர் காலத்தில் ‘சாப்பிடுதல்’என்பது முக்கியமான விஷயமாக இருந்தது. காலை, மதியம், இரவு என ஒவ்வொரு சாப்பாட்டு நேரத்திற்கும் சரியான நேரத்தை ஒதுக்கி, முறையாக, நிறைவாக சாப்பிட்டார்கள். உணவு
வேளையில், மென்மையான இசை, வேதம் போன்றவை அந்த இடம் முழுவதும் ஒலிக்கும் வகையில் ஏற்பாடு செய்து இருந்தார்கள். முக்கியமாக, சாப்பிடும்போது எந்த காரணத்துக்காகவும் பேசமாட்டார்கள். எனவே, நோய் எதுவும் இல்லாமல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்ந்தார்கள்.

இன்றைய வாழ்க்கை முறை மாற்றங்கள், வாழ்க்கை சூழ்நிலை போன்றவற்றால், சாப்பாடு முக்கியமான விஷயமாக இல்லாமல் போய்விட்டது. வீட்டில் இருப்பவராக இருந்தால் உணவுவேளையின்போது, டி.வி.யில் தனக்கு பிடித்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டோ, புத்தகம் படித்தவாறோ, பக்கத்தில் உள்ளவர்களிடம் அரட்டை அடித்துக்கொண்டோ சாப்பிடுவதை பழக்கமாக கொண்டுள்ளனர். வேலைக்கு செல்லும் நபராக இருந்தால் நிலைமை இன்னும் மோசம்.

‘நேரத்தை மிச்சப்படுத்துகிறேன்’என்ற பெயரில், கம்ப்யூட்டரில் ஏதாவது டைப் செய்துகொண்டே  சாப்பிடுவார்கள். அல்லது தங்களுக்கு வந்த மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பியவாறு, இடையிடையே தன்னிலை மறந்து சாப்பிடுவார்கள். 
சிலர் போனில் பேசிக் கொண்டே சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வேலை செய்தவாறே  உண்ணும் வழக்கத்தால், வேலையின் மீதுதான் முழு கவனமும் இருக்கும். சாப்பாட்டில் கவனம் கொஞ்சமும் இருக்காது. 

சுய நினைவு இல்லாமல் சாப்பிடும் காரணத்தால், ஒன்று குறைவாக சாப்பிடுவார்கள் அல்லது அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். உணவை நன்றாக மென்று மெதுவாக சாப்பிட வேண்டும். நாம் சாப்பிடும் உணவு வயிற்றுக்குள் போய் நிரம்பியதும், மூளைக்கு சிக்னல் போகும். அப்போது சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். சாப்பிடும் நேரத்தில் அதிக கோபத்தை, சந்தோஷத்தை வெளிப்படுத்த கூடாது. 

ஆனால், பெரும்பாலானோர் சாப்பிடுகின்ற நேரத்தில்தான் அருகில் உள்ளவரிடம், மனைவியிடம் தங்களுடைய கோபத்தை, சந்தோஷத்தை வெளிப்படுத்துகின்றனர். அதைப்போன்று, சாப்பிடும்போது எந்த காரணத்துக்காகவும் பேசக் கூடாது. அப்படிச் செய்வதால், உணவை விழுங்க வாய்ப்பு உள்ளது. இதனால் புரையேறும். டி.வி. பார்த்துக் கொண்டு சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.  

இன்று நிறைய இடங்களில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்யும் நிலை காணப்படுகிறது. கம்ப்யூட்டர் மற்றும் அதை சுற்றியுள்ள இடம் தூசு, அழுக்கு இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். இதனால் வேலை செய்துகொண்டு சாப்பிட நினைப்பவர்கள் நமது பாரம்பரிய உணவான சாம்பார், ரசம், மோர், கூட்டு, ஊறுகாய் என மேஜை மீது வைத்து சாப்பிட முடியாது. டீ, காபி, மோர் போன்றவற்றை நினைத்த நேரத்தில் குடிக்க முடியாது. அதற்குப் பதிலாக, டின்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பிஸ்கெட், மிக்சர், வெஜிடபிள் ரோல் சாப்பிடுகிறோம். இதனால் நம் உணவுமுறையை மாற்றிவிட்டோம். 

அதனால், வாழ்க்கை முறை நோய்களான (LifeStyle Disease) பருமன், ரத்தக்கொதிப்பு, புற்றுநோய் வர ஆரம்பித்துவிட்டன. அதிகமாக சாப்பிட்டால் மன அழுத்தம் உண்டாகும். செய்கிற வேலை, தேவைப்படும் கலோரி அளவுக்கேற்ப  சாப்பிடாவிட்டால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். உடல் பலவீனம் அடையும். ஆகவே, நம் உணவில் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பருப்பு, நெய் என எல்லாம் சரியான அளவில் இருக்கு மாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 

வேலையை சரியான நேரத்தில் ஒழுங்காக செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உட்கார்ந்த இடத்தில் சாப்பிடுவார்கள். அவ்வாறு செய்யாமல் சாப்பிட குறைந்தது 10 நிமிடங்கள் ஒதுக்கி முறையாக சாப்பிட வேண்டும். வேலையை முடிக்க வேண்டும் என்பதற்காக, எதுவும் சாப்பிடாமல் தொடர்ந்து வேலை செய்தால் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும். இதனால் சீக்கிரமாக களைப்பு அடைவார்கள். அதனால், 4 மணிநேரத்துக்கு ஒரு தடவை வேக வைத்த பயறு வகைகள், சாலட் என ஏதாவது சாப்பிடலாம்’’என்கிறார் தாரிணி கிருஷ்ணன்.

No comments

Powered by Blogger.