Header Ads



இலங்கை அரசாங்கம், சாதனை புரிந்துள்ளது - அமெரிக்கா பாராட்டு

காணாமற் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதற்காக பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியுள்ளதன் மூலம் இலங்கை அரசாங்கம் முற்போக்கான சாதனையை நிலைநிறுத்தியிருப்பதாக அமெரிக்கா பாராட்டியுள்ளது.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமானது நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் செயற்பாடுகளுக்கான ஒரு முக்கிய மைல் கல்லென்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

காணாமற் போனவர்கள் தொடர்பான அலுவலகம் இலங்கையின் உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு பெரும் உதவியாக அமையுமென தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் நேற்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளின் முற்போக்கான சாதனைக்குரிய விடயமென்றும் குறிப்பிட்டார்.

நிஷா பிஸ்வால் தனது டுவிட்டரில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை நிறுவுவதற்கென நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தை இலங்கைக்கான அமெரிக்க தூதவர் அத்துல் கேஷாப்பும் நேற்று பாராட்டியுள்ளார்.

அவர் தனது டுவிட்டரில், காணாமல் போனவர்களுக்கான புதிய அலுவலகத்திற்கென நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமானது இலங்கை மக்களுக்கான அர்த்தப்புஷ்டியான தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகளின் முக்கிய மைல் கல்லாகுமெனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் ஆகியவற்றுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் டொம் மலினோஸ்கி இலங்கையில் காணாமல் போனோருக்காக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தை பாராட்டியுள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் இலங்கை வாழ் மக்களுக்கான நீதியை நிலைநாட்டுதல், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் செயற்பாடுகளுக்கான வரலாற்றில் முக்கிய கட்டம் இதுவாகுமெனத் தெரிவித்தார்.

காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை நிறுவுவதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் இதற்கான சட்ட மூலத்தை சமர்ப்பித்தார்.

இந்த அலுவலகமானது நாடு முழுவதிலுமிருந்து காணாமல் போனோரின் விதி மற்றும் அவர்கள் காணாமல் போன சூழ்நிலைகள் குறித்து கண்டறிவதற்காக நிறுவப்படவுள்ளது. 

1 comment:

  1. Well-done SL Govt!
    All Sri Lankans must Thank USA/UN/UK for pushing SL Govt to this level.
    But still more to do, including political solution.

    ReplyDelete

Powered by Blogger.