Header Ads



நல்லாட்சி என்று கூறினாலும், அதனை உணர முடியவில்லை - சுஜீவ அதிரடி

அரசாங்கத்திற்குள் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு சில பிரச்சினைகள் இருப்பதாகவும், சில தவறுகள் நடப்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

செத்சிரிபாய அரச சேவை தேசிய ஊழியர் சங்கத்தின் இணை தொழிற்சங்கமான தேசிய பொது ஊழியர் சங்கத்தின் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், எனக்கும் இப்படியான பிரச்சினைகள் உள்ளன.

ஜனாதிபதியுடன் அண்மையில் நடந்த பேச்சுவார்த்தை ஒன்றின் போது தன்னுடன் பேச்சுவார்த்தையில், இரண்டு பக்கங்களில் அமர்ந்த இரண்டு அமைச்சர்களும் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள்.

கொழும்பு மாவட்டத்தில் இரண்டாவது அதிக விருப்பு வாக்குகளை பெற்ற எனக்கு ராஜாங்க அமைச்சர் பதவியே கிடைத்தது.

எனினும், பொது நோக்கத்திற்காக நாட்டில் நடந்த திருட்டு குடும்ப ஆட்சியை அழிப்பதற்கு சிறிய பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளாது தொடர்ந்தும் செயற்படுவேன்.

தற்போதைய அரசாங்கம் மீது மக்கள் எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தது போல அதிருப்தியும் உள்ளது. நல்லாட்சி என்று கூறினாலும் அந்தளவுக்கு அதனை உணர முடியவில்லை.

இதற்கு முன்னர் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் போது மக்களின் கைகளில் பணம் புரளும் என்பதை பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். எனினும் இம்முறை அப்படி எதுவுமில்லை.

மிகவும் அண்மைய காலத்திலேயே அரசாங்கம் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தது. ஆரம்பத்தில் அதற்கான அடிப்படைகளை உருவாக்க காலம் சென்றது என சுஜீவ சேனசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.