Header Ads



பம்பலப்பிட்டி வர்த்தகர் கடத்தல், உருவாக்கியுள்ள அச்சம்


24-08-2016 வெளியாகியுள்ள தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பு இது

சட்டம் ஒழுங்கு மாத்திரமல்லாமல் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புகளும் கடந்த ஆட்சிக் காலத்தில் சீர்குலைக்கப்பட்டு அவை அனைத்தும் ஒரு குடும்பத்தின் அதிகாரப் பிடிக்குள் கொண்டு வரப்பட்டன. சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்பட்டதோடு ஆடக்கடத்தல், வெள்ளைவான் கலாசாரம், கப்பம் உள்ளிட்ட அனைத்தும் நாட்டில் மலிந்தன.

இதன் விளைவாக அச்சம் பீதி நாடெங்கிலும் பரவியதோடு அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ என்ற பயங்கர நிலையும் உருவாகி இருந்தது. குறிப்பாக உள்நாட்டு யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரும் இதே நிலைமைதான் நீடித்து வந்தது.

இந்த நிலைமை முடிவுக்கு வராதா என நாட்டு மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்கள் ஏக்கப் பெருமூச்சோடு இருந்த சந்தர்ப்பத்தில்தான் நாட்டின் மீது உண்மையாகவே அன்பு கொண்ட முற்போக்கு சக்திகளை ஒன்றிணைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 2015 ஜனவரி மாதம் 08 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை பொதுவேட்பாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய ஜனநாயகக் கட்சியின் கீழ் எதிர்கொண்டது.

அந்த சந்தர்ப்பத்தில் மக்கள் எதனை எதிர்பார்த்திருந்தார்களோ அவற்றையே இம்முற்போக்கு சக்திகளை உள்ளடக்கிய அணியினர் வாக்குறுதிகளாக வழங்கினர். அதாவது ஆட்கடத்தல், வெள்ளை வான் கலாசாரம் என்பவற்றை ஒழித்துக் கட்டி, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுமாறும், அச்சம் பீதியில்லாத ஜனநாயகச் சூழலை உருவாக்குமாறும் மக்கள் கோரினர். அதற்கேற்ப அந்த இருண்ட யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஜனநாயகக் கட்டமைப்புகளை மீளக்கட்டியெழுப்பி நாட்டில் நல்லாட்சியைத் தோற்றுவிப்பதாக இவ்வணியினர் அறிவித்தனர்.

அதற்கேற்ப நாட்டு மக்கள் பொதுவேட்பாளரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியினரின் வாக்குறுதியில் முழுமையாக நம்பிக்கை வைத்து இந்நாட்டின் ஜனாதிபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தெரிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து உதயமான நல்லாட்சியோடு நாட்டில் காணப்பட்ட வெள்ளை வான் கலாசாரம், ஆட்கடத்தல் என்பன முடிவுக்கு வந்ததோடு, சட்டம் ஒழுங்கும் உறுதிப்படுத்தப்பட்டது. அத்தோடு நாட்டில் நிலவிய அச்சம் பீதி நீங்கி சுதந்திர ஜனநாயக் சூழலும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்டமைப்புகளும் மீளவும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நல்லாட்சி அரசாங்கம் சரியாக நிறைவேற்றி இருக்கின்றது.

இதன் பயனாக உள்நாட்டில் மாத்திரமல்லாமல் சர்வதேச மட்டத்திலும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நல்ல மரியாதையும், மதிப்பும் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்தோடு சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தி நாட்டில் ஜனநாயகக் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளும் பெரும் வரவேற்பையும் பெற்று வருகின்றன.

இதனையிட்டு மஹிந்த அணியினர் பெரும் காழ்ப்புணர்வு கொண்டு செயற்படுகின்றனர். அவர்களது காழ்ப்புணர்வுகளை அவர்களது செயற்பாடுகளே வெளிப்படுத்தி நிற்கின்றன. இதன் நிமித்தம் பலவித நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். அந்நடவடிக்கைகள் எதுவும் மக்கள் மத்தியில் எடுபடுவதாக இல்லை. ஏனெனில் அவர்களது நடவடிக்கைகளின் பின்நோக்கங்களை நாட்டு மக்கள் நன்கறிந்துள்ளனர்.

இவ்வாறான சூழலில் தான் பம்பலப்பிட்டி, கொத்தலாவல மாவத்தையில் வசித்து வரும் முஹம்மட் சகீப் சுலைமான் என்ற 29 வயதுடைய கோடீஸ்வர வர்த்தகர் தன் வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக வைத்து கடந்த ஞாயிறன்று இரவு கடத்தப்பட்டுள்ளார். வானொன்றில் வந்த இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ள இவர், கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிப்பதற்காக போராடியுள்ளதை வெளிப்படுத்தும் வகையில் அவரது வீட்டிலிருந்து 150 அடி தூரத்தில் இரத்தக்கறை காணப்பட்டுள்ளது. அத்தோடு அவர் அணிந்திருந்த விலையுயர்ந்த கைக்கடிகாரமும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தகர் என்ன நோக்கத்திற்காகக் கடத்தப்பட்டுள்ளார் என்பது தொடர்பான விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. ஆனால் இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் ஒரு அச்ச நிலையைத் தோற்றுவித்திருக்கின்றது.

அதேநேரம் இக்கடத்தல் சம்பவம் குறித்து பலவித கேள்விகளும் எழுந்துள்ளன. அவற்றில் இக்கடத்தல் மூலம் நல்லாட்சி அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் இருக்கும் கௌரவத்தையும், மரியாதையையும் சீர்குலைத்து அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்யப்பட்டிருக்கின்றதா என்ற சந்தேகம் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. அத்தோடு 2015.01.08 ஆம் திகதியோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட ஆட்கடத்தல், வெள்ளை வான் கலாசாரம் மீண்டும் தலைதூக்குவதற்கான முன் சமிக்ஞையா இது? என்ற ஐயமும் ஏற்பட்டிருக்கின்றது.

என்றாலும் இவ்விடயம் குறித்து விரைவாகச் செயற்பட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது பொலிஸாரின் கடமையாகும். குறிப்பாகக் கடத்தப்பட்டிருப்பவரைப் பாதுகாப்பாக மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன்னர் கொண்டு வர வேண்டிய பொறுப்பும் பொலிஸார் முன்பாக உள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் போன்று எவரும் எந்தக் காரணத்திற்காகவும் சட்டத்தைத் தம் கையில் எடுக்க இடமளிக்கலாகாது. அதுவே மக்களின் இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments

Powered by Blogger.