Header Ads



பொலிஸ்மா அதிபரின் கூற்று, சட்டத்திற்கு புறம்பானது - உச்ச நீதிமன்றம்

பொலிஸ்மா அதிபரின் கூற்று சட்டத்திற்கு புறம்பானது என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் வெளியிட்ட கருத்து ஒன்று தொடர்பில் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித சிறிவர்தனவினால் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக இவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பொலிஸ் மா அதிபரின் கூற்று சட்ட விரோதமானதுடன், அதிகாரமற்றது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட பூஜித் ஜயசுந்தர, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின்போது, கிளிநொச்சி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித சிறிவர்தனவை இடமாற்றம் செய்ய நேரிடும் என கூறியுள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் இந்த கூற்று சட்டவிரோதமானது எனவும், இவ்வாறு தம்மை இடமாற்றம் செய்ய அனுமதிக்க வேண்டாம் எனவும் கோரி பாலித சிறிவர்தன உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் மற்றும் அனில் குணரட்ன ஆகிய நீதியரசர் குழுவினால் அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது, பொலிஸ் மா அதிபரினால் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினாலேயே இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட முடியும் எனவும் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார்.

இந்த அடிப்படை நியதியை புறந்தள்ளி பொலிஸ் மா அதிபர் செயற்பட்டால் அது சட்டவிரோதமானது என நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் வாய்மொழி மூலம் வெளியிட்ட கருத்தின் அடிப்படையில் மனுதாரர் நீதிமன்றின் உதவியை நாட முடியும் என பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.