August 13, 2016

"பேக் ஐடி"க்களின் தொல்லைகளில் இருந்தும் விடுபட..!


-முஹம்மது நியாஸ்-

முகநூலில் சுய அடையாளமில்லாத, அநாமதேயமான, போலிக்கணக்குகளில் வந்து கருத்துக்கூறுவதென்பது வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் வினியோகிக்கப்படுகின்ற மொட்டைத் துண்டுப்பிரசுரத்திற்கு ஒப்பானதே.

இந்த அநாமதேய அறிவித்தல்களால் சமுதாயத்தில் எதுவித மாற்றங்களோ, தாக்கங்களோ ஒருபோதும் ஏற்படுவதில்லை.

தன்னுடைய நிலைப்பாடுகளை, கருத்துக்களை, விமர்சனங்களை பொதுப்பரப்பில் துணிவாகவும் நேரடியாகவும் முன்வைப்பதற்கு பயப்படுகின்ற, வெட்கப்படுகின்ற கோழைகளால் இலகுவாக கண்டுபிடிக்கப்பட்ட குறுக்கு வழியே இந்த போலிக்கணக்குகளும் புனைபெயரில் இருக்கின்ற "பேக் ஐடி"க்களுமாகும்.

மேலும் தம்மிடத்தில் நிரந்தரமாகவே ஒட்டிக்கொண்டிருக்கின்ற மிகப்பாரிய கேவலங்களையும் கயமைத்தனங்களையும் முற்றாக மூடி மறைத்து, தமது எதிராளிகளின் தனிப்பட்ட சிறு தவறுகளைக்கூட இருட்டறைக்குள் ஒளிந்துகொண்டு கீழ்த்தரமாக வார்த்தைகளால் பகிரங்கமாக விமர்சிப்பதற்காகவும் இந்த அடையாளமற்ற கள்ள முகநூல் கணக்குகள் பலராலும் பயன்படுத்தப்படுகின்றன.

மாத்திரமல்லாது, ஒரிஜினல் ஐடிக்களில் நம்மோடு நட்புறவை பேணுவதாக நடித்துக்கொண்டு திரைமறைவில் இருந்து நம்மீது குரோதங்களை கொப்பளிப்பதற்காகவும் சில இரட்டை முக நயவஞ்சகர்களால் இந்த "பேக் ஐடி"க்கள் உருவாக்கப்படுகின்றன.

ஒட்டுமொத்தத்தில் முகநூலில் காணப்படுகின்ற "பேக் ஐடி"க்கள் எதுவுமே நன்மையை நாடி உருவாக்கப்பட்டவைகளல்ல என்பதை உறுதியாகவே கூறமுடியும். மாறாக, நல்ல நட்புக்களிடையே விரிசல்களையும் குரோதங்களையும் ஏற்படுத்துகின்ற அதேநேரம் சமுதாயத்தில் கௌரவமாக வாழ்கின்ற பல நல்ல மனிதர்களுடைய அந்தரங்க வாழ்க்கை பற்றிய பிழையான, பொய்யான புரிதல்களை பொதுப்பரப்பில் ஏற்படுத்த நாடுகின்ற ஷைத்தானிய செயற்திட்டங்களைத்தான் இந்த "பேக் ஐடி"க்கள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றன.

தமக்கு ஆதரவு தந்து தமது எதிரிகளை கீழ்த்தரமாக தூற்றுகின்றன என்ற காரணத்திற்காக இவ்வாறான "பேக் ஐடி"க்களை வாழவைக்கின்ற நமது நவீன சீர்திருத்த(?)வாதிகள் சிலரும் நம்மத்தியில் இல்லாமல் இல்லை.

அந்தவகையில் எந்தவொரு கருத்தையும் விமர்சனத்தையும் நேரடியாகவும் சுய அடையாளத்துடனும் வெளிப்படையாக முன்வைக்கத்திராணியற்று கோழைத்தனமான முறையில் முக்காடும் முகமூடியும் அணிந்துகொண்டு முகநூலில் கோலோச்சுகின்ற இந்த ஷைத்தானிய பிச்சிலங்களின் தொல்லைகளில் இருந்தும் விடுபடுவதற்கு Mark Zugerberg வகுத்த ஒரேவழி, அவர்களை Block செய்து வைப்பதேயாகும்.

தாம் விமர்சிக்க எத்தனிக்கின்ற எதிரிகள் பத்துப்பேர் தொடர்ந்தும் தம்மை Block செய்கிறார்கள் என்பதை உணர ஆரம்பித்தாலே தம் விமர்சனத்தால் பயனில்லையென்பதையும் சமூகம் தன்னை புறக்கணிக்கிறதென்பதையும் நன்குணர்ந்து, நயவஞ்சகம் என்னும் கொடிய நோயினால் சிதிலமடைந்துபோன அந்த ஷைத்தானிய வாரிசுக்கள் காலப்போக்கில் களைப்படைந்து காலாவதியாகிப் போய்விடும்.

எனவே "பேக் ஐடி"க்களின் தொல்லைகளில் இருந்தும் விடுபடுவதற்கான ஒரே வழி Blocking மாத்திரமேயாகும்.

0 கருத்துரைகள்:

Post a Comment