Header Ads



நமது பயணம், எதை நோக்கியது..?


-ஆதிபா ஷாஜஹான்-

‘பின்னர் (இந்த குர்ஆனை விட்டு) நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்? இதுவோ அனைத்துலக மக்களுக்கும் உரிய ஓர் அறிவுரையாகும்’ (அல்குர்ஆன் 61: 26, 27)

திருக்குர்ஆன் நம்மைப் பார்த்து ஒரு வினா எழுப்புகிறது. உங்களுக்கான உன்னத அறிவுரைகளை விட்டு உயர்ந்த வழிகாட்டுதலை விட்டு எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள்? இதற்கு நம்முடைய விடை என்ன?

தேர்வு கூடத்தில் பதில் தெரியாத மாணவர் திருதிருவென விழித்துக் கொண்டிருப்பதைப் போன்றது நம்முடைய நிலை. நாம் எங்கிருந்து வந்தோம். என்ன செய்து கொண்டிருக்கிறோம். செல்லும் பாதை சரியா, தவறா? குர்ஆனின் அறிவுரைகள், போதனைகள் என்ன? வழிகாட்டுதல்கள் என்ன?

‘தெரியாது!’ என்ற பதிலே பலரிடம் வெளிப்படும். தெரியாமல் போனதற்கு காரணம் குர்ஆனைப் பொருள் அறிந்து ஓதும்பழக்கம் நம்மிடம் இல்லாததுதான். அதனுடைய மிக மோசமான விளைவுகளை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

அறியாமை, மூடநம்பிக்கை, மார்க்கத்திற்கு புறம்பான செயல்கள், ஒற்றுமையின்மை முதலியவை முஸ்லீம்களிடம் மிகுந்து காணப்படுகின்றன.

ஒரு காலத்தில் கல்வி, வணிகம், தொழில், அறிவியல், அரசியல், பொருளியல் என எல்லாத் துறைகளிலம் முஸ்லீம்கள் முன்னோடிகளாய் விளங்கியதற்குக் காரணம் குர்ஆனை ஆழ்ந்து அறிந்திருந்தது. குர்ஆனைவிட்டு என்றைக்கு விலகிச் செல்லத் தொடங்கினார்களோ அன்றைக்கே அவர்களின் முன்னேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரண்டு ஹதீஸ்களை ஆராய்ந்தாலே போதும் குர்ஆனை பொருளுணர்ந்து படிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம். திருக்குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள். அதனைப் படியுங்கள், பாதுகாத்து வாருங்கள். ஏனெனில் யார் அதிலிருந்து கல்வி கற்றுக் கொண்டாரோ அதனைப்படித்து அதன்படி செயல்பட்டாரோ அவருடைய எடுத்துக்காட்டு ஓர் உரையைப் போன்றது. அதில் கஸ்தூரி நிரப்பப்பட்டுள்ளது. அதன் நறுமணம் எல்லா இடங்களிலும் பரவுகிறது. ஆனால் திருக்குர்ஆனைக் கற்று அதனை அலட்சியம் செய்யும் இன்னொருவரின் எடுத்துக்காட்டு கஸ்தூரியால் நிரப்பப்பட்ட இத்தகைய உரையின் வாய் மூடப்பட்டது போன்றாகும்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை இவ்வாறு கூறினார்கள், ‘திருக்குர்ஆன் அதனை நீங்கள் வாழ்க்கையில ஓதிப்புரிந்து செயலாற்றியிருந்தால் மறுமை நாளில் உங்களுக்கு சாதகமான சாட்சியாக இருக்கும். உங்களுக்காக (அல்லாஹ்விடம்) பரிந்துறை செய்யும். இல்லையெனில் அது உங்களுக்கு எதிராக முறையிடும். திருக்குர்ஆனின் முறையீட்டை மறுமையில் நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? சிந்திக்க வேண்டாமா?

நம்மில் ஒரு சாரார் திருக்குர்ஆனைப் புரிந்து கொள்வது கடினம் என்றும், ஆலிம்களின் வேலை என்றும் தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக முஸ்லீம்களில் நன்கு படித்தவர்கள்கூட திருக்குர்ஆனை விட்டு விலகிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

திருக்குர்ஆனை ஒரு சிலரால் தான் புரிந்து கொள்ள முடியும் என்ற இவர்களின் கூற்று எப்படி இருக்கிறது எனில் ‘அனைவரும் புரிந்து கொள்ளும்படி அதனை ஆக்கவில்லை’ என்பதாக அமைந்திருக்கிறது. இறை நம்பிக்கையாளர்கள் அனைவர் மீதும் இந்தத் திருமறையைப் பின்பற்ற வேண்டும் என்று இறைவன் கடமையாக்கியுள்ளான்.

நன்றி: முஸ்லீம் முரசு, டிசம்பர், 2009

No comments

Powered by Blogger.