August 24, 2016

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கான, மீள்குடியேற்றப் பதிவு ஏமாற்று வேலையா..?


-முஹம்மத்-

சிலர் கடந்த 20.8.2016 அன்று மேற்கொள்ளப் பட்ட  மீள்குடியேற்றப் பதிவுகளை ஏமாற்று வேலை என்பதாக சொல்கின்றனர். மீள்குடியேற்றத்துக்கான பதிவுகளை யாழ் அரசாங்க அதிகாரிகள் மூன்றாம் தடவையாக மேற்கொள்வதனாலேயே இந்த நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது.  இவ்வாறான  கருத்துக்களை நாம் நிராகரிக்க முடியாது. கடந்த காலங்களில் முஸ்லிம்கள் தம்மை நம்பும் படியாக யாழ்ப்பாண நிர்வாகம் செயல்படவில்லை என்பது கசப்பான உண்மை. 

 யாழ்ப்பாண முஸ்லிம்கள் 2009 மே 19 அன்று யுத்தம் முடிவடைந்த பின்னர் படிப்படியாக மீளக் குடியேறத் தொடங்கினார்கள். இதை விட மீளக்குடியேற ஆர்வமுள்ள பலரும் மீள்குடியேற்ற உதவிகளைக் கோரியும் வீடமைப்பு உதவி , வீடு திருத்துவதற்கான உதவி என்று கேட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.  

ஆனால் கடந்த 2015 வரை தமிழ் அதிகாரிகள் யாருக்கும் வீடமைக்க உதவி செய்யவில்லை என்பது உண்மைதான். மேலும் 2010 முதல் 2011 வரை ஏறக் குறைய 2000 பேர் மீள்குடியேற விண்ணப்பித்திருந்த போதிலும் 2015 ஆம் ஆண்டு ஐந்து வருடங்கள் கழித்து 24 பேருக்கு வீடு கட்ட உதவி வழங்கப் பட்டது. அதுவும் யாழ் சகோதரர்கள் சிலர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் பின்னரேயே வழங்கப் பட்டது.  அந்த தொகை போதாது என்பதால் தொடர்ந்து பல அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தலைவர்கள் அரசாங்க அதிபர் உதவி அரசாங்க அதிபர்  மற்றும் கிராம அதிகாரிகளுடன் பல கூட்டங்கள் நடத்தப் பட்டதன் பிரதிபலனாக மேலும் 68 வீடுகள் கட்டுவதற்கான உதவிகள் வழங்கப் படுகின்றன. மேலும் பலர் மேற்கொண்ட முயற்சியிகளின் பலனாக மொத்தமாக 74 வீடுகளைக் கட்ட அரச அதிகாரிகள் இணங்கியுள்ளனர். 

இன்னும் 1900 நபர்களின்  விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளன. அதை வைத்துக் கொண்டு மீண்டும் பதிவு செய்வது என்பது ஒரு ஏமாற்று வேலையாக இருக்கலாம் என்ற உங்களின் கருத்து நியாயமானதே. 
20.8. 2016 அன்று நடைபெற்ற மீள்பதிவின் போது 1085 விண்ணப்பங்களே மீளச் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. இவ்வாறு 1900 விண்ணப்பதாரிகள் 1085 ஆக   குறைவடந்தமைக்குக் காரணம்  வடமாகாண சபையின் மீதும் தமிழ் அதிகாரிகள் தமிழ் அரசியல் வாதிகள் மீது முஸ்லிம்கள் வைத்திருந்த நம்பிக்கை பாரியளவில் சரிவடைந்துள்ளது அல்லது முற்றாக இழக்கப் பட்டுள்ளது என்பதை காட்டுகின்றது. 

அமைச்சர் ரிஷாத் மன்னாரில் மேற்கொண்டுவருகின்ற மீள்குடியேற்ற பணிகளை தடுத்து நிறுத்த முயலும் தமிழ் அரசியல்வாதிகள் தாமும் எதையும் செய்வதற்கு லாயக்கற்றவர்களாக இருக்கின்றார்கள் என்பது யாழ்ப்பாண முஸ்லிம்கள் விடயத்தில் அவர்கள் மாற்றாந் தாய் மனப்பாண்மையுடன் நடந்து கொள்வதில் இருந்து புரிகின்றது. தமிழர்களாகிய தாம் நேர்மையாக நடப்போம் மீள்குடியேற்ற செயல்குழுவில் தங்களுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கேட்பவர்கள் என்னத்தை செய்து கிழிக்கப் போகின்றனர் என்பது தெரியவில்லை. 2013 ஆம் ஆண்டு வடமாகாண சபை உருவாக்கப் பட்ட பின்னர் யாழ்ப்பாண முஸ்லிம்களை இவர்களில் யார் சென்று பார்வையிட்டனர். எத்தனை வீடுகளைக் கட்டிக் கொடுத்தனர்?

அமைச்சர் ரிஷாத்தை சுயமாக விட்டால் அவர் சரி அரபிகளின் உதவியுடன் வீடுகளைக் கட்டிக் கொடுத்திருப்பார். அதற்கும் விடுகின்றார்கள் இல்லை. தாமும் கட்டிக் கொடுக்கிறார்கள் இல்லை.  2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட மீள்குடியேற்றத்துக்கான பதிவுகளை மீண்டும்  செய்வது வடமாகாண சபையின் இழுத்தடிப்பு போக்கினை காட்டுவதாக மக்கள் முறையிடுகின்றனர். மேலும் ஏற்கனவே சமர்ப்பிக்கப் பட்ட விண்ணப்பங்கள் என்னவாயின என்ற பெரிய கேள்வியும் எழுந்துள்ளது. அவை குப்பைத் தொட்டிக்குள் போடப் பட்டனவா?

மேலும் தற்போதும் சில நிபந்தனைகள் நம்ப முடியாதவையாக உள்ளன. ஏற்கனவே 2010 மற்றும் 2011 இல் இடம்பெயர்ந்து வாழ்ந்த மாவட்டங்களிலிருந்து கிராம அதிகாரிகள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் போன்றோரிடமிருந்து யாழ்ப்பாணத்தில் பதிவுகள் செய்யப் போகின்றோம் என்று கூறி  கடிதங்கள் பெற்று அவை யாழ்ப்பாணத்திலுள்ள கிராம அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப் பட்டன. தற்போது அவ்வாறான கடிதங்கள் மீண்டும் கேட்கப் படுகின்றது. புத்தளத்திலுள்ள கிராம அதிகாரிகள் ஒரே விடயத்துக்கு எத்தனை தடவை கடிதம் வழங்குவார்கள். அவ்வாறாயின் ஏற்கனவே வழங்கப் பட்ட கடிதங்கள் எங்கே? அவற்றை கிராம அதிகாரிகள் தொலைத்து விட்டனரா? இவ்வாறா வடமாகாண சபை செயற்படப் போகின்றது? என்ற பல கேள்விகளை மக்கள் கேட்கின்றனர். 

மனித உரிமை அமைப்புகள் ஏற்கனவே வழங்கப் பட்ட கடிதத்தை மீண்டும் கேட்பது  தவறானது மனித உரிமையை மீறும் செயல் என உறுதிப் படுத்தியுள்ளனர். மேலும் அரசாங்க அதிகாரிகள் ஏற்கனவே வழங்கப் பட்ட கடிதங்களை தொலைத்துவிட்டனர் என்பது நிர்வாக முறைகேட்டைக் காட்டுவதாகவும் சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் விண்ணப்பித்தவர்களுக்கு ஐந்து வருடங்களாக உதவிகள் வழங்காமல் இழுத்தடித்தது வெளியுலகுக்கு குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்லப் படுமிடத்து தமிழர்களின் உரிமைப் போராட்டம் வலுவிழந்துவிடும் என்பதால் தான் மீண்டும் புதிய பதிவுகள் செய்யப் பட்டுள்ளன என்பதே மனித உரிமை அமைப்பின் பிரதி நிதிகளின் கருத்தாகவுள்ளது. 

எது எப்படி இருப்பினும் எதிர்வரும் 31.8.2016 இக்கு முன்னர் உதவிகளை நிபந்தனைகள் இன்றி வழங்கத் தொடங்கினால் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் வருகை தமிழர்களுக்கு சாதகமாக இருக்கும்.  எனவே எதிர் வரும் இரண்டு வாரங்கள் மீள்குடியேற விண்ணப்பித்த யாழ்ப்பாண முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நிகழ்வுகள் நிகழவுள்ள காலப் பகுதியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

அதேவேளை முதன் முறையாக தமிழரசுக் கட்சியைச் சார்ந்த  அதன் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களும் அங்கஜன் போன்றவர்களும் இந்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டதால் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது...

2 கருத்துரைகள்:

மக்கள் கருத்தும் உங்கலுடைய வாதமும் நடந்தவையும் ஒப்பிட்டு பார்க்கும் போது இது ஜ,நா சேயலாலர் பான் கீமுன்னின் வருகையையோட்டி ஒரு கண் துடைப்பு வேலை என்பது தேட்டத் தெளிவாக விளங்குகிறது இப்படியான தில்லுமுல்லு வேளைகளில் செய்து எப்படியாவது முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் தடை எட்படுத்துவது என்பதுதான் நோக்கம்,

இடம்பேயர்தவர்கள் எண்ணிக்கைகளின் தில்லுமுல்லுகள் செய்வதால் தான் இந்த சுணக்கம்

Post a Comment