August 17, 2016

அழகை நேசித்த, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

-ஏ.பி.எம். இத்ரீஸ்-    

அல்குர்ஆனில் அல்லாஹ்வின் ஆயத்துக்கள் அழகின் அத்தாட்சிகளாக மாறியது மதங்களின் வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும்.

குர்ஆன் பிரதியின் அழகியல் அதன் அற்புதத்தின் சவாலின் வெளிப்பாடகும். குர்ஆனிய உள்ளடக்கத்தின் ஆடையும் அதுதான். அதேவேளை அது ஆதாரமாகவும் இருக்கின்றது. வாசகர்களை அது அழகியல் அடிப்படையில்/ ரசனையுள்ளவர்களாக பயிற்றுவிக்கின்றது. பிரக்ஞை பூர்வமாக இப் பிரபஞ்சத்தின் அழகை ரசிக்கவேண்டுமென அது தூண்டுகின்றது.

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அலகிலும் உட்பொதிந்திருக்கும் அழகை ஆராதிக்கத் தூண்டுகின்றது. உலகமாந்தருக்கான அழைப்பை அழகியலே கொண்டு செல்ல வேண்டுமென்பதே அதன் நோக்கமாகும்.

அரபு மொழியில் ஸீனத் என்பது அழகியலின் உச்சத்தைக் குறிக்கும் பதமாகும். ஸீனத், ஜமால் என்ற பதங்கள் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள இவ்வுலகப் பொருட்களின் பயன்பாட்டையும், அழகியலையும் ஒரு சேரக்குறிக்கும் சொற்றொடர்களாகும். (அந்நஹ்ல் 5-8) கால்நடைகள் பயன்பாடும் அழகியல் கொண்டது. அவ்வாறே கோள்களும் நட்சத்திரங்களும் (அல்குர்ஆன் - அஸ்ஸாஃப்ஃபாத் 6,7) (அல்குர்ஆன் - புஸ்ஸிலத் 12) (அல்குர்ஆன் - அல்ஹிஜ்ர் 16,17) (அல்குர்ஆன் - காஃப் 6). அழகின் வெளிப்பாடுகளாகும்.

பூமி முழுவதும் வழிபடும் ஆலயமாகவும் அழகியலுக்கான பொருளாக ஆக்கப்பட்டுள்ளது. எனவே இஸ்லாத்தில் வழிபாடு அழகியலோடு இணைக்கப்பட்டுள்ளது. அழுக்கு நிறைந்த துறவறத்திலிருந்து புதிய அறத்தை அது முன்மொழிகின்றது. (அல்குர்ஆன் - அல்அஹ்ரா 31-32)

நபிகள் அல்குர்ஆனின் இந்த அழகிய கோட்பாட்டை நன்கு புரிந்து வைத்திருந்தது மட்டுமன்றி நடை முறைப்படுத்தியும் காட்டினார். அல்லாஹ் அழகானவன் அவன் அழகையே விரும்பின்றான். (முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா) என்று பிரகடனம் செய்தார்.

அல்குர்ஆன் அழகிய ராகத்தில் ஓதுமாறும் பயிலுமாறும் பணித்தார். உங்கள் குரல்களால் அல்குர்ஆனை அழகு படுத்துங்கள் (நூல்: புகாரி) குதிரை அழகானது அதை அழகியலோடு வைத்திருக்க வேண்டுமென சொன்னார். ‘குதிரை மனிதர்களுக்கு பாதுகாப்பானதும் அழகானதுமாகும். எனவே அவர்கள் அதனை நன்கு பராமரிப்பதோடு அலங்கரிக்கவும் வேண்டும்’. (நூல்: முஸ்லிம்)

அழகுக்குப் பஞ்சம் நிலவும் காலத்தில் அழகைக் கேட்டுப் பிரார்த்தித்தார். ‘இறைவா எமது பூமியில் அதன் அழகை பொழியச்செய்வாயாக!’ மழைதேடி நிறைவேற்றும் தொழுகையில்தான் அவ்வாறு பிரார்த்தித்தார். பயணத்திலும் அழகிய காட்சிகளைக் காணவே விரும்பினார்.

அபுஸைத் அல்அன்ஸாரி என்ற தோழருக்காக பிரார்த்திக்கும் போது ‘இறைவா அவரை அழகு படுத்துவாயாக! அவர் அழகை தொடர்ந்திருக்கச் செய்வாயாக!’ (நூல்: அஹ்மத்)

மனத வாழ்வு முழுவதும் இந்த அழகைக் கடைப்பிடிக்க வேண்டுமென அவர் போதித்தார். உலகுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு வானத்துக்கு முகத்தைக் காட்டும் துறவு நிலையை அவர் ஆதரிக்கவில்லை.

உலகை அவர் அபசகுணமாகப் பார்க்கவில்லை. நற்சகுணமாகவே பார்த்தார். இந்த உடன்பாடான கண்ணோட்டம் அவரிடமிருந்தது. அழகிய பெயர் அவருக்கு பிடித்திருந்தது. இதுவும் அழகியல் ரசனையின் உச்சமாகும். உள்ளடக்கத்தை சுட்டும் ஒன்றுதான் தலைப்பு. பெயரே அழகாக இருந்தால் அந்தப் பெயரைச் சூட்டியவருக்குள் அழகியல் இருக்கும் என்பது நபிகளின் கணிப்பாகும். இப்னு அப்பாஸின் அறிவிப்பொன்று பின்வருமாறு அமைந்துள்ளது. இறைத்தூதர் நற்சகுணமாகவே பார்த்தார். அபசகுணமாகப் பார்க்கவில்லை. அழகிய பெயர் அவருக்குப் பிடித்திருந்தது’ (நூல்: அஹ்மத்)

உணவிலும் கூட அவர் அழகையும் ருசியையுமே விரும்பினார். தேனையும் அல்வாவையும் விரும்பினார் என்று புஹாரி, முஸ்லிம் ஆகியோர் தனது கிரந்தங்களில் பதிவுசெய்துள்ளனர். இனிமையான குளிர்ந்த பானமும் அவருக்கு விருப்பமாக இருந்தது என்று இமாம்களான திர்மிதியும் அஹ்மதும் குறித்துள்ளனர்.

ஆடையிலும் ரோமநாட்டு ஜிப்பாவே விரும்பி அணிந்தார். (நூல்: திர்மிதி) தங்க இழை பின்னப்பட்ட தீபாசு ஜிப்பா அன்பளிப்பாக கிடைத்த போது அதை அணிந்து கொண்டு பள்ளி மின்பரில் ஏறி, எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார் சற்று நேரம் இருந்து விட்டு கீழே இறங்கினார். மக்கள் அதைக் காணவேண்டும் என்றே விரும்பி என்னுடைய ஆடை எப்படி இருக்கின்றது என்று அவர்களிடம் கேட்டார். அதற்கு தோழர்கள் இதை விட அழகான ஆடையை நாம் கண்டதேயில்லை என்று கூறினர். அதற்கு நபிகள் ஸஃத் இப்னு முஆதின் கைக்குட்டை சுவனத்தில் இதைவிட அழகாக இருக்கும் என்றார். நபிகளுக்கு காயம் ஏற்பட்டு அந்தக் காயத்திலிருந்து குருதி வழிந்து கொண்டிருந்த போது ஸஃதினுடை கைக்குட்டையால் தான் துடைக்கப்டபட்து. (ஆதாரம் புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாஈ, இப்னுமாஜா, அஹ்மத்) தன் தோழர்கள் இதுவரை காணாத ஆடையை தான் அணிந்திருந்த போது அதை விடச் சிறந்த ஒன்றை தனது தோழர்களுக்கு நினைவு படுத்துகின்றார்.

வீட்டு உபயோகப் பொருட்கள், தளபாடங்களிலும் அவர் அழகையும் பயன்பாட்டையும் விரும்பினார். நபிகளுக்காக அனஸ் பயன்படுத்திய பாத்திரம் அழகிய வெள்ளிப் பாத்திரம் என்று ஹுமைத் அறிவிக்கின்றார். (நூல்: அஹ்மத்)

உலகில் மூன்று மிகவும் விருப்பத்துக்குரியவை பெண்கள், நறுமணம், தொழுகை என்றார். ஆயிஷா நபிகளுக்கு தலைவாரி விடுவார். ஒரு முறை நபிகள் பள்ளியில் இஃதிகாப் தரித்திருந்த போது ஆயிஷா அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. ஆயிஷா தலைவாரிவிடுவதற்கு தனது தலையை பள்ளிக்குள் இருந்து கொண்டு அருகிலிருந்த வீட்டு வாசலை நோக்கி சாய்த்துக் கொடுத்தார். (நூல்: அஹ்மத்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகியலைப் பற்றி அவருக்குப் பணிவிடை செய்த அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வர்ணிப்பதைப் பாருங்கள்.

நபிகளின் வாசனையை விட சிறந்த அம்பரோ, கஸ்தூரியோ, வேறு நறுமணத்தையோ நான் முகர்ந்ததில்லை. நபிகளின் கையைவிட மிருதுவான தீபாஸையோ, பட்டையோ நான் தொட்டதில்லை. அவர் பிரகாசமான நிறத்தில் இருந்தார். அவரது வியர்வை முத்துப் போன்றிருந்தது என்று கூறுகின்றார். (நூல்: முஸ்லிம், அஹ்மத்)

அழகியலுக்கான இஸ்லாமியக் கோட்பாடு அவரது வாழ்வில் இருக்கின்றது. ஆயிரத்து நானூறு ஆண்டுகள் கடந்தும் வியபூட்டுவதாக உள்ளது. அவரது மனைவியும் நபித் தோழியுமான ஆயிஷா இறக்கைகள் கொண்ட பொம்மை விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். அப்பொம்மைகள் சுலைமானின் குதிரைகள் என்று பெயரும் தைதிருந்தார். நபிகளின் வீட்டுக்கு அயல் வீட்டுக் குழந்தைகள் வந்து விளையாடி விட்டுப் போய்விடுவார்கள். ஆயிஷாவின் தோழிகள் நபிகளைக் கண்டு வெட்கப்பட்டால் ஆயிஷா வோடு விளையாடி விட்டுச் செல்லுமாறு நபிகளே அத்தோழிகளை அழைப்பார்கள்.

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புதிய சிந்தனையோடு அரேபியாவுக்கு வருகின்றார். சிதறிக் கிடந்த இனக்குழுக்களை ஒருங்குபடுத்துகின்றார். அன்றைய அலைதல் வாழ்விலிருந்து வித்தியாசமான நாகரீக வாழ்வை உருவாக்குகின்றார். புதிய காலாசார அம்சங்களை உருவாக்குகின்றார். மனைவியுடன் ஓட்டப் போட்டியில் ஈடுபடுகின்றார். கதவுகளையும் ஜன்னல்களையும் சாத்தி விட்டு அவர் ஓட்டப்போட்டி நடத்தவில்லை. திறந்த வெளியில் பொது மக்களின் முன்னால் போட்டி நடக்கின்றது. இது வாழ்வின் அழகியலை எப்படியெல்லாம் நபிகள் ரசித்து வாழ்ந்துள்ளார் என்பதையே காட்டுகின்றது.

ஒரு முறை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா வெல்கிறார். மறுமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெல்கிறார்கள். முன்னைய தோல்விக்கு இது தான் பதில் என்று சிரித்துக் கொண்டு கூறினார். இதை விடவும் வாழ்வின் ரசிப்பைக் காட்ட முடியுமா? நபிகளின் இந்த வாழ்வை வியப்பூட்டுவதற்காக கூறவில்லை. இது மானிட இயல்பாகும். ‘வாழ்க்கையை ரசிப்பது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அழகியலைத் தேடுவதும் இயல்பான ஒன்றே’ (அல்குர்ஆன் - அல் கஸஸ் 77)

இறைவன் இயற்கையில் எல்லாவற்றையுமே அழகாக வெளிப்படுத்தி தந்துள்ளான். ஆக அவற்றை மனமுவந்து வரவேற்பதுதான் நாம் அவனுக்குச் செய்யும் கைமாறாகும். அது தான் நாம் அந்தக் கர்த்தாவுக்குச் செய்யும் காணிக்கை.

மனிதனின் மானுடத்தை மேலும் மேலும் உயர்த்தும் அத்தனை செயல்பாடுகளும் வழிபாடுதான். அம்பெறிதல், குதிரையைப்பேணல், பெண்ணுடன் கொஞ்சி விளையாடுதல் எல்லாமே நற்செயல், சத்தியம் என்று நபிகள் கூறுகின்றார். பெண்ணின் அழகை, அனுராகத்தை அனுபவிப்பதில் மற்றெல்லா தலைவர்களையும் விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு படி மேலேதான் நிற்கின்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment