Header Ads



ஷக்கீப் விவகாரத்தில், மிலேச்சத்தனமான பதில் (வீடியோ)


தலையில் தாக்கியமையினால் ஏற்பட்ட இரத்தப்போக்கு காரணமாகவே பம்பலப்பிட்டி வர்த்தகர் உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கேகாலை வைத்தியசாலையில் நடைபெற்ற மரண விசாரணைகளின் பின்னர், சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்தக் கொலையுடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஜந்து பேர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி இரவு, கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷக்கீப் சுலைமான் பம்பலப்பிட்டி கொத்தலாவலை வீதியிலுள்ள அவரது வீட்டிற்கு முன்பிருந்து கடத்திச் செல்லப்பட்டார்.

மொஹமட் ஷக்கீப் சுலைமான் தனது தந்தையுடன் இந்தோனேஷியா மற்றும் சீனாவிலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார்.

வர்த்தகர் கடத்திச் செல்லப்பட்ட இடத்தில் அவரது கைக்கடிகாரத்தையும் இரத்தக் கரைகளையும் காண முடிந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

அதன்படி, அந்த இடத்திலேயே அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த பின்புலத்தில் நேற்று முன்தினம் தொலைபேசி ஊடாக அவரின் தந்தையுடன் தொடர்பு கொண்ட ஒருவர் மகனை விடுவிப்பதற்கு இரண்டு கோடி ரூபா கப்பம் கோரியிருந்தார்.

கேகாலை பிரதேசத்தில் இருந்து குறித்த நபர் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பின்னர் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் படி நேற்று பிற்பகல் ஹெம்மாத்தகம ருகுலகம பிரதேசத்தில் வீதியில் இருந்து 5 மீற்றர் தொலைவில் மொஹமட் ஷக்கீப் சுலைமானின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதுடன், அவரின் முகத்தை அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்பட்டது.

மேலாடை அகற்றப்பட்டு டெனிம் மற்றும் உள்ளாடை முழங்கால் வரை கீழிறக்கப்பட்டு காணப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அவரின் உறவினர் ஒருவர் நேற்றிரவு சடலத்தை அடையாளம் கண்டார்.

சடலம் தொடர்பிலான பிரேதப் பரிசோதனையும் இன்று இடம்பெற்றது.

அதற்காக வர்த்தகரின் மனைவி மற்றும் தந்தை ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

நிதி மோசடி தொடர்பில் சில வர்த்தகர்களுக்கு எதிராக மொஹமட் ஷக்கீப் சுலைமான் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு ஆகியவற்றில் முறைப்பாடு செய்திருந்ததாக பொலிஸார் நேற்று தெரிவித்திருந்தனர்.

No comments

Powered by Blogger.