Header Ads



மைத்திரியின் பொறுமைக்கு எல்லையுண்டா..?

கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளும் முழுமையான அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் என பாரபட்சமின்றி அனைத்து மட்டத்திலுள்ளோருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனநாயக ரீதியில் செயற்பட்டு வருகிறார். பொறுமைக்கும் எல்லைகளுண்டு. எல்லைகள் மீறப்படும் போது எடுக்க வேண்டிய முடிவுகளை அவர் எடுப்பார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நிதியமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இறுதியாக இடம்பெற்ற பாத யாத்திரை வரை தொடர்ச்சியாக கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு எதிராக இதுவரை எதுவித நடவடிக்கைகளையும் கட்சி எடுக்கவில்லையே என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டியிடப் போகின்றதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்; இதுவரை கட்சி அதற்கான முடிவினை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

இதுவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் 12 கட்சிகள் கூட்டுச் சேர்ந்துள்ளன. மேலும் பல கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான கட்சியோடு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இ. தொ. கா.வுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதுடன் விரைவில் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது. அதிக தமிழ், முஸ்லிம் கட்சிகள் எம்மோடு இணையவுள்ளன.

இதுபோன்று பல கட்சிகள் எம்மோடு கூட்டுச் சேரவுள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு விரிவான கட்சியாக அமைக்கப்படும் அதன்பின்னரே சின்னம் தொடர்பில் முடிவு எடுக்கப்படும்.

கூட்டு எதிர்க் கட்சியில் உள்ளவர்கள் கட்சியின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். மத்திய குழு அமர்வுக்கு முன்னாள் அமைச்சர் குமார வெல்கம சமூகமளித்திருந்தார். சிலர் சில காரணங்களுக்காக சமூகமளிக்கவில்லை. கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அவர் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

அதேவேளை, எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கென இதுவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு 10,000 மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவர்கள் மிகவும் தகுதியானவர்கள், இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர்.

விருப்பு வாக்கு முறையன்றி தொகுதிவாரி முறையிலேயே உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெறவுள்ளது. இதில் மக்கள் செல்வாக்குள்ளவர்கள் பெற்றிபெற முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. அவருக்கு கோபமே வராதே

    ReplyDelete
  2. kovam varum aanal varatha?

    ReplyDelete

Powered by Blogger.