Header Ads



ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவர் மிர் காசிம் அலிக்கு மரண தண்டனை

வங்கதேச விடுதலைப் போரின்போது போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்காக ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் முக்கியத் தலைவர் மிர் காசிம் அலிக்கு  விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த வங்கதேசம், பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெறுவதற்காக கடந்த 1971-ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் நடைபெற்றது.

அந்தப் போராட்டத்தின்போது மதவாத ஜமாத் கட்சியினர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தினர்.

ஆள் கடத்தல், சட்டவிரோதமாக சிறை வைத்தல், சித்ரவதை, பாலியல் பலாத்காரம், படுகொலை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் அவர்கள் ஈடுபட்டதாக சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வந்தன.

இதுதொடர்பான வழக்கில், சுதந்திரப் போராட்டத்தின்போது ஜமாத் கட்சிக்கு பெருமளவில் நிதியுதவி அளித்து வந்த மிர் காசிம் அலி, போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்காக நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

அதனைத் தொடர்ந்து, அந்த மரண தண்டனையைக் குறைக்கும்படி கோரும் மேல் முறையீட்டு மனு மிர் காசிம் அலியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹா தலைமையிலான அமர்வு, அதனைத் தள்ளுபடி செய்தது.

"நிராகரிக்கப்படுகிறது' என்ற ஒற்றை வார்த்தையுடன் தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹா அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.

கடைசி வாய்ப்பு:

மரண தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மிர் காசிம் அலி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, அவர் தூக்கிலிடப்படுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

எனினும், கடைசி வாய்ப்பாக அவர் அதிபரிடம் கருணை மனு அளிக்கலாம் என்று அரசு வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

அந்த மனுவை அதிபர் ஏற்றுக்கொண்டால் மட்டுமே தூக்குக் கயிற்றிலிருந்து மிர் காசிம் அலி தப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், மிர் காசிம் அதிபரிடம் கருணை மனு அளிக்க முடிவு செய்துள்ளாரா என்பது குறித்து உடனடித் தகவல் இல்லை.

No comments

Powered by Blogger.